ஆண் பருவங்கள்

Nov 14, 2026,11:13 AM IST

 - கவிஞர் க. யாஸ்மின் சிராஜீதீன்


பிள்ளைப்பேறு

பெரும்பாக்கியமே

ஆண்வாரிசு  பொக்கிஷமே


பருவங்கள் பலகாணுவானே

பாலகனும் முதுமகனாவானே 


இறைவனிடம் குழந்தையை பாதுகாக்க வேண்டும்

தாயின்  தூயஅன்பில் 


பாதுகாப்பாய் வளரும்

காப்புப் பருவமே


கை ஊன்றி கால் நீட்டி

தலைநிமிர்ந்து பார்க்கும்


முயற்சிமிக்க  

தலையசைந்தாடும்

செங்கீரைப் பருவமே 




தாயின் தாலாட்டில்

கண்ணயர்ந்து துயில்கொள்ளும்


நிம்மதியான சுகம் நிறைந்த

தாள் பருவமே


பிஞ்சுப்பொன்விரல்களால் 

சப்பாணிகொட்டி 

குடும்பத்தை மகிழ்விக்கும்

மகிழ்வான சப்பாணிப் பருவமே


முத்தம் கேட்டால்

முத்தமழை பொழியும் 

முத்தான முத்தம் பருவமே 


தத்தித் தத்தித்

தளர்நடை நடந்துவரும்

தளராத தளர்நடை பருவமே


அம்புலியை அழைத்து

விளையாடி மகிழும்

ஆனந்தமான அம்புலி 

பருவமே


சிறுமியர் கட்டியவீட்டை

காலால்சிதைத்து

விளையாடும் குறும்புநிறைந்த 

சிற்றில்  பருவமே


மென்மையான கரங்களால் 

பறையை அடித்து

மகிழும் சிறுபறை  

பருவமே


தளர்நடை பழகும்

தேர் உருட்டி 

விளையாடும் 

முயற்சியின் சின்னமான

சிறுதேர்  பருவமே 


பருவங்கள் பலகடக்க

21 திங்கள்  நிறைவாக 


பாலனாய்  விளையாடி

வானவில்லின் வண்ணம்சூடி


மீளியாய் வளர்ந்து

ஒழுக்கம் தனதாக்கி


மறவனாய் இளமைபூக்க

தேனீயாய் சுறுசுறுப்பாகி


திறலோனாய் மனவலிமைசெழிக்க

பொறுப்புடனே  செயலாற்றி


காளையாய்  மெருகேறி 

சாதனை பலபடைத்து


விடலையாய் 

முதிர்ச்சியடைந்து

குடும்பத்தை

சுகமாக சுமந்து


முதுமகனாய்  முதியோனாகி

முழுவாழ்க்கைப்பாடமாய்

சிறந்துவிளங்கி


அனுபவ அறிவுரைகள்

இளம்தலைமுறைக்கு வழங்கி


எதிர்கால சமூகத்தூண்களை

சீராக்கி   பலமாக்கி


ஆண் பருவங்கள் 

பாதுகாப்போடு தொடங்கி


துள்ளலுடனும் மகிழ்வுடனும் முயற்சிகள் இணைந்து 


விளையாட்டுகள்

மனம்நிறைந்து பொறுப்புணர்ந்து


பட்டங்கள் பலபெற்று

பாரங்கள் பலசுமந்து


பண்பாட்டின் வழிநின்று

குடும்பத்தை வழிநடத்துவான்


சிறுவிதையாய் முளைத்து

ஆலமரமாய் பரந்துவிரிந்து


உலகையே உள்ளங்கையில் கொள்வான் 

மாசற்றஆண்மகன்


மழலையாய்  தவழ்ந்து

மாணிக்கமாய்  முழுமைபெற்ற


ஆண்மகனை

 நமக்களித்த 

ஆக்கப்பூர்வமான

ஆண் பருவங்கள்  


நமக்கு கிடைத்த 

பொக்கிஷங்களே


குடும்பத்திற்கு 

கிடைத்தவரமே

 என்றும்அழியா

உன்வளர்ப்பே 


 குடும்பத்தின்

அச்சாணியும்  

ஆணிவேரும்

ஆண்மகனே


குடும்பத்தை  மகிழ்வாக

தாங்கிநிற்கும்  ஆண் தேவதையே

பல்லாண்டு வாழியவே

உந்தன் புகழ் பாரினில்

வரலாறாய்  பதிந்து

காலங்காலமாக வாழ்ந்திடவே

வையம் உன்னை வாழ்த்திடவே வாழ்ந்திடுவாய்

வீரமகனே... 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்குப் பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாகக்  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்