Friday motivation.. வெற்றியின் ரகசியம் 'சுய விழிப்புணர்வு'!

Su.tha Arivalagan
Feb 27, 2026,10:22 AM IST

- ஜெனிட்டா ரீனா


வாழ்க்கைப் பயணம் என்பது வெறும் காலமாற்றம் மட்டுமல்ல, அது நம்மை நாமே செதுக்கிக் கொள்ளும் ஒரு கலை. உங்கள் திறமையைக் கண்டறியக் கற்றுக்கொள்ளுங்கள் என்பார்கள். ஒரு மனிதன் வெற்றியை அடைய மிக முக்கியமான திறவுகோலாக இருப்பது சுய விழிப்புணர்வு ஆகும்.


உலக சுகாதார நிறுவனம்  ஒரு மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கும், சவால்களை எதிர்கொள்வதற்கும் தேவையான 10 முக்கிய வாழ்க்கைத்திறன் உத்திகளைப் பட்டியலிட்டுள்ளது. அவை என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.


ஒவ்வொரு தனிமனிதனும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அடிப்படைத் திறன்கள் இதோ:




திறமையான தகவல் தொடர்பு - உங்கள் கருத்துக்களையும் உணர்வுகளையும் மற்றவர்களுக்குத் தெளிவாகவும், கண்ணியமாகவும் புரியவைக்கும் திறன்.


படைப்பாற்றல் சிந்தனை - ஒரு விஷயத்தைப் புதிய கோணத்தில் பார்ப்பது மற்றும் வழக்கத்திற்கு மாறான தீர்வுகளைக் கண்டறிவது.


முடிவெடுத்தல் - சரியான நேரத்தில், சரியான சூழ்நிலைக்குத் தகுந்த முடிவுகளைத் தயக்கமின்றி எடுப்பது.


பிரச்சினைகளைத் தீர்த்தல் - சிக்கல்களைக் கண்டு அஞ்சாமல், அவற்றின் வேரைக் கண்டறிந்து தீர்வு காண்பது.


பகுத்தாய்வுச் சிந்தனை -  தகவல்களை அப்படியே நம்பாமல், தர்க்கரீதியாகச் சிந்தித்து உண்மைத்தன்மையை ஆராய்வது.


தனிமனித உறவுத் திறன்கள் - மற்றவர்களுடன் இணக்கமான மற்றும் ஆரோக்கியமான உறவைப் பேணுதல்.


சுய விழிப்புணர்வு - தனது பலம், பலவீனம், ஆசைகள் மற்றும் விருப்பு வெறுப்புகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பது.


பரிவு காட்டுதல் - மற்றவர்களின் உணர்வுகளை அவர்களின் நிலையில் இருந்து புரிந்து கொள்வது.


உணர்ச்சிகளைக் கையாளுதல் - கோபம், பயம், கவலை போன்ற உணர்ச்சிகளைச் சீராகக் கட்டுப்படுத்துதல்.


மன அழுத்தத்தைக் கையாளுதல் -அன்றாட வாழ்வின் அழுத்தங்களைச் சமாளித்து மன அமைதியைப் பேணுதல்.


இந்தத் திறன்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவற்றைப் பயிற்சி செய்வதன் மூலம், ஒருவரால் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும்.  உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வது ஒரு தொடர் பயணம். இன்று ஒரு சிறிய மாற்றத்துடன் தொடங்குங்கள்!


(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)