என்ன சத்தம் இந்த நேரம்!
- கவிஞர் க.முருகேஸ்வரி
விழியில் விழி மோதி......... எழுதிய பின் தான் தெரிந்தது எழுத்தின் வலிமை.......
அதைப் படித்து விட்டு அந்தப் படத்தைப் பார்த்ததாக ஒரு சிலரும் ......அந்த இரண்டு பாடல்களையும் மீண்டும் தேடிப் பார்த்து ரசித்ததாக வேறு சிலரும் கூறினார்கள்.
பிறகென்ன தொடர்ந்து எழுதி விட வேண்டியது தான் ஒரு ரசிகையாக மாறி.... தமிழ் சினிமாவின் அற்புதமான படைப்புகளுக்கு நன்றிகளை உதிர்க்கட்டும் என் எழுத்துகள்........
புன்னகை மன்னன்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் அசாதாரணமான படைப்பு... காதல்,இசை,நடனம், நகைச்சுவை ,வலி என அனைத்தும் நயனுறக் கலந்த ஒரு திரைக்கவிதை... அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் அழகோடு மனதைக் கொள்ளை கொண்ட இயல்பான திரைப்படம்.....
ரேகா .....ரேவதி..... இருவரும் புன்னகை மன்னன் ....காதல் இளவரசன் கமல்ஹாசனோடு இணைந்து காதலை அள்ளித் தெளித்த காதல் ஓவியம். நடனத்திலும் இசையிலும் காதல் சொல்லும் காதல் காவியம்...
காதலனோடு சேர முடியாமல் தவிக்கும் ரேகாவின் கண்களும்.....கமலின் புன்னகையும் ஒரு பாதி எனில்...... சிங்களத்து சின்னக்குயில் ரேவதியின் துடுக்கும்... கமலின் வெடுக்கும் மறுபாதி....
சாப்ளின் செல்லப்பா வாக கமலின் மற்றுமொரு கதாபாத்திரம்.நகைச்சுவை மன்னர் சாப்ளினை நம் கண் முன்னே நிறுத்தியிருப்பார்.இது கமலால் மட்டுமே சாத்தியம்.......
ஸ்ரீவித்யா ... மற்றுமோர் அழகான கேரக்டர்....... சிறுவனின் அழுகையை நிறுத்தும் காட்சி ஸ்ரீவித்யாவிற்கே உரியது. இசைஞானியின் இசையில் அனைத்துப் பாடல்களும் அற்புதமாய் அமைந்தன.
குறிப்பாக என்ன சத்தம் இந்த நேரம்..
இந்தப் பாடலுக்காகவே இந்த திரைப்படத்தைப் பார்த்தவர்களும் உண்டு.... எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இந்தப் பாடலுக்குத் தான் முதலிடம்.
மனதை மயக்கும் பாடல். உயிரை உருக்கும் பாடல். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..... தற்கொலை செய்து கொள்வதையும் இவ்வளவு அழகாக ரசித்து ரசித்து படமாக்கிய விதம் சிகரத்திற்கே உரிய சிறப்பு....
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்... சின்னக் குயில் சித்ராவின் குரலில் செதுக்கப்பட்ட பாடல்.
இத்திரைப்படத்தின் முதலும் முடிவும் ஒன்றே..... மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதுவே முடிவாகிப் போகிறது.....
இந்தப் புனிதப் பயணம் இன்னுமொரு சரித்திரம்.....என்ற வலி நிறைந்த வரிகளோடு.
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).