Tuesday Thoughts: பெண்களோட கம்பீரம் எப்படி இருக்கணும் தெரியுமா?
- ஈரோடு மாலதி
பல நேரங்களில் நம்மில் பெரும்பாலானோர் நம்மைத் திரும்பிப் பார்த்துச் சிந்திப்பதே இல்லை. சரியான சிந்தனையே தெளிவான முடிவெடுக்க வழிவகுக்கும். சில நேரங்களில் நமக்கான வாழ்க்கையை நாம் வாழ்வதே இல்லை. ஒரு பெண்ணின் உண்மையான பெருமை, அவள் வெளிப்புற தோற்றத்திலோ, அணிந்திருக்கும் நகையிலோ, உடையிலோ அல்லது ஒப்பனையிலோ இல்லை; அவள் வெளிப்படுத்தும் நற்குணத்தில்தான் இருக்கிறது.
கம்பீரம் என்றால் என்ன?
'கம்பீரம்' என்றால் உடனே பலர் நினைத்துக் கொள்வது போல் அது 'அதிகாரம்' அல்ல; மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவதும் அல்ல. அது மிகவும் தவறான கருத்து. உண்மையான கம்பீரம் என்பது யாருக்கும் வீணாகத் தலைவணங்காமை, நேர்மை, பண்பு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றோடு இணைந்து வாழ்வதுதான். தன் சுயமரியாதையை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல், நேர்மையான பாதையில் உறுதியாக நிற்பதே ஒரு பெண்ணின் கம்பீரமான வாழ்க்கை.
நவீனச் சூழலில் நம் தனித்துவத்தோடு எப்படி நிமிர்ந்து நிற்பது, சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பல சிக்கலான சூழல்களில் தெளிவான முடிவுகளை எப்படி எடுப்பது என்பதை அந்த கம்பீரமே நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
சாணக்கிய நீதியும் ஆளுமையும்
நம் வாழ்வில் சந்திக்கும் சவால்கள் ஆயிரமாக இருக்கலாம்; அவற்றிலிருந்து தெளிவான சிந்தனையோடு எப்படி வெளிவர வேண்டும், சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதில்தான் நம் ஆளுமை அடங்கியிருக்கிறது.
ஒரு பெண் தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்து வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத பேச்சுக்கள், நம்மை மதிக்காத மனிதர்கள், நம் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடும் சூழல்கள் வரத்தான் செய்யும். இவை அனைத்தையும் புன்னகையோடும் அமைதியோடும் கடந்து வரத் தெரிந்திருக்க வேண்டும்.
முதலில் பேசுபவர்களின் உரையை முழுமையாகக் கேட்க வேண்டும். உங்கள் சிந்தனையும் அணுகுமுறையும் புத்துணர்ச்சியோடும் நேர்மையான வழியிலும் இருக்க வேண்டும்.
உறவாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும், மற்ற மனிதர்களாக இருந்தாலும், உங்கள் சுயமரியாதையை அடகு வைக்கும் சூழல் வந்தால் அந்த உறவைத் துண்டித்துக் கொள்வதே நல்லது. அது கணவனாகவோ, மகனாகவோ, தங்கையாகவோ அல்லது நண்பர்களாகவோ கூட இருக்கலாம். இதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே வாழ்க்கையில் சாதனை படைக்க முடியும்.
யாருக்கு என்ன கொடுக்க வேண்டும், யாரிடம் என்ன பேச வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தேவையில்லாத நபர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
உங்களின் எதிர்காலத் திட்டங்களை எல்லோரிடமும் பகிர்வது ஆபத்தை உண்டாக்கும். உங்கள் பலவீனத்தை வைத்துதான் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவார்கள்.
விமர்சனங்களைக் கடக்கும் பக்குவம்
ஒரு கம்பீரமான பெண், "மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ" என்று கவலைப்பட வேண்டியதில்லை; நீங்கள் தெளிவாக இருந்தால் போதும். யார் உண்மையான நண்பர் என்பதை அவர்களின் பேச்சிலும் கண்களிலும் கண்டறிய முடியும்.
