- மணிமா
இன்றைய செட்டிநாடு ரெசிபியில், தின்ன தின்ன தெவிட்டாத வாழைப்பூ பந்து குறித்துப் பார்க்கப் போகிறோம்.
செட்டிநாடு ரெசிபிகளுக்கு அமோக வரவேற்பும் ஆதரவும் தரும் அன்பு உள்ளங்களே. உங்கள் அனைவருக்கும் அன்புடன் வணக்கம் கூறுவது உங்கள்.....மணிமா.
அதி அற்புதமான மிக மிக ருசியான வாழைப்பூ பந்து எப்படி செய்வது என்று பார்ப்போமா
தேவையான பொருட்கள்

வாழைப்பூ ஒன்று
துவரம் பருப்பு ஒரு கப் 200 கிராம்
சிவப்பு காய்ந்த மிளகாய் மூன்று
சோம்பு கால் ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு பல் இரண்டு
கிராம்பு இரண்டு
சிறிய வெங்காயம் உரித்தது 20
அல்லது பெரிய வெங்காயம் ஒன்று
கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு
பொறிப்பதற்கு தேவையான எண்ணெய்
தேவையான உப்பு
செய்முறை
முதலில் வாழைப்பூவை மடலில் இருந்து எடுத்து நடுவில் உள்ள நரம்பை மட்டும் நீக்கிவிட்டு முழு வாழைப்பூவையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதனை மிக்ஸியில் இட்டு தண்ணீர் எதுவும் விடாமல் விட்டு விட்டு ஓட விடவும். ஒரு நிமிடத்தில் துருவலாக வந்துவிடும். இதனை எடுத்து அகண்ட பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
(வாழைப்பூ இளம் பூவாக இருந்தால் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் ஓடவிட்டாலும் லேசான தண்ணீர் விட்டது போல இருக்கும் அப்படி இருந்தால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்)
துவரம் பருப்பை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதே மிக்ஸியில் ஊறிய பருப்பை சேர்த்து அதனுடன் உப்பு கிராம்பு, சோம்பு, மிளகாய் வற்றல் பூண்டு இவற்றை எல்லாம் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த அரைத்த விழுதையும் வாழைப்பூவுடன் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் கழுவிய கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு சேர்த்து பிசறி கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு எண்ணெய் காய விடவும்
அரைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் பரப்பவும் எண்ணெய் காய்ந்த பிறகு தீயை மிதமாக வைத்து பத்து பத்து உருண்டைகளைப் போட்டு பிரட்டி பிரட்டி விட்டு நன்கு பொன்னிறமாக வந்ததும் பரிமாற எடுத்து வைக்கவும்.

தீயை அதிகமாக வைத்து பொரித்தால் வெளியே வெந்துவிடும். உள்ளே வேகாமல் இருக்கும். சும்மாவே எடுத்து சாப்பிடலாம். இது நெய் சாதம் சாம்பார் ரசம் தயிர் சாதத்துடனும் கலவை சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். அருமையான சுவையில் அட்டகாசமாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த துவர்ப்புடன் கூடிய வாழைப்பூவை சோம்பல் படாது வாரம் ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.
அன்பாய் செய்து அழகுடன் பரிமாறி ஆசையாய் சாப்பிட்டு மகிழுங்கள். மீண்டும் மற்றொரு செட்டிநாட்டு ரெசிபியுடன் உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.
என்றென்றும் அன்புடன் உங்கள்
... மணிமா நன்றியுடன்.
(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் ... மணிமா .. என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
நான்கு முழம் நீளும் நாக்கு!
Manima Chettinadu Recipes: தின்னத் தின்னத் தெவிட்டாத வாழைப்பூ பந்து!
வெறும் பேச்சிலர் கூடாது!
பப்பாளி .. ஒரு நிமிடக் கதை (57)
பொங்கல் பண்டிகை 2027: சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்
“ஒரு பக்கெட் தண்ணீரைக் கூட கர்நாடகாவால் நிறுத்த முடியாது” - துரைமுருகன் திட்டவட்டம்
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
நீடிக்கும் சர்ச்சைகள்- சிக்கும் எம்எல்ஏக்கள் - முதல்வர் விஜய் என்ன செய்ய வேண்டும்?
நம்மைக் காக்கும் காவல் தெய்வம்.. என் உயிர்த் தோழன்!
{{comments.comment}}