சங்குப் பூவின் மகிமை தெரியுமா உங்களுக்கு.. தாய்லாந்தில் வேற லெவல் மகிமை இது!
- மாலதி ஈரோடு
ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை சங்குப்பூவின் மகிமை அதிகளவில் அறியப்படவில்லை; இதன் பலன்களை உணர்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
சங்குப்பூ சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூவாகும். மேலும், இது மகாவிஷ்ணுவின் அருள் பெற்ற பூவாகவும் கருதப்படுகிறது. சங்குப்பூவிற்கு, அபராஜிதா, நீலி போன்ற பெயர்களும் உண்டு. தாய்லாந்தில் இது 'அஞ்சான் மலர்' (Anchan) என அழைக்கப்படுகிறது. வெளியிலோ அல்லது நல்ல காரியங்களுக்கோ செல்லும்போது இந்தப் பூவைப் பார்த்துவிட்டுச் சென்றால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கை. இதை மகாலட்சுமியின் அம்சமாகவும், அதிசயப் பூவாகவும் கருதுகின்றனர்.
வீட்டின் முன் சங்குப்பூச் செடியை வளர்த்து வந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, இச்செடி வளர வளர வீட்டில் செழிப்பும் மகிழ்ச்சியும் கூடும்; எதிர்மறை சக்திகள் நீங்கி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
சங்குப்பூ நீலம், வெள்ளை, இளம் சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கும். இவற்றில் நீல நிறச் சங்குப்பூ அதிக மருத்துவக் குணம் கொண்டது.
மாதவிடாய்க் காலப் பிரச்சினைகள், கர்ப்பப்பை சார்ந்த கோளாறுகள் மற்றும் அடைப்புகளைச் சீராக்கி பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சங்குப்பூத் தேநீர் குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும், ஞாபக மறதி நீங்கும். பதற்றம், மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இரத்த உற்பத்தியை ஊக்குவிக்கிறது. சங்குப்பூத் தேநீரில் சிறிது இஞ்சியும், எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கும்போது, அதன் நிறம் நீலத்திலிருந்து ஊதா/இளம் சிவப்பு நிறமாக மாறும். இது அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல், கண் பார்வைத் திறனை மேம்படுத்துகிறது, மூட்டு வலியைப் போக்குகிறது.
ஒரு பாத்திரத்தில் 1 முதல் 1.5 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 5 முதல் 10 சங்குப்பூக்களைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நீல நிறமாக மாறியதும் வடிகட்டித் தேநீராகக் குடிக்கலாம். இதைத் தொடர்ந்து குடித்து வர நல்ல மாற்றங்களைக் காணலாம்.
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)