ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!

Su.tha Arivalagan
May 04, 2026,01:18 PM IST

சென்னை: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து வருகிறார். ஆனால், அங்கு 2வது இடத்தை ஒரு சுயேச்சை வேட்பாளர் பெற்றுள்ளார். 3வது இடத்திற்குத் திமுக தள்ளப்பட்டுள்ளது.


சுயேச்சை எப்படி திமுகவை பின்னுக்குத் தள்ள முடிந்தது என்று நினைக்கலாம். விஜய் ஆதரித்தார் என்ற ஒரே காரணத்திற்காக இந்த சுயேச்சை வேட்பாளருக்கு அபரிமிதமான வாக்குகளை மக்கள் போட்டு அசத்தியுள்ளனர் என்பதுதான் சுவாரஸ்யமானது.


தவெக தனித்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ஆரம்பத்தில் நிறுத்தியது. அதில் எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அருண்குமார். இந்த நிலையில் அவரது வேட்பு மனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர்தான் தெரிந்தது அவரை அதிமுக தன் பக்கம் இழுத்து விட்டது என்பது.




இதனால் தவெகவினர் கொதிப்படைந்தனர். ஆனால் விஜய்  படுகூலாக செயல்பட்டு பிரேம்குமார் என்ற சுயேச்சை வேட்பாளரை நமது கட்சியினர் ஆதரிக்க வேண்டும் என்று அறிவித்தார். அவர் முன்பு விஜய் மக்கள் மன்றத்தில் செயல்பட்டவர்தான். சீ்ட் கிடைக்காத காரணத்தால் சுயேச்சையாக களம் இறங்கியிருந்தார்.


அவர் டிவி பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார். அவருக்கு விஜய் ஆதரவு கொடுத்ததால் தற்போது மக்கள் அவருக்கு வாக்குகளைப் போட்டுக் குவித்துள்ளனர். 2வது இடத்தையும் அவர் பெற்றுள்ளார். திமுக 3வது இடத்தைப் பெற்றுள்ளது.


ஒரு வேளை இங்கு விசில் சின்னமே களத்தில் இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். எடப்பாடி பழனிச்சாமிக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கக் கூடும். அந்த வகையில் ஜஸ்ட் மிஸ் ஆகியுள்ளார் எடப்பாடியார் என்றுதான் சொல்ல வேண்டும்.


திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, கொளத்தூர் தொகுதியில் விசில் சின்னம் வீழ்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.