- சுதா திருநாராயணன்
என்னுடைய 18ம் வயதில் நடந்த சம்பவம் இது. என் பெற்றோர் புணே என்றும் பூனா என்றும் அழைக்கப்படும் புண்ய நகரத்தில் வசித்து வந்தனர்.
நான் PUC எனப்படும் புகுமுக வகுப்பை முடித்து BA முதல் வருடத்தில் காலெடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். கோடை விடுமுறைக்கு மும்பையிலிருந்து (அப்போது பம்பாய்) என் அத்தையின் பெண்கள் வந்திருந்தனர்.
முதல் நாள் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்துப் போனேன். அத்தையின் பெரிய பெண் ரமா ஒன்பதாவது வகுப்பு, அடுத்தவள் ராதா எழாம் வகுப்பு. இருவரும் நிறைய விஷமங்களுடனும், விளையாட்டு பொருட்களுடனும் வந்து சேர்ந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ள மராட்டி, குஜராத்தி பெண்கள், பையன்கள் எல்லோரும் ஜமா சேர்ந்து ஒரே கொட்டம் தான். ஒரு நாள் எல்லோரும் சேர்ந்து பிக்னிக் போகலாம் என தீர்மானித்தோம்.
புணே நகரின் மையத்தில் உள்ள ‘சனிவார் வாடா’ என்ற வீர சிவாஜி கட்டிய கோட்டைக்கு போகலாம்
என முடிவு செய்து எல்லோருடைய ஒப்புதலும் கிடைத்த உடன் மாஸ்டர் பிளானை செயலாற்றத் துவங்கினேன்!

நான் தானே லீடர்! வாண்டுகளின் பெற்றோர்கள் எல்லோரிடமும் முதலில் சம்மதமும் பின்னர் பஸ் காசு
பேல் பூரி வாங்குவதற்கு காசும் திரட்டினேன். நண்டு, சிண்டு, நார்த்தங்காய் என சுமார் 15 சிறுவர், சிறுமியர்
நான் வரேன் நான் வரேன் என்று வந்தனர். என் அம்மா செய்து கொடுத்த பட்சணம் மற்றும் நான் போட்ட
கண்டிஷன்கள் சகிதம் குஞ்சுகள் புடைசூழ கோழி போல கிளம்பினோம்.
யாரும் யாரையும் அடிக்கக் கூடாது, கிள்ளக் கூடாது, தூக்கிக்க சொல்லி நச்சரிக்க கூடாது, ஒருவருக்கு 2 முறுக்குகள் மட்டுமே வழங்கப்படும் போன்ற என் ஆணைகளுக்கு உட்பட்டு குழந்தைகள் சமர்த்தாக வந்தனர். மாலை மங்கும் வரை சனிவார் வாடா கோட்டையில் ஆசைதீர கொட்டம் அடித்து விளையாடினோம். திரும்பிப் போக மட்டும் பஸ் சார்ஜ் வைத்துக் கொண்டு (அப்போது மினிமம் பஸ் சார்ஜ் 10 பைசா, அரை டிக்கட் 5 பைசா. என் குழுவில் இருந்தது முக்கால் வாசி அரை டிக்கெட் தான்) ஆசை தீர பேல்பூரி, ஐஸ்ஃப்ரூட், எல்லாம் வாங்கி தின்றோம்.
கிளம்பும் தறுவாயில் ரமா “ஏய், அங்க பாரு என்னமோ இருக்கு நாம பார்க்கவே இல்ல” என்று கூவிக்கொண்டு புதர் போல் இருந்த பகுதியை நோக்கி ஓடினாள். அங்கே சுவர் இல்லாத கிணறு ஒன்று, “எட்டிப் பார்க்காதே” என்று நான் எச்சரிப்பதற்குள் அவள் கிணற்றை எட்டிப் பார்த்து கால் தடுமாறி தொபீல் என்று கிணற்றினுள் விழுந்து விட்டாள். என்
சர்வாங்கமும் ஒடுங்கியது. உடல் நடுங்கத் தொடங்கியது.
