கந்த சஷ்டி விரதம் 3ம் நாள்.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகிமை

Nov 12, 2026,01:32 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்ட  சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகிமை பற்றிய  தகவல்களை பார்ப்போமா.


தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அதிசயம் யாதெனில் கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும்  சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின் தயிர் புளிப்பதில்லை என்பதுதான்.


ஈரோடு to பெருந்துறை சாலையில் அமைந்துள்ள சென்னிமலை கோவில் ஈரோட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் பெருந்துறையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைய பெற்றுள்ளது. இக்கோவிலுக்கு செல்ல 1320 படிகள் உள்ளன. பக்தர்களின் வசதிக்காக மலை உச்சிவரை செல்வதற்காக தார் சாலை மற்றும் கோவில் பேருந்து வசதியும் உள்ளது.




பெயர் காரணம்: புராணங்களின்படி ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே நடந்த போரில் ஆதிசேசனின் சிரம் விழுந்த இடம் என்பதனால் இது 'சிரகிரி' என்றும் தமிழில் சென்னிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை புஷ்பகிரி மற்றும் மகுடகிரி என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.


பாலன் தேவராய சாமிகள் என்ற முருக பக்தர் இயற்றிய "கந்த சஷ்டி கவசம்" எனும் கவசமாலை இத்தலத்தில் முதன் முதலில்  அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமை பெற்றது. கந்த சஷ்டி கவசம் பாடலில் வரும் சிரகிரி   வேலவன் என்னும் வரி இந்த  ஸ்தலத்தில்  அமைந்துள்ள முருகனையே குறிக்கிறது.


இத்தலத்தின்  குன்றில் இரண்டு காளை மாடுகளை பூட்டிய மாட்டுவண்டி ஒன்று இந்த மலைப் படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு 1984 ஆம் ஆண்டு  நடந்தேறியது.


மலையின் உச்சியில் அமையப்பெற்றுள்ள சென்னிமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் கொங்கு நாட்டின் முக்கியமான முருகன் ஸ்தலமாகும். இந்த கோவில் ஆறுபடை வீடுகளுக்கும் முந்தைய கோவில் என்று கூறப்படுகிறது.


சஷ்டியில் விரதம் இருந்து சென்னிமலை ஆண்டவனை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது அசையாத நம்பிக்கை. திருமணம், விவசாயம், பிற தொழில் சார்ந்த செயல்களில் ஈடுபடும் பொழுது இத்தல முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து 'சிரசுப்பூ' உத்தரவு கேட்டு செயல்களை தொடங்குவது இங்குள்ள மக்களின் வழக்கமாக உள்ளது.


இச்சிப்பாளையத்தில் உள்ள குன்றின் மீது சென்னிமலை அருகில் இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல் பக்தர்கள் ஏறி செல்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.  படிகளில் ஏறிய உடனேயே கடம்பவனேஸ்வரர், கந்தர் இடும்பன் ஆகியோரை தரிசனம் செய்யலாம். பின்னர் வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தை கடந்து சென்றால் முத்துக்குமார சாவான்  என்னும் மலைக் காவலர் சன்னதியில் தரிசிக்கலாம்.


படிக்கட்டில் நடக்கும் பொழுது நீண்ட இலைகளுடன் கூடிய  துரட்டி மரம் என்ற பழமையான மரம் ஒன்று உள்ளது. துஷ்ட சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள்  இம்மரத்தை நெருங்கும் பொழுது அந்த சக்திகள் அவர்களை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.அதற்கு அடுத்து வரும் ஆற்றுமலை விநாயகரை தரிசித்து மேலே சென்றால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சென்றடையலாம்.


கிழக்கு நோக்கிய சன்னதியில் இருபுறமும் அம்மையும், அப்பனும் அரவணைக்க சுவாமி தனிச் சன்னதியில் இருந்து தனித்து நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அவருக்கு முன்பாக விநாயகரும், வலது புறத்தில் உமையவள்ளி உடனுறை  மார்க்கண்டேஸ்வரரும் இடதுபுறத்தில் விசாலாட்சி உடனுறை விசுவநாதரும் குடும்ப சமேதராக  சூழ்ந்து இருந்து குமரனை மட்டுமின்றி வழிபடும் பக்தர்களை ஆசீர்வதிக்கின்றனர்.


இக்கோவிலின் கருவறையின் பின்புறம் முருகனின் தேவியர்களான வள்ளி- தெய்வானை இருவரும் தனி சன்னதியில் ஒன்றாக இருந்து அருள் பாலிக்கின்றனர். இவர்களுடைய இருவரது திருவுருவங்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்தது.


இவர்களுக்குப் பின்னால்  பின்னா கீசர் சித்தரின் சன்னதி வேல் கோட்டமாக காட்சியளிக்கிறது, மலை மீது நீண்ட நாள் தவம் இருந்த இவர் பின்னாளில் 'புண்ணாக்குச் சித்தர் 'என்று அழைக்கப்பட்டதாகவும், சென்னிமலை வரலாற்றை  இவரே இயற்றினார்  என்றும் கூறப்படுகிறது. இவர் சன்னதிக்கு பின்புறம் சரவண மாமுனிவர் வாழ்ந்த குகையும், சமாதியும் அமையப்பெற்றுள்ளது. மேலும் அருணகிரிநாதர் இத்தல முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.


சென்னிமலை முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசம் வரிகள்:


"நேசக்குற மகள்   நினைவோன்!வருக!

ஆறுமுகம் படைத்த ஐயா! வருக!

நீறு  இடும் வேலவன் நித்தம் வருக!

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

சரவண பவனார் சடுதியில் வருக!

 

இந்த வரிகளில் 'சிரம்' அல்லது  தலை என்றால் ' 'சென்னி  ' என்றும், 'கிரி' என்றால்' மலை' என்றும் பொருள். இத்தனை சிறப்பு வாய்ந்த சென்னிமலைக்கு முருக பக்தர்கள் ஒரு முறையேனும்  சென்று தரிசித்து வருவது சிறப்பு. மேலும் இதுபோன்ற  சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்