படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
சென்னை: என்னை பொறுத்தவரை பெண்கள் என்றாலே அழகுதான். அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு. படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உலகிலேயே அழகான அணிகலன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நானும் எம்.சி.சி. பழைய மாணவன்தான். சிறுபான்மையினருக்கான திட்டங்களை இல்லை என்று கூறாமல் நிறைவேற்றித் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி. சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம்.
இந்த பாராட்டுவிழா எனக்கு கூடுதல் பொறுப்புணர்வை தருகிறது. படிப்பை கைவிட்ட பலர் புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் கல்லூரிகளில் சேருவது 34% உயர்ந்துள்ளது. புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பல குடும்பங்களில் தலையெழுத்தை திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.
வெற்றிக்கு குறுக்கு வழி இல்லை; மதிப்பெண் ஒன்றுதான் வெற்றிக்கு வழி. பக்குவத்தோடு அடையும் வெற்றிதான் நிலைத்து நிற்கும். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். சும்மா ஒரு டிகிரி படித்தால் போதாது, ஆர்வம் உள்ள துறையில் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க வேண்டும்.
பெண்கள் என்றாலே அழகுதான். ஆனால், அறிவுதான் பெண்களுக்கு உண்மையான அழகு. நாட்டில் வறுமை குறைந்த மாநிலமாக தமிழநாடு வளர்ந்துள்ளது. கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது; கஷ்டப்படாமல் கிடைத்த எதுவும் நிலைக்காது. மற்ற மாநிலங்களோடு அல்லாமல், உலக நாடுகளுடன் தான் தமிழ்நாடு தற்போது போட்டியிட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் 2வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாணவர்கள் வளர்ச்சியில் எப்போதும் நான் உடன் இருப்பேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.