அரசுத் தேர்வும் நானும்!

Nov 12, 2026,11:52 AM IST

- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்


விடியாத இரவிலும் விழித்துப் படித்தேன்,

விடியும் என்ற நம்பிக்கையில் விதைத்துக் கிடந்தேன்!


கையில் புத்தகம், கண்களில் கனவு,

கடந்து போகும் காலமோ எனக்குப் பெரும் வினவு!


ஒரு தேர்வு முடிந்தால் மறு தேர்வு வந்தது,

ஒரு நம்பிக்கை உடைந்தால் மறுநம்பிக்கை பிறந்தது!


கேள்விகள் ஆயிரம் மனதினில் எழுந்தன,

பதில்கள் தேடியே பொழுதுகள் கரைந்தன!




உறவுகள் கேட்டன... வேலை கிடைத்ததா?

உள்ளமோ கேட்டது... முயற்சி முடிந்ததா?


வயதுகள் நகர்ந்தன, வாய்ப்புகள் குறைந்தன,

ஆனாலும் என் கனவுகள் மட்டும் குறையவில்லை!


சில மதிப்பெண்களில் வெற்றியைத் தொலைத்தேன்,

பல அனுபவங்களில் வாழ்க்கையைப் படித்தேன்!


மற்றவர் வெற்றியில் மகிழ்ந்தும் நின்றேன்,

என் வெற்றிக்காக மௌனமாய் உழைத்தும் நின்றேன்!


அரசுத் தேர்வே... நீ எனக்கொரு பாடம்,

அவமானம் தாங்கவும் கற்றுத் தந்த வேதம்!


உன்னை வெல்வதற்காக மட்டும் படிக்கவில்லை,

என்னை நானே வெல்வதற்கும் படிக்கிறேன்!


ஒருநாள் என் பெயருக்கு முன்னால்

ஒரு அரசுப் பதவி வரும்...

அன்று என் கண்ணீருக்குப் பின்னால்

ஒரு பெருமிதப் புன்னகை மலரும்!


அதுவரை தோல்வியே... என்னைத் துரத்தாதே!

தேர்வே... என்னைச் சோதிக்கத் தயங்காதே!


ஏனென்றால்...


என் கனவு இன்னும் உயிரோடு இருக்கிறது!

என் முயற்சி இன்னும் ஓயவில்லை!

என் வெற்றிக்கான பயணம்

இன்னும் முடியவில்லை!


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்