யெஸ் வங்கி கடன் மோசடி ...அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துகள் முடக்கம்
மும்பை: யெஸ் வங்கியில் நடைபெற்றதாகக் கூறப்படும் கடன் மோசடி மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் விதமாக, ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்திற்கு (Reliance Anil Ambani Group) சொந்தமான ரூ. 1,120 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL), ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிமிடெட் (RCFL) மற்றும் யெஸ் வங்கி மோசடி ஆகியவற்றுடன் தொடர்புடைய சொத்துகள், நிலையான வைப்பு நிதிகள் (Fixed Deposits), வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் பட்டியலிடப்படாத முதலீடுகள் (Unquoted Investments) ஆகியவை முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும். இந்த நடவடிக்கையின் மூலம், இவ்வழக்கில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனில் அம்பானியின் சொத்துகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 9,000 கோடியாக உயர்ந்துள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணையில், சுமார் ரூ. 10,000 கோடிக்கும் அதிகமான நிதி, செபி (SEBI) அமைப்பின் விதிமுறைகளை மறைமுகமாகக் கடந்து, யெஸ் வங்கி வழியாக அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் இருந்து திரட்டப்பட்ட பொதுப் பணம், கடன் வழங்குதல் மூலம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு, குழும நிறுவனங்களின் கடன்களை “எவர்கிரீனிங்” (evergreening) செய்வதற்காகத் திருப்பிவிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முடக்கப்பட்ட சொத்துகளில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏழு சொத்துகளும், ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு சொத்துகளும், அத்துடன் ரிலையன்ஸ் வேல்யூ சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு குழும நிறுவனங்களின் ஒன்பது சொத்துகளும் அடங்கும். மேலும், பல நிறுவனங்களின் பெயர்களில் உள்ள நிலையான வைப்பு நிதிகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகள் மும்பை, டெல்லி, புனே, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள குடியிருப்பு, வணிக மற்றும் நிலச் சொத்துகளை உள்ளடக்கியவை.