நீங்கள் என்ன செய்தாலும் விமர்சிக்கவும், பின்னால் புறம்பேசவும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். யாரையும் முழுமையாக நம்பிவிடாதீர்கள்; தேவையில்லாத விமர்சனங்கள் உங்களைக் காயப்படுத்த அனுமதிக்காதீர்கள். உலகில் பல வகையான மனிதர்கள் இருப்பார்கள். நல்ல மனிதர்களோடு பழகும் போதுதான் தவறான மனிதர்களின் எண்ணங்களை உங்களால் அடையாளம் காண முடியும்.
புராண கதைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சாதனையாளர்கள் மற்றும் புனிதர்களின் வரலாறுகளைப் படிக்க வேண்டும் அல்லது கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்கள் கொண்ட நபர்களே உங்களுக்கு சரியான உறவாக இருக்க முடியும்.
இயற்கையிலும் மனிதர்களிலும் இரண்டு பக்கங்கள் உண்டு. கடலையில் இருந்து கிடைக்கும் உணவை ஆவியில் வேகவைத்துச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது; அதையே அளவுக்கு அதிகமாக வறுத்துச் சாப்பிட்டால் அதுவே உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரே பொருள்தான், ஆனால் பயன் வேறுபடுகிறது.
அதேபோல்தான் மனிதர்களுக்குள்ளும் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் கலந்திருக்கும். நாம் நல்ல குணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அர்த்தமற்றவற்றை விட்டுவிட வேண்டும். பெண்கள் வேலைக்குச் செல்லும் இடத்திலோ, கல்லூரியிலோ, குடும்பத்திலோ எல்லா இடங்களிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். நாம் நல்லவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
எப்போதும் மனதை ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தின் உச்சகட்டத்தில் எடுக்கும் எந்தவொரு முடிவும் தவறாகவே முடியும்.
இதற்கு ஒரு அழகான உதாரணத்தைக் கூறலாம்:
ஒரு முனிவரும் அவருடைய சீடனும் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். சீடன் குருவிடம், "ஐயா, என்னால் தெளிவான மனநிலையோடு எந்தச் செயலையும் செய்ய முடியவில்லை. நான் என்ன செய்வது?" என்று கேட்டான்.
உடனே குரு, அவனிடம் ஒரு பானையைக் கொடுத்து, அருகில் உள்ள குளத்திலிருந்து குடிநீர் எடுத்து வருமாறு கூறினார். சீடன் குளத்திற்குச் சென்றபோது, அங்கே நீர் கலங்கலாக இருந்தது. அதை அப்படியே எடுத்து வந்து குருவிடம் கொடுத்தான். குரு அதை வாங்கி வைத்துவிட்டு, "சிறிது நேரம் கழித்து மீண்டும் சென்று எடுத்து வா" என்றார்.
சீடன் அரை மணி நேரம் கழித்துச் சென்று பார்த்தான்; நீர் சற்று தெளிந்திருந்தது. மீண்டும் வந்து குருவிடம் கூறினான். குரு, "இன்னும் ஐந்து நிமிடங்கள் கழித்துச் செல்" என்றார். சீடன் மீண்டும் சென்று பார்த்தபோது, குளத்து நீர் மிகவும் தெளிவாக, கண்ணாடியைப் போல இருந்தது. அந்த நீரை முகர்ந்து எடுத்து வந்தான்; அது மிகவும் சுவையாகவும் இருந்தது.
அப்போது குரு புன்னகையுடன் கூறினார்:
"கோபத்திலும் பதற்றத்திலும் நீ எடுக்கும் முடிவுகள் அனைத்தும் முதலில் நீ பார்த்த கலங்கலான தண்ணீரைப் போன்றவை. அதில் தெளிவு இருக்காது. ஆனால், அமைதியாகக் காத்திருந்து யோசித்து எடுக்கும் முடிவு, நீ கடைசியாக எடுத்து வந்த தெளிவான நீரைப் போன்றது."
சீடன் தெளிந்த மனநிலையோடு குருவை வணங்கிச் சென்றான்.
வாழ்க்கையை உணராதவர்கள் உணர்ந்து கொண்டு தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள். அழுவதால் எந்தப் பயனும் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலிலும் கடவுள் நமக்கான பாதையைக் காட்டுவார்.
அன்போடும், பண்போடும், மகிழ்ச்சியோடும் சிந்திப்போம்; சிறப்பாக வாழ்வோம்!
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)