- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்
என் வாழ்வின் முதல் கவிதை நீ அம்மா…
என் இதயத்தின் நிரந்தர இசையும் நீ அம்மா…
உலகமே என்னை மறந்தாலும்,
உன் உள்ளத்தில் எனக்கோர் இடம் உண்டு அம்மா!
தேன்மொழி என்று பெயர் வைத்தார்கள்,
அந்தப் பெயருக்கே பெருமை சேர்த்தாய்!
தானும் கெடாமல், பிறரையும் கெடுக்காமல்,
தர்மம் காத்து வாழும் நற்குணம் கொண்டாய்!
உன் நாவில் தேனின் இனிமை,
உன் மனதில் அன்பின் பெருமை!
யாரையும் புண்படுத்தாத உன் குணமே,
உன் வாழ்வின் அழியாத அருமை!
.webp)
சமையலறைக்குள் நீ நுழைந்தால்,
சாதாரண உணவும் விருந்தாகும்!
உன் கைப்பக்குவத்தில் சமைத்த உணவு,
பசியை மட்டுமல்ல… மனதையும் நிறைக்கும்!
அடுப்படியில் நீ ஒரு ராணி,
அன்பைப் பரிமாறுவதில் மகாராணி!
உன் கைமணத்தில் வளர்ந்த எங்களுக்கு,
வேறெந்த விருந்தும் ஈடாகுமா அம்மா?
அப்பாவின் நலனில் அக்கறை காட்டி,
அவரின் தேவைகளை முன்பே உணர்ந்து,
வாழ்க்கைப் பயணத்தில் துணையாக நின்று,
இல்லறத்தின் அழகாய் வாழ்கிறாய்!
அண்ணனின் நலனிலும் அன்பைப் பொழிந்து,
அவனுக்காகவும் மனம் உருகி,
குடும்பம் என்ற கோயிலுக்குள்
அன்பையே விளக்காக ஏற்றுகிறாய்!
வீட்டிற்கு வரும் விருந்தினரைக் கண்டால்,
முகம் மலர்ந்து வரவேற்பாய்!
வந்தவர் வயிறும் மனமும் நிறைய,
வகை வகையாய் உபசரிப்பாய்!
விருந்தோம்பல் என்ற சொல்லுக்கே
உயிர் கொடுத்த உன் பண்பு!
உன் வீட்டை நாடி வருபவர்க்கெல்லாம்
நினைவில் நிற்கும் உன் அன்பு!
கோபங்கள் வந்தாலும் பொறுமை காப்பாய்,
குறைகள் சொன்னாலும் புன்னகை பூப்பாய்!
ஆயிரம் கவலை மனதில் இருந்தாலும்,
அடுத்தவர் நலனையே முதலில் கேட்பாய்!
உன் புன்னகை பூத்திடும் வேளையில்,
பூக்களும் வெட்கத்தில் தலைகுனியும்!
உன் முகத்தில் தெரியும் அந்த அழகில்,
என் உலகமே தினமும் விடியும்!
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்,
நூறு நூல்களின் அறிவு இருக்கிறது!
நீ சொல்லும் ஒவ்வொரு கதையிலும்,
ஒரு வாழ்க்கைப் பாடம் பிறக்கிறது!
பட்டங்கள் பல பெற்றவர்களும் வியக்கும்,
படிக்காத பாடங்களையும் கற்பிக்கும்!
என் கண்முன்னே நடமாடும்
நீ ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்!
என் இரண்டு குழந்தைகளைக் காணும்போது,
உன் முகத்தில் ஆயிரம் பூக்கள் பூக்கின்றன!
அவர்களின் சின்னச் சின்ன சேட்டைகளிலும்,
உன் உள்ளம் குழந்தையாக மாறுகின்றது!
அவர்களை அள்ளி அணைத்து முத்தமிட்டு,
அன்பை அள்ளி அள்ளித் தருகிறாய்!
நான் தாயான பின்னும் அம்மா,
உன் மடியில் இன்னும் குழந்தையாகிறேன்!
என் பிள்ளைகளின் சிரிப்பில் நீ மகிழ்கிறாய்,
அவர்களின் வளர்ச்சியில் பெருமை கொள்கிறாய்!
