- ஸ்வர்ணலட்சுமி
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடற்கரையில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய ஆன்மீக நிகழ்வை காண முருக பக்தர்கள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
'திருச்செந்தூர் சூரசம்ஹாரம்' என்பது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் நடைபெறும் ஒரு மகா பிரம்மாண்டமான சிகர நிகழ்வாகும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த சிகர விழாவில் திருச்செந்தூர் கடற்கரையில் பிரம்மாண்டமான முறையில் பாதுகாப்புடன் பக்தர்களின் வசதிக்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு குடி தண்ணீர் வசதிகள் ஆங்காங்கே செய்யப்பட்டுள்ளன.
கந்த சஷ்டி விழா தொடங்கியது முதல் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சூரசம்ஹாரம் கதை என்ன?..

"திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்கள் எல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ".
பிரம்மாவின் இருப்புதல்வர்கள் தட்சன், காசிபன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து பல வரங்கள் பெற்றனர். தட்சன் சிவபெருமானுக்கே மாமனாராகி தனது அகந்தை காரணமாக இறுதியில் சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வீரபத்திரனால் கொல்லப்பட்டான். காசிபன் ஒருநாள் அசுர குரு சுக்ராச்சாரியார் ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகினில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையே இழந்து அசுர பெண்ணுடன் மனித உருவத்தில் முதலாம் ஜாமத்தில் இணைந்த காசிபனுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். காசிபன் தன் பிள்ளைகளிடம் 'சிவபெருமானை வட திசை நோக்கி சென்று தவம் செய்து வேண்டிய வரங்களை பெற்று வாருங்கள்' என்று உபதேசம் செய்தான்.
புத்திசாலியான சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து சாகா வரம் வேண்டும் என்று கேட்டான்.ஆனால், சிவபெருமான் பிறப்பு என்றால் இறப்பு இருக்கும்.உனக்கு எந்த வகையில் அழிவு தர வேண்டும் எனக் கேட்டார். அவன் அதற்கு தனக்கு ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் அழிவு வரவேண்டும் என்று தந்திரமாக பதில் உரைத்தான். சூரபத்மனுக்கு உடன் பிறந்தவர்களும் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையில் அடைத்தனர். எனவே தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
சிவபெருமான் அவர்களை காப்பாற்ற தனது நெற்றிக்கண்ணை திறக்க அதிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் சரவண பொய்கையில் வளர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது கொண்டு சேர்த்தான்.அந்த ஆறு தீப்பொறிகளே ஆறு குழந்தைகளாக மாறி ஆறு கார்த்திகை பெண்கள் அவர்களை வளர்த்தனர். ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவி கட்டி அணைக்க அந்த ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருக பெருமானாக தோன்றினார். அதனால்தான் முருகப்பெருமான "ஆறுமுகசாமி '" என்று அழைக்கப்படுகிறார்.
அசுரர்களை அழிக்க வந்த முருகன் காசிபன் மகனுடைய அனைத்து சேனைகளையும் ஐந்து நாட்களில் போர் புரிந்து அழித்து,6 ஆம் நாள் எஞ்சியவன்தான் சூரபத்மன். ஆனால் அவனோ கடலின் நடுவில் வீர மகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். சூரன் சிறுவனான முருகப்பெருமானை பார்த்து "உன்னை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது", நீயா என்னை கொல்ல வந்தாய் என்று ஏளனம் செய்தான்.
முருகன் தனது உருவத்தை பெரியதாக்கி அவனை கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்து தனது விசுவ ரூபத்தை அவனுக்கு காட்டிய போது, உன்னை தேடி வரும் பக்தர்கள் என்னில் வந்து நீராடியதுமே அவர்களுடைய ஆணவம் நீங்க பெற்று உனது திருவடியே கதி என சரணம் அடையும் புத்தி பெற வேண்டும்" என்றான்.அந்த வரத்தை அவனுக்கு முருகன் அளித்தார்.ஆனாலும், சூரனுக்கு ஆணவம் தலை தூக்க அவன் மாமரமாக மாறி தப்ப முயன்றான்.
முருகப்பெருமான் தனது தாய் பார்வதி தேவியிடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது எய்த, மாமரம் இரண்டாகப் பிளந்து அதில் ஒரு பாதி மயிலாகவும் மறு பாதி சேவலாகவும் மாறி, முருகன் மயிலை தனது வாகனமாகவும்,சேவலை தனது கொடி சின்னமாகவும் ஆக்கிக் கொண்டார்.
சூரன் மாமரமான இடம் "மாம்பாடி "என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் யாதெனில் இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. இந்த நிகழ்வு கந்த பெருமானால் ஐப்பசி சஷ்டி திதியில் சூரனின் வதம் நிகழ்ந்ததால் இது "கந்த சஷ்டி" ஆயிற்று. காருண்ய மூர்த்தியான முருகன் சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். ஏனெனில் உயிரை கொள்ளும் ஆயுதம் அல்ல 'வேல் 'அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்த வழிபாட்டு வேல் ஆகும்.
எனவே, " வேல் வேல் வெற்றிவேல்" என்று இன்றும் பக்தர்கள் கோஷமிட்டு வணங்கி வருகின்றனர்.
சாயா அபிஷேகம்:

கந்த சஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருக பெருமானை வணங்கினால் நற்கதி பெறலாம்.சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சிவபூஜை செய்ய விரும்பினார் முருகப்பெருமான். சூரனை சம்ஹாரம் செய்த பின்னர் ஜெயந்திநாதர் திருச்செந்தூர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருள்வார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும். அர்ச்சகர் அந்த கண்ணாடியில் தெரியும் ஜெயந்தி நாதரின் பிம்பத்திற்கு தான் அபிஷேகம் செய்வார். இதை "சாயாபிஷேகம்" என்பர்.
'சாயா' என்றால் 'நிழல்' என பொருள்படுகிறது. போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் வழக்கமாக நடைபெறுகிறது. இந்த அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.இந்த நிகழ்வுக்கு பின் முருகன் சன்னதிக்கு திரும்புவார். இத்துடன் சூரசம்ஹாரம் விழா நிறைவு பெறுகிறது.
இவ்வாறு தேவர்களுக்கு முருகப்பெருமான் உதவியதன் காரணமாக இந்திரன் தனது மகள் தெய்வானையை முருகனுக்கு திருமணம் முடித்து வைக்கிறார். அதனால் மறுநாள் முருகன் & தெய்வானை திருமணம் வைபவத்தோடு கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஏழாம் நாள் (நவம்பர் 16 திங்கள்)முருகன் தெய்வானை திருமணம் முடிந்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்வது சிறப்பு.
"வேலுண்டு வினையில்லை கந்தன் உண்டு பயமில்லை "
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
மகா கந்த சஷ்டி விழா - சூரசம்ஹாரத்திற்குத் தயாராகும் திருச்செந்தூர்!
தென்தமிழ் தலையங்கம்: குழந்தைகளின் புன்னகையே நாளைய தேசத்தின் பலம்!
அம்மாவின் மனதிற்குள் ஓர் உலகம் .. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (12)
அம்மா!
யார் கடவுள்?
பசி!
தென்தமிழ் தலையங்கம் : அனைவரிடமும் கருணை காட்டுவோம்...இன்று உலக கருணை தினம்
நண்டு, சிண்டு, நார்த்தங்காய் .. கிணற்றில் விழுந்த ரமா.. நடுங்கிப் போன சுதா!
நான்கு முழம் நீளும் நாக்கு!
{{comments.comment}}