பெண் பருவங்கள்!

Su.tha Arivalagan
Nov 16, 2026,01:25 PM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


பிள்ளைப்பேறு

பெரும்பாக்கியமே

பெண்வாரிசு  பேரின்பமே


பிள்ளைத்தமிழில் 

முதல் ஏழுபருவங்கள் 

ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவானவையே..


இறுதி மூன்று பருவங்கள் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கு சிறப்பானவையே


காப்பு ,செங்கீரை ,தால்

சப்பாணி, முத்தம், வருகை 

அம்புலி ,கழங்கு

அம்மானை, ஊசல் பெண்பாற்பிள்ளைத்தமிழ் 

பருவங்களே




தாயின்  அரவணைப்பிலே பாதுகாப்பாய் 

வளரும் தங்கமகளுக்கு 


நீண்ட ஆயுள்கிடைக்கவும்,

தெய்வங்களின் அருளைப் பெறவும் வேண்டுதலே காப்புப் பருவமே 


கை ஊன்றி கால் நீட்டி

தலைநிமிர்ந்து பார்க்கும்

முயற்சிமிக்க  

தலையசைந்தாடும்

செங்கீரைப் பருவமே 


தாயின் தாலாட்டில்

கண்ணயர்ந்து துயில்கொள்ளும்

நிம்மதியான சுகம் நிறைந்த

தால் பருவமே


பிஞ்சுப்பொன்விரல்களால் 

சப்பாணிகொட்டி 

குடும்பத்தை மகிழ்விக்கும்

மகிழ்வான சப்பாணிப் பருவமே


முத்தம் கேட்டால்

முத்தமழை பொழியும் 

முத்தான முத்தப் பருவமே 


தத்தித் தத்தித்

தளர்நடை நடந்துவரும்

தளராத தளர்நடைகொண்ட வருகைப் பருவமே


அம்புலியை விளையாட அழைக்கும்

விளையாடி மகிழும்

ஆனந்தமான அம்புலி 

பருவமே


அம்புலியை அழைக்கும் முறைகள் 

சாமம், பேதம், தானம், தண்டம் என

நான்காகுமே


மகளிரின் விளையாட்டுகள் நிறைந்த 

சிறப்பான,மகிழ்ச்சியான கழங்குப் பருவமே


கழங்கு  பழங்கால மகளிர் விளையாட்டுகளில் ஒன்றாகுமே 


சிறிய கற்கள் அல்லது கழங்கு போன்ற பொருட்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டாகுமே 


பெண்கள் அம்மானை விளையாடுவதைப் பற்றிப் பாடும் பருவம் அம்மானைப் பருவமே


அம்மானை  பழங்கால மகளிர் விளையாட்டாகுமே 


பெண்கள் ஒன்றுகூடி விளையாடி, பாடி மகிழ்வரே


ஊசல் என்பது ஊஞ்சலே


பெண்கள் ஊஞ்சலில் ஆடுவதைப் பற்றிப் பாடும் பருவம் ஊசற் பருவமே


ஊசல் பருவம் எனவும் அழைக்கப்படுமே 


பருவங்கள் பலகடக்க

3ஆம் திங்கள் முதல் 

21 திங்கள்  நிறைவாக 

பெண்பாற்பிள்ளைத்தமிழ் பாடப்படுமே


குழந்தையின் முயற்சிகள் விளையாட்டுகள் மகிழ்சிகள் பேசப்படுமே


தமிழ் இலக்கிய மரபில் பெண்ணின் வாழ்க்கை வளர்ச்சியை ஏழு பருவங்களாகப் பிரித்துக் கூறுவரே 


பெண்ணின் உடல், மனம், உணர்வு, சிந்தனை மற்றும் சமூக அனுபவங்களில் ஏற்படும் வளர்ச்சியை விளக்கிக்கூறுமே 


5 முதல் 7 வயது வரை குழந்தைப் பருவமே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருப்பாளே


அறிவு, மொழி, கற்பனை மற்றும் சமூகத் தொடர்புகள் வளரத் தொடங்கும் பருவமே இது பேதைப்பருவமே


8 முதல் 11 வயது வரை குழந்தைப் பருவத்திலிருந்து வளரிளம் பருவத்தை நோக்கிச் செல்லுவாளே


புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவாளே


சுய அடையாளம், சுயமரியாதை, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை வளரும் பருவமே

பெதும்பைப் பருவமே 


20 முதல் 25 வயதுவரை 

வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும்பருவமே  

அனுபவம் அதிகரிக்குமே


சுயசார்பு, முடிவெடுக்கும் திறன், பொறுப்புணர்வு ஆகியவை 

முக்கியத்துவம் பெறும் அரிவைப்பருவமே


26 முதல் 31 வயது வரை

வாழ்க்கை அனுபவம் அதிகரிக்கும் பருவமே


குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புகளைப் புரிந்துகொள்வாளே


உணர்ச்சி முதிர்ச்சி, சமூகப் புரிதல், பொறுப்புணர்வு ஆகியவை

சிறப்பாக வெளிப்படுமே இது 

தெரிவைப்பருவமே


32 முதல் 40 வயது வரை

வாழ்க்கையில் அதிக அனுபவம் பெற்ற நிலையே


அனுபவ அறிவு, மனப்பக்குவம், சமூகப் பொறுப்பு ஆகியவை 

வெளிப்படும் பருவமே 

பேரிளம்பெண் பருவமே..


தமிழ் இலக்கியம் கூறும் முத்தான ஏழுபருவங்களே ..!


மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற புகழ்பெற்ற வரிகளை  கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடினாரே ..!


பெண்களின் பெருமையை, தாய்மையின் அன்பை அவர்களின் அறப்பணிகளைப் போற்றினாரே ...!


பெண்கள் நாட்டின் கண்களே..! 

குடும்பத்தைக் காக்கும் 

ஆணிவேர்களே...! 


மகளாய் பிறந்து செல்லமாய் வளர்ந்து ..


பல படிநிலைகளைத்தாண்டி 

இன்பதுன்பங்களை அனுபவித்து ..


அடுப்பங்கரை முதல் விண்வெளிவரை சாதனைகள் பல படைத்து சிகரம் தொடும் பெண்ணிலவே 

நீயே எங்கள் சிங்கப்பெண்ணே...!


அன்னையாகி அன்பு நல்கி 

ஒழுக்கம் கற்பித்து பார்போற்ற பிள்ளைகளை வளர்த்து சிகரம்தொட்டு சிறந்து விளங்கச் செய்யும் பேராற்றலே ..


பெண்ணின்றி உலகில்லை

 தாயே உன் அன்பிற்கு நிகரில்லை ..


குழவியாய்  பிறந்து  குதூகலமாய் வளர்ந்து அனைத்திலும் உன் பங்கை சிறப்பாக ஆற்றி 

இந்நிலத்தே  நின்புகழ் 

தலைமுறை கடந்தும் 

வரலாறு பேசுமே.. 


உன்னைப் போற்றி வணங்குகிறோம் தாயே 

நீ வாழியவே ...!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்குப் பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாகக்  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.)