மழையே.. மழையே...வா.. வா!
- கவிஞர் க.யாஸ்மின் சிராஜுதீன்
இது மழைக்காலம்...!
மழையே.. மழையே... வா... வா... என சிறு வயதில் மழையில் விளையாடி மகிழ்ந்த தருணங்கள்... காகிதத்தில் கப்பல் செய்து மழைநீரில் மிதக்கவிட்டு அதன் பின்னாலே ஓடி மகிழ்ந்த தருணங்கள்... ஜில்லென்ற காற்றில் பனைஓலை காற்றாடி செய்து காற்றின் திசையில் ஓடி காற்றாடி சுற்றுவது கண்டு மகிழ்ந்த தருணங்கள்.. அப்பப்பா.... என்ன மகிழ்வான குழந்தைகளின் உலகம் என தன் குழந்தைப் பருவத்தை நினைத்து வியந்தாள் மகிழினி.
அப்போது ஜில்லென்ற காற்று வீசியது, மகிழினி நினைவலைகளில் இருந்து மீண்டு நிகழ்காலத்துக்கு வந்தாள். தற்போது மகிழினி குடும்பத் தலைவி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய். வாங்க... மழைக்காலம் மகிழினிக்கு சோதனையா...! இல்லை மகிழ்ச்சியா...! நீங்க என்ன நினைக்கிறீங்க வாங்க..! என்ன நடக்கிறது என பார்ப்போம்.
ஒரு கூரைவீடு, வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எதனால் ஆனது என்றால் தென்னங்கீற்றால் ஆனது. அதன் கதவு கோணிப்பையால் தைத்த திரைச்சீலை போன்றது, அதிலே குளிக்க ஒரு தடுப்பு தென்னங்கீற்றால் ஆனது. அதன் வாயில் பழைய புடவையில் தைத்த திரைச்சீலை. அதற்கு கூரை கிடையாது வானமே எல்லை, டாய்லெட் கிடையாது திறந்தவெளிதான், அடுப்பில்தான் சமையல்.
இப்ப ஓரளவு நீங்க அனுமானித்து இருப்பீங்க மழைக்காலம் மகிழினிக்கு மகிழ்ச்சியா...! இல்லை வேதனையா...! என்று. மகிழினி மகிழ்வாகத்தான் வாழ்கிறாள். வீட்டைப் பற்றி அவள் திருமணமானதில் இருந்து கவலைப்பட்டதே இல்லை, கணவரும், குழந்தைகளும்தான் அவளது உலகம் என வாழ்ந்து வந்தாள். மாமியாரையும் பார்த்துக் கொண்டாள். சின்னஞ்சிறிய கூடு என்றாலும் இன்பம் பொங்கும் வீடு.
சரி.. சரி.. வாங்க.. அப்புறம் என்னாச்சுனு பார்ப்போம்.
இடியும், மின்னலும், மழையும் என இரவு வானம் நடுங்கவைக்கிறது. மண்வாசம் மழையின் சுவாசம் இன்பத்தை அளிக்கிறது. சரி படுக்கலாம் என பார்த்தால் வீட்டின் உள்ளே மழை ஓடி விளையாடுது. அட இது என்னடா என அந்த ஓட்டையில் கோணிப்பை வைத்து அடைக்க, இன்னொரு பக்கம் மழைநீர் எட்டிப்பார்க்குது. அதை தடுக்க ஒரு கிண்ணம் வைத்தாள்.
இப்படியே மழைநீர் எங்கு வீட்டிற்குள் எட்டி பார்க்கிறதோ அங்கெல்லாம் எதை எதையோ வைத்து அடைத்துவிட்டு அப்பாடா... என மூச்சுவிட்டாள் மகிழினி. சரி.. என்று படுத்துக்கொண்டு மேலே பார்த்தாள். சிகப்பு கருப்பு வண்ண மரவட்டைகள் மேய்கின்றன. அதையெல்லாம் கீழே தள்ளி வெளியே எடுத்துப்போட்டாள்.
இது என்னங்க இத விட கதவை திறந்து வைத்தால் இரயில் போன்ற பெரிய மரவட்டைகளும் வரும் (காட்டுமரவட்டை என்பர்). மகிழினி மகள் முதல்முறை இதை பார்த்து எப்படி அழுதாள் தெரியுமா? ரொம்ப பயந்துட்டா சின்ன குழந்தை இல்லையா.
இது என்னங்க இன்னும் இருக்கு பயங்கரமா...! பாம்புகள் கூட வருங்க.. எல்லாவற்றையும் சமாளிச்சாதான் வாழ்க்கையே.. சரின்னு திரும்பி பார்த்தா பெரிய தேள் கருப்பா பயங்கரமா. அத தூக்கி வெளியே போட்டுட்டு படுக்கலாம்னு பார்த்தா எறும்புகள் சாரைசாரையாக எங்கேயோ கிளம்பிடுச்சிங்க. போறவங்க மேலே கூரையிலேதானே போகணும். அதைவிட்டுட்டு மேலே இருந்து தொப்பு தொப்புனு எல்லார் மேலேயும் விழுதுங்க. போச்சி, இன்னிக்கு தூங்கின மாதிரிதான்.