“கோயீ ஹை, பச்சாவ், பச்சாவ்”( காப்பாற்றுங்கள் ) என பலம் கொண்டமட்டும் கூவினேன். “ரமா ஏதாவது செடி இருந்தா பிடிச்சுக்கோ” என கத்தினேன். அவசரமாக மற்ற குழந்தைகளை தள்ளி நிறுத்தி ”இங்கிருந்து அசையக் கூடாது” என உத்தரவிட்டேன்.
அதற்குள் என் கூச்சலையும், குழந்தைகளின் அழுகையையும் கேட்டு ஓரிருவர் ஓடி வந்தனர். அதில் ஒருவன்
வாலிபன். அவன் உடனே தைரியமாக கிணற்றில் குதித்து ரமாவை தூக்கி வந்து விட்டான். ஆழம், தண்ணீர்
இரண்டுமே கிணற்றில் அதிகம் இல்லாததால் இறைவன் அருளால் விபரீதம் ஏதும் நிகழவில்லை.
ஆனால் கிணற்றில் பாம்பு இருந்ததாக இருவருமே கூறினர். கடவுளுக்கும் வாலிபனுக்கும் நன்றி சொல்லிவிட்டு
எல்லோரும் கிளம்பினோம். மராட்டிக் குழந்தைகள் வீட்டில் யாரிடமும் நடந்ததை சொல்ல வேண்டாமென
கெஞ்சி கேட்டுக் கொண்டனர். அப்பா ரொம்ப திட்டி அடித்து விடுவார், அப்புறம் விளையாடவே போக விடமாட்டார்
என்று கூறினர்.
நானும் என் வீட்டிலும் யாரிடமும் சொல்ல வேண்டாமென தீர்மானித்தேன். சொன்னால் வேறு எங்குமே போக விட மாட்டார்கள் என முடிவு செய்து குழந்தைகளையும் எச்சரித்து வைத்தேன். ஈர ஆடையுடன் இருந்த ரமாவை சாமர்த்தியமாக மறைத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று உடையை மாற்றச் செய்தோம். அந்நாட்களில் அதெல்லாம் மிகவும் கஷ்டம். வாசலில் அமர்ந்திருக்கும் எதிர்வீட்டு பாட்டி, என் பாட்டி இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவுவது என்பது அகட விகட சாமர்த்தியம்.
ஆனால் என்ன பயன்! பயத்தினால் அன்றிரவு ரமாவிற்கு ஜுரம் வந்து என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது. பிறகென்ன! எனக்கும் முதுகில் விழுந்தது நல்ல மொத்து பூசை. “பயந்த குழந்தைக்கு கொழுமோர் காச்சிக்
கொடுத்திருந்தா ஜுரமே வந்திருக்காது” என இடித்தாள் அம்மா.
அதன் பிறகு விடுமுறை முழுவதும் இண்டோர் கேம்ஸ் விளையாடியே கழித்தோம். மதிய வேளைகளில்
அம்மா எல்லோருக்கும் கையில் தயிர் சாதம் பிசைந்து போடுவாள். அப்போது ஆண்டாள் அருளிய திருப்பாவை
முப்பது பாசுரங்களையும் தானும் சொல்லி எங்களையும் சொல்ல வைப்பாள். அப்போது கற்றது இன்னும்
மறக்கவில்லை.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
நண்டு, சிண்டு, நார்த்தங்காய் .. கிணற்றில் விழுந்த ரமா.. நடுங்கிப் போன சுதா!
நான்கு முழம் நீளும் நாக்கு!
Manima Chettinadu Recipes: தின்னத் தின்னத் தெவிட்டாத வாழைப்பூ பந்து!
வெறும் பேச்சிலர் கூடாது!
பப்பாளி .. ஒரு நிமிடக் கதை (57)
பொங்கல் பண்டிகை 2027: சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்
“ஒரு பக்கெட் தண்ணீரைக் கூட கர்நாடகாவால் நிறுத்த முடியாது” - துரைமுருகன் திட்டவட்டம்
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
நீடிக்கும் சர்ச்சைகள்- சிக்கும் எம்எல்ஏக்கள் - முதல்வர் விஜய் என்ன செய்ய வேண்டும்?
{{comments.comment}}