தெகிட்டினால் விருந்தும் கெடும்.. ஔவையின் ஆத்தி சூடி 60 பொன்மொழிகள் (3)
- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்
நேரிசை வெண்பாவில் அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகளை நாம் விளக்கத்துடன் பார்த்து வருகிறோம். நமக்காக இந்த விளக்கத்துடன் கூடிய அவ்வையின் மொழிகளை தொகுத்தளிக்கிறார் கவிக்கடல் அ.ல.ஏகலைவன். இன்று மேலும் இரு பாடல்களைப் பார்க்கலாம்.
தேடாத செல்வம் கெடும்
திரைகடல் ஓடித் திரவியம் தேடு
கரைச்சொல்லாய் வாழ்வியலில் கொண்டு - நரைவரை
வாடாது வாழ்வமைய வேண்டுமட்டும் தேடலின்பம்
தேடாத செல்வம் கெடும்
விளக்கவுரை
வாழ்வின் தேவைக்கு நாடு கடந்தும் செல்வம் சேர்க்க வழியமைத்தல் நன்மை. மூப்புக் காலத்தில் அது பயன்படும். அல்லால் தேடாத அச்செல்வம் கெட்டுவிடும்.
தெகிட்டினால் விருந்து கெடும்
தேவைக்காய்த் தேடல் தெளிந்தறிவின் நற்செயல்
சேவைக்காய்த் தேடலும் சீர்மேன்மை- தீர்வை
அகிலமுதின் இன்பம் அளவொத்தல் அல்லால்
தெகிட்டினால் விருந்து கெடும்
விளக்கவுரை
தேவைக்காக தேடி கொள்ளுதல் நல்ல அறிவின் செயலாகும். அவற்றை சேவைக்கென பயன்படுத்திக் கொள்வதும் ஆகுமானதாகும் என்றாலும் அமிழ்தையும் அளவோடு பயன்படுத்தல் நலம் தரும் அல்லாலல் அதுவே தெகிட்டிய விருந்துபோலக் கெடும்.
(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் அ.ல.ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)