சென்னை : தவெக எம்எல்ஏ.,க்கள் பலரும் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் இது முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சனைகள் இனியும் தொடராமல், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு கட்சி தலைவர் என்ற முறையில் விஜய் என்ன செய்ய வேண்டும் என்பதை அலசி பார்க்கலாம்.
முதல்வரான பிறகு விஜய், கட்சி பொறுப்புக்களில் பெரிதும் ஈடுபாடு காட்டாமல் இருந்து வருவதாக தவெக கட்சியை சேர்ந்தவர்களே மன குமுறலில் இருந்து வருகின்றனர். கட்சி தலைவராக இல்லாமல், முழுக்க முழுக்க முதல்வராக இருந்து மட்டும் ஆட்சி நடத்துவதிலும், மக்களுக்கான திட்டங்களை வகிப்பதிலும் மட்டுமே விஜய் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அதேசமயம், கட்சி அலுவலகத்திற்கு விஜய் சரியாக வருவதில்லை என்றும் சொந்த கட்சியினரே குறைபட்டு கொள்கிறார்களாம். அதனால் தான் தவெக நிர்வாகிகள், எம்எல்ஏ.,க்கள் என பலரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் தவெக அரசுக்கு அவப்பெயர் வருவது மட்டுமின்றி, தவெக கட்சியிலும் கட்டுப்பாடுகள் இல்லாமல் போய் விடும்.
அதை விட முக்கியமாக தவறு செய்யும் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் விஜய் முன்வர வேண்டும். இது மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகரிக்க உதவும்.
என்ன செய்ய வேண்டும் விஜய்?
- முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஆட்சியை சிறப்பாக நடத்தியதுடன், கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர். கட்சி அலுவலகத்திற்கு சென்று, நிர்வாகிகளை சந்தித்து, ஆலோசனை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதே பாணியை விஜய்யும் கையாள வேண்டும்.
- தினமும் ஒரு எம்எல்ஏ.,விற்கு போன் செய்து அவர்களின் செயல்பாடுகள், அவர்கள் மீது வரும் புகார்கள், தொகுதி விஷயங்கள் குறித்து விஜய் ஆலோசனை நடத்த வேண்டும். இதனால்."தலைவர் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் தலைவரிடம் இருந்து நமக்கு போன் வரலாம்" என்ற எச்சரிக்கை உணர்வு எம்எல்ஏ.,க்களுக்கு இருக்கும்.
- வாரத்திற்கு ஒருமுறை கட்சி அலுவலகத்திற்கு சென்று, கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்க வேண்டும். கட்சியை பலப்படுத்தும் பணிகளை கண்காணிக்க வேண்டும். (கலைஞர் தினசரி அறிவாலயம் வருவார். உடல் நலிவுற்றிருந்தாலும் கூட வராாமல் இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது)
- மாதத்திற்கு ஒருமுறையாவது மாவட்ட செயலாளர்களுடன் ஆன்லைன் மீட்டிங் நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். அப்போது தான் கட்சி நிர்வாகிகளுக்கு, தலைவரே நேரடியாக தொடர்பு கொண்டு பேசுகிறார் என்ற எண்ணம் ஏற்படும். இது கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக செயல்பட உதவும்.
- அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. பின்னர் லோக்சபா தேர்தலும் வரவுள்ளது. அதிக அளவிலான மக்கள் பிரதிநிதிகள் வரப் போகிறார்கள். அப்படி இருக்கும்போது எல்லோரையும் சமாளிக்க இப்போதிருந்தே தனது கட்டுக்குள் கட்சியை விஜய் வைத்திருப்பது மிக மிக முக்கியமானது.
நேற்று நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நீண்ட நேரம் அவர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து விஜய் விவாதித்ததாகத் தெரிகிறது. அவர்களிடம் முதல்வர் குறை கேட்டுள்ளார். அவர்கள் சொன்னதையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டுள்ளார். அதேபோல அவர்கள் என்ன தேவை என்றாலும் என்னை நேரில் சந்திக்கலாம். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த முறையும் நீங்கள்தான் வேட்பாளர், எதிர்க்கட்சிகள் வலையில் சிக்கி விடாதீர்கள் என்றெல்லாம் விஜய் பேசியதாக தெரிகிறது.
விஜய் ஆட்சியில் மட்டும் கவனம் செலுத்தாது, கட்சியிலும் தீவிரக் கவனம் செலுத்தினால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும். இப்போது வரும் சர்ச்சைகளும் குறையும். அதுதான் அவருக்கும் நல்லது கட்சிக்கும் நல்லது. இல்லாவிட்டால் மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும்.
நீடிக்கும் சர்ச்சைகள்- சிக்கும் எம்எல்ஏக்கள் - முதல்வர் விஜய் என்ன செய்ய வேண்டும்?
தென்தமிழ் தலையங்கம்: பெருநகரங்களுக்குப் பாடம் எடுத்த தேனி அல்லிநகரம்.. சபாஷ்!
கூவத்தூர் ஃபார்முலாவை கையில் எடுக்கிறதா தவெக? அவரச எம்எல்ஏ.,க்கள் கூட்டத்திற்கு இது தான் காரணமா?
நல்ல காலம் பிறக்குமா?... வேரில் இருந்து விழுது வரை (3)
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மேல்முறையீடு!
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுண்டைக்காய் குழம்பு!
மகா கந்தசஷ்டி விரதம் 2ம் நாள் - சேலம் கந்தாஸ்ரமம் திருக்கோயில் மகிமை!
நவம்பர் 11 .. தேசிய கல்வி தினமாக கொண்டாடுவது ஏன்?
கை பிடித்து நடக்கும் போதெல்லாம்.. அப்பா!
{{comments.comment}}