ஈரோடு வந்திருக்கீங்களா- கோணப் புளியங்கா சாப்பிட்டிருக்கீங்களா? - சொல்றேன் கேளுங்!

Su.tha Arivalagan
Oct 23, 2026,02:46 PM IST

- ஈரோடு மாலதி 


பாரதி கண்ட புதுமைப்பெண் நான்! என் சிறுவயது நினைவுகளை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


முதலில் எங்கள் ஊரின் இயற்கை அழகைப் பற்றிச் சொல்ல வேண்டும். எங்கள் ஊரில் நதிகளும், தோட்டங்களும், இயற்கையான மரங்களும் நிறைந்திருக்கும். வாய்க்காலும் கால்வாயும் கரைபுரண்டு ஓடும்; தோட்டத்திற்குள் பாயும் சிறிய கணவாய்களில் எப்பொழுதும் நீர் நிரம்பி வழியும். எங்கள் ஊரைச் சுற்றிலும் காவிரி நதி ஓடுகிறது. ஆற்றைச் சுற்றிலும் தென்னை மரங்கள், பலா மரங்கள், கோணப் புளியங்காய் மரங்கள் (இதற்குக் 'கொடுக்காப்புளி' என்று பெயர், இதில் சத்துக்கள் அதிகம்), பலாச்சுளை மரங்கள் மற்றும் பப்பாளி மரங்கள் நிறைந்துள்ளன.


பள்ளி விடுமுறை நாட்களில், காவிரி ஆற்றின் நடுவில் இருக்கும் சிறிய தீவுப் பகுதிக்குச் செல்வோம். அதை 'குட்டு' என்று அழைப்போம். ஆற்றின் நடுவில் சுற்றிலும் மரங்கள் இருக்க, இரண்டு பக்கமும் தண்ணீர் ஓட, அதற்குள் ஒரு அழகான தோட்டம் போல் அது இருக்கும். சிறுவயதில் அங்கு சென்று ஆடு மேய்ப்போம். நண்பர்களும் தோழிகளும் உறவினர்களும் சேர்ந்து செல்வோம்; அப்பொழுது எங்களுக்கு வயது 10 முதல் 15 வரை இருக்கும். அங்கு சென்று மீன் பிடித்து, நேரடியாகச் சுட்டுச் சாப்பிடுவோம்.




வீட்டிலிருந்து அரிசி, பருப்பு, காரப் பொடிகள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை எடுத்துக்கொண்டு வருவோம். ஆற்றங்கரையில் மண்பானை வைத்து, கல் அடுப்புக் கூட்டி, அரிசியும் பருப்பும் ஒன்றாகச் சேர்த்துச் சமைப்போம். அந்தச் சாதத்திற்குச் சுட்ட மீனைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது தனி சுகம்.


அங்கே 'சிங்கப்பறை' என்று ஒரு பகுதி உள்ளது. எவ்வளவு தண்ணீர் வற்றினாலும் அங்கு 20 அடிக்கு மேல் தண்ணீர் நிற்கும். ஆனாலும் நாங்கள் பயந்ததில்லை; நீச்சல் தெரிந்த ஆண்கள் மட்டும் அங்கு செல்வார்கள். இயற்கை எங்களுக்கு அளித்த வரம் அது.


சிறுவயதில் எங்கள் ஊரில் நாங்கள் பசங்க சுமார் 30 பேர் வரை இருப்போம். மாமா பையன்கள், அக்கா, அண்ணா எல்லோரும் சேர்ந்து செல்வோம். எனக்கு மட்டும் சுமார் 20 மாமா பையன்கள் இருக்கிறார்கள்; அதனால் எங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இருக்கும். யாராவது எங்களை நீச்சல்டிக்கும்போதோ அல்லது அருகில் வந்தோ தொந்தரவு செய்தால், அவர்கள் கம்பீரமான ஆண்மகன்களாக நின்று எங்களைப் பாதுகாப்பார்கள். அதை இன்றும் நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது. அந்த நினைவுகள் எங்கள் வாழ்க்கையின் பொக்கிஷம்!


மஞ்சள் மாநகரம்


எங்கள் ஊரான ஈரோடு, விவசாயத்திற்கும் 'மஞ்சள் மாநகரம்' என்றும் பெயர் பெற்றது. உலக நாடுகள் முழுவதும் தேவைப்படும் மஞ்சள் இங்குதான் சேகரித்து வைக்கப்படுகிறது. கோடிக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் ஒவ்வொரு குடோனிலும் பாதுகாப்பாகப் பதப்படுத்தப்பட்டு, தேவையான நேரத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு மூட்டை தூக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.


