நசியனூர் மற்றும் சிந்தன் குட்டை.. சிறப்பான வரலாறும் முக்கியத்துவமும்!

Su.tha Arivalagan
Nov 10, 2026,03:49 PM IST

- ஈரோடு மாலதி


ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பேரூராட்சிகளுள் ஒன்றான நசியனூரின் முக்கிய நீர்ப்பாசன மற்றும் நீர்நிலைப் பகுதியாக சிந்தன் குட்டை விளங்குகின்றது.


கொங்கு மண்டலத்தின் தொன்மையான வரலாற்றைக் கொண்ட நசியனூர், பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய வணிகக் குறிப்புகளில் 'நாதியனுரா' (Nadiyanura) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் இப்பகுதி 'நசியனூர்' என்றே அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஸ்ரீ மூவேந்தீஸ்வரர் திருக்கோவில் மற்றும் அப்பத்தாள் திருக்கோவில் ஆகியவை பல நூறு ஆண்டுகள் பழமையானவை. மூவேந்தர்களால் வழிபடப்பட்டதாக நம்பப்படும் இக்கோவில்கள் இப்பகுதியின் தொன்மைக்கு முக்கிய சான்றுகளாகும்.


சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தன் குட்டை அமைந்திருக்கும் இடம் விவசாய நிலமாக இருந்தது. பின்னர், நெசவாளர்களுக்காக 'சொசைட்டி' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த இடம் செங்குந்த நெசவாளர் காலனியாக மாற்றப்பட்டது. அங்கு குடியேறிய நெசவாளர்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே இக்குளம் வெட்டப்பட்டது.




மழைக்காலத்தில் நிரம்பும் இக்குளத்து நீரை அடிப்படையாகக் கொண்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பஞ்சாயத்து சார்பில் இக்குளத்தில் மீன்பிடி ஏலம் விடப்பட்டு, பராமரிக்கப்படுவதால் குளத்து நீர் எப்போதும் சுத்தமாக உள்ளது.


பழங்காலத்தில் கொங்கு மண்டலத்தை ஆண்ட அரசர்கள் ஆங்காங்கே குட்டைகளையும் குளங்களையும் வெட்டி மழைநீரைச் சேமித்தது போல, சிந்தன் குட்டை மற்றும் கமலான் குட்டை போன்ற நீர்நிலைகள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாயத் தேவைகளுக்கும் பெரிதும் உதவுகின்றன.


'ஒளிரும் ஈரோடு' அமைப்பினரால் இக்குளம் தூர்வாரப்பட்டுச் சீரமைக்கப்பட்டதன் விளைவாக, தற்போது இப்பகுதியில் எந்தவிதக் குடிநீர் பஞ்சமும் இன்றி நீர் வளம் பெருகியுள்ளது.


அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்காகப் போராடுவதை விட, தமிழகத்தின் காலியான மற்றும் பள்ளமான இடங்களில் பழங்கால முறையைப் பின்பற்றி பெரிய குளங்களை வெட்டி மழைநீரைத் தேக்கினாலே நீர் பஞ்சத்தைப் போக்க முடியும். இத்தகைய நீர்நிலைத் தூர்வாரும் மற்றும் பராமரிப்புப் பணிகள் மாநிலம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.


(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)