அதுவும் கருப்பு எறும்புங்க.. மிசு மிசுன்னு மேலேயே ஏறும் தூக்கம் வருமா.. என்னடா.. கொடுமை..! இது நான் மாடிவீடு கட்டி அங்க வாழும்போது இது எல்லாம் ஒரு நினைவாக இருக்குமில்ல. அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என கற்பனையில் மிதந்தாள் மகிழினி. மழை நின்னா அந்த கூரையில் இருந்து சொட்டும் சிறு துளிகளின் ஓசை இருக்கே இனிய இசையாக ரசிப்பாள் மகிழினி.
துன்பமாக இருந்தாலும் இன்பம் பொங்கும் பூமிதான் கூரைவீடு. காலைல எழுந்திருச்சி வானத்த பாத்து கேட்பாள் மகிழினி என்ன நீ ஒண்ணும் தெரியாத மாதிரி இருக்க இரவு முழுக்க என்ன அட்டகாசம் பண்ண நீ, இடி, மின்னல், மழைன்னு நீயா அது...? அதுவா நீ...? என்பாள்.
இது மாதிரிதான் ஒருமுறை நல்ல பாம்பு குட்டி மகிழினி கையில ஏறிடிச்சி. மரவட்டைனு நெனச்சி தள்ளிவிட்டுட்டா. சரி என்னவா இருக்கும்னு பார்த்தா பாம்பு. மகிழினிக்கு ஒன்னும் புரியல. தொட்டில்ல தூங்குற குழந்தைய எடுக்கிறதா, வெளிய ஓடி போறதான்னு. இது மாதிரி நிறைய மழைக்கால அனுபவங்கள் மகிழினிக்கு இருக்குங்க.
அப்போது, தீடீரென ஒரு குரல் கேட்டது. அது அவளின் கணவர் குரல், "மகிழினி... மகிழினி... எழுந்திரி... மணி ஆறு ஆகுது. மழை விடாம இரவில் இருந்து வெளுத்து வாங்கிட்டு இருக்கு நீ தூங்கிகிட்டு இருக்க" என்றார்.
மகிழினி பஞ்சு மெத்தையில் பெரிய போர்வைக்குள் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி கடிகாரத்தைப் பார்க்கிறாள் மணி ஆறு. மாடிவீடு கட்டி புதுவீட்டிற்கு குடிவந்ததில் இருந்து மழைக்காலத்தை ரசிக்க முடியல. கூரைவீட்டு மழைக்காலத்தை தான் நினைத்து ரசிப்பாள் மகிழினி.
நான் மாடிவீடு கட்டி குடிபோயிட்டா அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்னு கனவு கண்டா இல்ல மகிழினி அது நிஜமா நடக்குது. கூரை வீட்ல எப்படி வாழ்ந்தான்னு கனவு காண்கிறாள். ஆனா மழைக்காலத்தை ரொம்ப மிஸ் பண்றதா ஒரு பீலிங் மகிழினிக்கு. ஏன்னா...! மழை வர்றது கூட தெரியமாட்டேங்குது மாடி வீட்ல. வெளியே போய் பார்த்தால் தான் தெரியும் மழை வருவது.
எந்த வாழ்க்கையும் குறைவானது கிடையாதுங்க. கடவுள் யாருக்கு என்ன என்று படைத்தாரோ அது நிச்சயம் அவரை வந்து சேரும். அது நம்ம உழைப்பின் வேகத்தைப் பொறுத்து சீக்கிரமாகவோ , மெதுவாகவோ கிடைக்கும். இதை உணர்ந்த மகிழினி கடவுளுக்கு மனமுருகி நன்றி கூறினாள்.
மழைக்கால நினைவுகளை அசைபோட்டு மகிழ்ந்தாள். இடி, மின்னல், மழைக்கு பின் அழகிய பலவண்ண வானவில் அனைவரின் வாழ்விலும் பிரகாசமாக ஒளிவீசும் அப்படின்னு மகிழினி தனக்கு கிடைத்த அனுபவத்தை நமக்கு கூறுகிறாள்.
ஆமாங்க.. உண்மைதான். துயரங்களுக்குள் இன்பத்தை ஒளித்து வைத்திருக்கிறார் கடவுள். நம்பிக்கைதான் வாழ்க்கை. நம் வாழ்க்கை உயர்வானது, நம்பிக்கையோடு அடி எடுத்து வைப்போம், வளமாக வாழ்வோம். மழைக்காலம் நமக்கு வரம். மழைநீர் சேகரிப்போம்...! நிலத்தடிநீர் காப்போம்...!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)