- சு.தா.அறிவழகன்
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள எழில்மிகு சிறிய நகரமான தேனி - அல்லிநகரம் நகராட்சி, மத்திய அரசின் 'தமிழ்நாட்டின் மிகத் தூய்மையான நகரம்' என்ற பெருமைமிகு விருதைத் தட்டிச் சென்றுள்ளது. நிதி வசதியும், நவீன கட்டமைப்புகளும் கொட்டிக் கிடக்கும் பெருநகரங்களே தடுமாறும் இடத்தில், ஒரு சாதாரண சிறிய நகராட்சி இத்தகைய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.
ஆனால் இந்த சாதனைப் பட்டியலில் தமிழ்நாட்டின் பெருநகரங்களான சென்னை, மதுரை, கோவை திருச்சி போன்ற நகரங்கள் இடம் பெறாமல் போனது ஆச்சரியமாக மட்டும் அல்ல, அதிர்ச்சியாகவும் இருக்கிறது. காரணம் இந்த நகரங்களுக்கென பல நூறு கோடி ரூபாய்களை கொட்டி அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால் தூய்மையில் இவர்கள் கோட்டை விட்டிருப்பது அயர்ச்சியையே தருகிறது.
மாநிலத்தின் பல பகுதிகளில், "தூய்மை என்றால் கிலோ என்ன விலை?" என்று கேட்கும் அளவிற்கு நிலைமை பரிதாபகரமாக உள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னை, கோவில் நகரமான மதுரை போன்ற முக்கிய மாநகரங்களின் நிலையைப் பார்த்தால் வேதனையே மிஞ்சுகிறது. பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட், நவீன குப்பை அள்ளும் வாகனங்கள், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் இருந்தும் கூட, சென்னையின் பல புறநகர்ப் பகுதிகளிலும், கூவம் மற்றும் அடையாறு கரையோரங்களிலும் குப்பைகள் குவிந்து கிடப்பதை அன்றாடம் பார்க்க முடிகிறது.
சென்னையின் புறநகர்களில் மட்டுமல்லாமல், சென்னையிலும் கூட பல இடங்களில் குறிப்பாக காலியிடங்களில் குப்பைகளை வீசிச் செல்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளதையும் பார்க்கலாம். மழைக்காலம் வந்துவிட்டால், குப்பைகளால் அடைபட்ட கால்வாய்களால் மாநகரங்கள் மழைக்காலங்களில் தத்தளிப்பதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

இந்த அவலத்திற்கு உள்ளாட்சி நிர்வாகத்தை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக உழைத்தாலும், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும், 'நமக்கென்ன' என்ற மெத்தனப் போக்கும் முக்கியக் காரணமாக அமைந்துவிடுகின்றன. வீட்டுக் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுக்காமல் சாலையோரங்களில் வீசிச் செல்லும் மனநிலை மாறாதவரை, எந்த அரசாலும் ஒரு நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்க முடியாது.
இத்தகைய சூழலில்தான் தேனி அல்லிநகரத்தின் வெற்றி நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பெரியளவில் தொழில் வளமோ, மாநகராட்சிகளுக்கு இணையான நிதி ஆதாரமோ இல்லாத ஒரு சிறிய நகராட்சியால் இது எப்படிச் சாத்தியமானது? திட்டமிட்ட குப்பை மேலாண்மை, திடக்கழிவுகளை முறையாகத் தரம் பிரித்து உரமாக்குதல், தொடர் கண்காணிப்பு மற்றும் அதைவிட முக்கியமாக மக்களின் முழுமையான ஒத்துழைப்பு ஆகியவையே இந்த வெற்றியின் ரகசியம்.
ஒரு நகரத்தைத் தூய்மையாக வைப்பது என்பது அரசின் கடமை மட்டுமல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைப் பொறுப்பும் கூட என்பதை தேனி மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் நிர்வாகம் ஆகியோர் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து கைகோர்த்தால் எந்த இலக்கையும் எட்ட முடியும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று.
தேனி அல்லிநகரம் பெற்றிருக்கும் இந்த விருது வெறும் பாராட்டுச் சான்றிதழ் மட்டுமல்ல; அது தமிழகத்தின் ஏனைய நகரங்களுக்கும், குறிப்பாக சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு ஆரோக்கியமான சவால். சிறிய நகராட்சி சாதித்ததை, அபரிமிதமான வளங்கள் நிறைந்த பெருநகரங்களால் ஏன் சாதிக்க முடியாது? இனியாவது பெருநகர நிர்வாகங்களும், மக்களும் விழித்துக்கொண்டு தேனியை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
இந்த மாபெரும் சாதனைக்குப் பின்னணியில் அயராது உழைத்த தூய்மைப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் முழு ஒத்துழைப்பு நல்கிய தேனி அல்லிநகரம் பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! தேனியின் இந்தத் தூய்மைப் புரட்சி தமிழகம் முழுவதும் பரவட்டும்; நமது பிற நகரங்களும் இதேபோல் முன்மாதிரியாகத் திகழ வாழ்த்துவோம்.
தென்தமிழ் தலையங்கம்: பெருநகரங்களுக்குப் பாடம் எடுத்த தேனி அல்லிநகரம்.. சபாஷ்!
கூவத்தூர் ஃபார்முலாவை கையில் எடுக்கிறதா தவெக? அவரச எம்எல்ஏ.,க்கள் கூட்டத்திற்கு இது தான் காரணமா?
நல்ல காலம் பிறக்குமா?... வேரில் இருந்து விழுது வரை (3)
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மேல்முறையீடு!
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுண்டைக்காய் குழம்பு!
மகா கந்தசஷ்டி விரதம் 2ம் நாள் - சேலம் கந்தாஸ்ரமம் திருக்கோயில் மகிமை!
நவம்பர் 11 .. தேசிய கல்வி தினமாக கொண்டாடுவது ஏன்?
கை பிடித்து நடக்கும் போதெல்லாம்.. அப்பா!
தென்தமிழ் தலையங்கம்: "எனக்கு நானே ராஜா!" - சிங்கிள்ஸ் கொண்டாடும் நவம்பர் 11 தின சுவாரஸ்ய வரலாறு!
{{comments.comment}}