அமைதியாய் இருக்கும் புயல்!

Su.tha Arivalagan
Aug 11, 2026,02:49 PM IST

-  எழுத்து மின்னல் பாத்திமா அப்றா


அமைதியாய் இருக்கும் புயல்  

எப்போதும் அமைதியாய் இருந்து விடாது  

ஒருநாள் கர்ஜிக்கும்  

வானத்தையே புரட்டிப் போடும்  


அதுபோலத்தான்  

எழுதாமல் இருந்த என் கை  

எப்போதும் எழுதாமல் இருந்து விடாது  

ஒருநாள் மையைத் தொடும்  

காலத்தையே எழுதி வைக்கும்  


என் மௌனம் கோழைத்தனம் அல்ல  

என் வார்தைகளைச் சேகரிக்கும் காலம்  

என் அமைதி தோல்வி அல்ல  

என் கவிதைக்கான கர்ப காலம்  




இத்தனை நாள் நான் பார்த்தேன்  

கேட்டேன்  

அழுதேன்  

சிரித்தேன்  

எல்லாவற்றையும் நெஞ்சில் சேமித்தேன்  


இனி நான் எழுதுவேன்  

நான் விழுந்த கதையை  

நான் எழுந்த கதையை  

நான் நேசித்த கதையை  

நான் தோற்று வென்ற கதையை  


அமைதியாய் இருக்கும் புயல் போல  

என் பேனாவும் ஒருநாள் வெடிக்கும்  

உலகம் படிக்கும்  

உலகம் உணரும்  


ஏனெனில்...  

எழுதாமல் இருந்த என் கை  

எப்போதும் எழுதாமல் இருந்து விடாது...!