அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

Su.tha Arivalagan
Dec 18, 2025,09:17 PM IST

ஈரோடு : ஈரோட்டில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் மட்டுமல்ல, தவெக கட்சி நிர்வாகிகளும் வழக்கத்தை விட கூடுதலாக, மிக கடுமையாகவே திமுக.,வையும் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்து பேசினர்.


தவெக மட்டுமல்ல மற்ற எதிர்க்கட்சிகளும் திமுக.,வை விமர்சிப்பதும், கேள்வி கேட்பதும் ஒன்றும் புதியது கிடையாது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கரூர் சம்பவத்திற்கு பிறகு கிட்டதட்ட 2 மாத இடைவெளிக்கு பிறகு ஒரு அதிரடியான அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் இன்று விஜய் பேசி உள்ளார். விஜய்யின் இன்றைய பேச்சில் திமுக மீதான அடுக்கடுக்கான விமர்சனம், குற்றச்சாட்டு என்பதை தாண்டி, மக்கள் பிரச்சனை சார்ந்த கேள்வி அதிகம் இருந்ததை கவனிக்க முடிந்தது. அதே போல் தவெக.,வின் அருண்ராஜ் பேசுகையில், சீமா அகர்வாலை டிஜிபி.,யாக நியமிக்காமல் தமிழக அரசு வைத்திருப்பதை நேரடியாக குறிப்பிட்டு பேசினார். 




விஜய்யின் இன்றைய பேச்சில் மிக முக்கியமாக கவனம் ஈர்த்தது, களத்திலேயே இல்லாதவர்கள் பற்றி நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக பேசியது, பாஜக.,வை அதிகம் விமர்சிக்காதது ஆகியவை இருந்தன. அதே போல் அதிமுக.,வை பற்றியோ, அக்கட்சியின் பெயரையோ கூட விஜய் குறிப்பிடவே இல்லை. ஆனால் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பேசிய பேச்சுக்களில் இன்று முதல் முறையாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டு பேசினார். வழக்கமாக எம்ஜிஆர்., பற்றி மட்டும் தான் விஜய் பேசுவார். ஆனால் இன்று ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டு, அதுவும் மேடம் ஜெயலலிதா என குறிப்பிட்டு பேசினார்.


ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டு விஜய் பேசியதற்கு காரணம் செங்கோட்டையனின் தவெக வருகையால், அவரது மனம் மகிழ வேண்டும் என்பதற்காகவா அல்லது கொங்கு மண்டலம் அதிமுக மற்றும் பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள பகுதி என்பதாலேயா என்பது தான் தற்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக.,வினரின் ஓட்டுக்களையும் கவரும் திட்டத்தில் தவெக உள்ளதா என்றும் தெரியவில்லை. காரணம், இந்த முறை கொங்கு மண்டல வாக்குகளை தான் திமுக மிகவும் முக்கியமானதாக கருதுகிறது. அதனால் கூட ஈரோட்டில் திமுக மீதான விமர்சனத்தை விஜய் கடுமையாக்கி இருக்க வாய்ப்பு உள்ளது. 


எது எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவின் பெயரை முதல் முறையாக விஜய் குறிப்பிட்டு பேசியது யாருமே எதிர்பாராத ஒரு டுவிஸ்ட் தான். அதிமுக பற்றி பேசாததால் அவர்களுடனான கூட்டணி கதவை விஜய் இன்னும் திறந்து வைத்துள்ளாரா என்ற கேள்வியையும் தற்போது எழுப்பி உள்ளது. ஆனால் அவர்கள் பாஜக.,வை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அதிமுக-தவெக கூட்டணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது. விஜய்யின் இந்த பேச்சு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.