என் குழந்தைகளுக்குப் பாட்டியாக மட்டும் அல்ல,
இரண்டாம் தாயாகவே வாழ்கிறாய்!
கோயிலுக்குச் சென்று தெய்வம் தேடுகிறேன்,
கும்பிட்டுக் கண்ணீருடன் வரம் கேட்கிறேன்!
ஆனால் என் கண்முன்னே தினமும் நடக்கும்
தெய்வத்தை உணராமல் எப்படித் தேடுகிறேன்?
என் பசி அறிந்து உணவு தந்தாய்,
என் வலி அறிந்து மருந்தானாய்!
நான் விழுந்தபோது கை கொடுத்தாய்,
நான் சிரித்தபோது குழந்தையாய் மகிழ்ந்தாய்!
உன் கைகளில் சுருக்கங்கள் விழுந்தாலும்,
உன் அன்பில் சுருக்கங்கள் விழவில்லை!
உன் கால்கள் மெதுவாக நடந்தாலும்,
எங்களுக்காக ஓடிய நாட்கள் மறக்கவில்லை!
உன் தியாகங்களுக்குக் கணக்கில்லை,
நீ சிந்திய கண்ணீருக்கு அளவில்லை!
நான் உனக்குச் செய்த நன்றிகளோ,
உன் அன்பில் ஒரு துளிகூட இல்லை!
அம்மா…
உனக்காக ஒரு கவிதை எழுதுகிறேன்,
ஆனால் உன் அன்பை எழுத வார்த்தைகள் தேடுகிறேன்!
உன் வாழ்க்கையை ஒரு வரியில் சொல்ல நினைக்கிறேன்,
என் வாழ்நாளே போதாது என்று உணர்கிறேன்!
இந்தப் பிறவியில் உன் மகளாகப் பிறந்ததே,
இறைவன் எனக்குத் தந்த மிகப்பெரிய வரம்!
உன் அன்பின் நிழலில் வாழ்வதே,
என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம்!
இறைவனிடம் எனக்கொரு வேண்டுதல் உண்டு…
இப்பிறவியில் நீ என் அம்மாவாகக் கிடைத்தாய்,
உன் அன்பை அனுபவிக்க நான் கொடுத்து வைத்தேன்!
மறுஜென்மம் ஒன்று இருந்தால்…
உன்னைத் தேடி மீண்டும் வருவேன்!
இந்த முறை உன் அன்பைத் திருப்பித் தரும்
ஒரு வாய்ப்பாகவே பிறக்க விரும்புவேன்!
மீண்டும் உன் மகளாகவே பிறக்க ஆசை…
மீண்டும் உன் மடியில் தலைசாய்க்க ஆசை…
மீண்டும் உன் கையால் உணவருந்த ஆசை…
மீண்டும் உன்னை அம்மா என்று அழைக்க ஆசை…!
உலகில் ஆயிரம் உறவுகள் கிடைக்கலாம்,
ஆனால் உன்னைப் போன்ற அம்மா கிடைக்க மாட்டாள்!
என் வாழ்நாள் முழுவதும் தேடினாலும்,
உன் அன்புக்கு இணையான சொர்க்கம் கிடைக்காது!
என் முதல் உலகம் நீ…
என் வாழ்வின் வரம் நீ…
என் பிள்ளைகளின் புன்னகையிலும் வாழ்பவள் நீ…
என்றென்றும் என் இதயக் கோயிலில்
நடமாடும் தெய்வம் நீயே…
என் அன்புத் தேன்மொழி அம்மா!
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)
அம்மாவின் மனதிற்குள் ஓர் உலகம் .. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (12)
அம்மா!
யார் கடவுள்?
பசி!
தென்தமிழ் தலையங்கம் : அனைவரிடமும் கருணை காட்டுவோம்...இன்று உலக கருணை தினம்
நண்டு, சிண்டு, நார்த்தங்காய் .. கிணற்றில் விழுந்த ரமா.. நடுங்கிப் போன சுதா!
நான்கு முழம் நீளும் நாக்கு!
Manima Chettinadu Recipes: தின்னத் தின்னத் தெவிட்டாத வாழைப்பூ பந்து!
வெறும் பேச்சிலர் கூடாது!
{{comments.comment}}