பிப்ரவரி 28ம் தேதி என்ன நாள் தெரியுமா.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Su.tha Arivalagan
Feb 23, 2026,01:42 PM IST

- தி. மீரா


மார்ச் மாதம் வரப் போகிறது.. மார்ச் மாதம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அருமையான மகளிர் தினம்தான். ஆனால் அதற்கு முன்பு பிப்ரவரி 28ம் தேதி ஒரு முக்கியமான ஒரு நாள் வருகிறது. அதுதான் தேசிய அறிவியல் தினம் வருகிறது.


National Science Day .. அறிவியல் என்பது மனித வாழ்க்கையின் முதுகெலும்பாக விளங்குகிறது. நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மின்சாரம், கைப்பேசி, இணையம், மருத்துவ உபகரணங்கள், போக்குவரத்து வசதிகள் ஆகிய அனைத்தும் அறிவியலின் அருள்பாலன்களே. அறிவியலின் மகத்துவத்தை உணர்த்தவும், இளைஞர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.


ஏன் பிப்ரவரி 28?




இந்த நாள் இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் சி.வி. ராமன் அவர்கள் 1928ஆம் ஆண்டு “ராமன் விளைவு” (Raman Effect) எனும் முக்கியமான கண்டுபிடிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்திய தினமாகும். இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1930ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்தச் சாதனையை நினைவுகூரும் வகையில் 1986ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.


ராமன் விளைவு – ஒரு சுருக்கம்


ஒளி ஒரு பொருளின் வழியாகச் செல்லும் போது அதன் அலைநீளத்தில் ஏற்படும் மாற்றமே ராமன் விளைவு எனப்படுகிறது. இது பொருள்களின் உட்பகுதி அமைப்பை அறிய உதவுகிறது. இன்றைய வேதியியல், இயற்பியல், மருத்துவம் போன்ற துறைகளில் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமான பங்காற்றுகிறது.


அறிவியலின் அவசியம்


அறிவியல் மனித வாழ்க்கையை எளிமையாக்கி, முன்னேற்றப் பாதையில் நடத்துகிறது. மருத்துவத் துறையில் புதிய  சிகிச்சை முறைகள், விவசாயத்தில் உயர் விளைச்சல் விதைகள், தகவல் தொடர்பில் வேகமான இணைய வசதி, 

விண்வெளி ஆராய்ச்சியில் செயற்கைக்கோள்கள், இவை அனைத்தும் அறிவியலின் வளர்ச்சியால் சாத்தியமானவை.


தேசிய அறிவியல் தினத்தின் நோக்கம்


மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்த்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை விளக்குதல், புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்,சமூக முன்னேற்றத்தில் அறிவியலின் பங்களிப்பை எடுத்துரைத்தல், இந்த நாளில் பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்களில் அறிவியல் கண்காட்சிகள், கருத்தரங்குகள், கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்களின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு பெறுகின்றனர்.


இன்றைய காலத்தில் அறிவியல்


நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு (AI), நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இத்தகைய வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் உயர்த்துகிறது. இளைஞர்கள் அறிவியலை நேசித்து ஆராய்ச்சி மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.


தேசிய அறிவியல் தினம் என்பது ஒரு நினைவு நாள் மட்டுமல்ல; அது அறிவியல் சிந்தனையை வளர்க்கும் விழிப்புணர்வு நாள் ஆகும். சர் சி.வி. ராமன் போன்ற விஞ்ஞானிகளின் சாதனைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன. அறிவியலை அறிந்து, பயன்படுத்தி, மனிதகுல நலனுக்காகச் செயல்படுவதே இந்நாளின் உண்மையான நோக்கமாகும்.


அறிவியல் வளர்ந்தால் நாடு வளரும் என்பதனை உணர்ந்து, அறிவியல் பாதையில் முன்னேறுவோம்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)