Fast food.. அனைவரையும் கவரும் துரித உணவுகள்.. எப்படியெல்லாம் உடல் நலனைப் பாதிக்கும்?

Su.tha Arivalagan
Dec 24, 2025,09:49 AM IST

இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் துரித உணவுகள் மனிதர்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. சுவை, வசதி மற்றும் உடனடி கிடைப்புத் தன்மை காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரித உணவுகள் கவர்ந்துள்ளன. ஆனால் அவை நம் உடல் நலத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.


குறைந்த நேரத்தில் தயாரித்து உடனே பரிமாறப்படும் உணவுகளையே துரித உணவுகள் என்று அழைக்கிறோம். பீட்சா, பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், நூடுல்ஸ், சாண்ட்விச் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். இவ்வுணவுகளில் எண்ணெய், உப்பு, சர்க்கரை மற்றும் செயற்கை சுவை கூட்டிகள் அதிகமாக உள்ளன.


துரித உணவுகளின் ஈர்ப்பு




துரித உணவுகள் சுவையாகவும், கண்கவர் தோற்றத்துடனும் இருப்பதால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை எளிதில் கவர்கின்றன. வேலைபளு அதிகமான வாழ்க்கையில் சமையலுக்கான நேரம் இல்லாதவர்களுக்கு இது ஒரு எளிய தீர்வாகத் தோன்றுகிறது. விளம்பரங்களும் துரித உணவுகளின் பிரபலத்தைக் கூட்டுகின்றன.


துரித உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பல உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வுணவுகளில் சத்துக்கள் குறைவாகவும், கலோரிகள் அதிகமாகவும் இருப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.


குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்கம்


துரித உணவுகளுக்கு அடிமையாகும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்க்க ஆரம்பிக்கின்றனர். இது அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கவனச்சிதறல், சோர்வு போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன.


வீட்டில் தயாரிக்கப்படும் சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழுத்தானிய உணவுகள் ஆகியவை துரித உணவுகளுக்கு சிறந்த மாற்றுகளாகும். துரித உணவுகளை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும், அவற்றின் அளவைக் குறைத்து அரிதாக உட்கொள்வது நல்லது.


துரித உணவுகள் உடனடி வசதியை தரினும், நீண்டகால உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்காக துரித உணவுகளை கட்டுப்படுத்தி, சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த வழியாகும்.


(ச. சுமதி, MA.,BEd., ஆங்கில பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீ KGS மேல்நிலைப் பள்ளி , ஆடுதுறை, திருவிடைமருதூர் வட்டம், 

தஞ்சாவூர் மாவட்டம்)