மஞ்சள் என்பது மருந்தாகவும், விதையாகவும் பயன்படுவதுடன், மகாலட்சுமியின் அவதாரமாகவும் போற்றப்படுகிறது. அனைத்துத் தெய்வங்களுக்கும் இந்த மஞ்சளைக்கொண்டு அபிஷேகம் செய்யும்போது எங்களுக்குப் பெருமையாக இருக்கும்.


தொழில்களும் வர்த்தகமும்




ஈரோட்டில் வியாபாரமும் நூல் தயாரிப்பும் பல வகைகளில் சிறப்பு பெற்றுள்ளன. சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள், சேலை தயாரிப்பாளர்கள் எனப் பலர் இங்குள்ளனர். சாமி சிலைகள் பொறிக்கப்பட்ட சேலைகள் முதல், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணப்பெண் சேலைகள் வரை ஆயிரம் வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. இதைச் முழுமையாகப் பார்ப்பதற்கு ஒரு மாத காலம் தேவைப்படும் அளவுக்கு இங்கு தயாரிப்பு இடங்கள் உள்ளன.


அதேபோல, கல்யாணக் காலங்களில் பயன்படும் 'ஜமுக்காளம்' எனப்படும் சிகப்பு, பச்சை நிற விரிப்புகள் மங்களகரமானதாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெட்ஷீட்டுகளில் நூறு வகைகள் உள்ளன; சாதாரண ரகம், மீடியம் ரகம் மற்றும் 60 கவுண்ட் எனப்படும் காட்டன் கலந்த உறுதியான ரகங்கள் எனப் பல மாடல்களில் கிடைக்கின்றன. கட்டம் போட்டது, பிளைன், சிறுகட்டம், நெடுகோடு, பூக்கள் மற்றும் பழைய காலச் சின்னங்கள் வரை பல டிசைன்களிலும் பத்துக்கும் மேற்பட்ட வண்ணங்களிலும் கிடைக்கும்.


இதன் முதல் ரகமான சென்னிமலை, பெட்ஷீட் தயாரிப்புக்கும் முருகனுக்கும் சிறப்பு வாய்ந்த தனி இடமாகும்.


புடவை வகைகள் மற்றும் திருப்பூர் பனியன்




எங்கள் ஊரில் அம்மன் சேலைகள் தயாரிப்பும் அதிகம். இவை 250 முதல் 300 ரூபாய் விலையில், வெயில் காலத்திற்கேற்றவாறு அனைத்து மாநிலங்களுக்கும் (சுமார் 65 இடங்களுக்கு) அனுப்பி வைக்கப்படுகின்றன. உயர் ரகமான 'சடன் காட்டன்' புடவைகள் அலுவலகத்திற்குச் செல்லும் படித்த பெண்களின் பேவரைட் ஆகும்.


மேலும், 'பக்தி காட்டன்' மிகவும் பிரபலமானது. வெள்ளைத் துணியில் அங்கங்கே சிறிய முடிச்சுகள் போட்டுவிட்டுச் சாயத்திற்குக் கொடுத்துவிடுவார்கள். சாயம் முடிந்து வந்தவுடன் அந்த முடிச்சுகளை அவிழ்த்தால், ஆங்காங்கே வெள்ளை வெள்ளையான முத்து போன்ற புள்ளிகள் அழகாகத் தெரியும். கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் இந்தப் புடவைகள் அதிகமாக செல்கின்றன. அங்கு இவை மிகவும் வரவேற்கப்படுகின்றன.


சேலம், மேட்டூர், ஜோலார்பேட்டை, ஆயகவுண்டன்பாளையம் போன்ற இடங்களில் கர்நாடக தமிழர்களால் தயாரிக்கப்படும் புடவைகளும், கோவையின் நேர்த்தியான 'கோவை காட்டன்' புடவைகளும் இங்கு கிடைக்கின்றன. நான் இந்த இடங்கள் அனைத்திற்கும் சென்றுள்ளேன்.


அடுத்ததாக, பனியன் வகைகள் மற்றும் உள்ளாடைகள் தயாரிப்பில் திருப்பூர் உலகிலேயே மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கம்பெனிகள் அங்கு செயல்படுகின்றன. நமக்குத் தேவையான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.


பெரியார் நகர் மார்க்கெட் போன்ற பல மார்க்கெட்டுகளும், மொத்த வியாபாரக் கடைகளும் இங்குண்டு. ஒரு மணி நேரத்திற்கு ஒரு லாரி வீதம், பல கோடி மதிப்பிலான நூறு வகையான பொருட்கள் வெளியூர்களுக்குச் செல்கின்றன.


எங்கள் கொங்குத் தமிழ்ச் சமூகத்தின் தொழிலையும், அழகையும், ஆரோக்கியத்தையும் சொல்லிக்கொண்டே போகலாம்!


தொடர்ந்து பேசுவோம்ங்க!


(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)