Short Story: "மே...மே"

Su.tha Arivalagan
Oct 05, 2026,01:14 PM IST

- கா. காயத்ரி தேவி


செல்வி வீட்டின் அருகாமையில் இருந்து இந்த சத்தம் கேட்டது. மே...மே.. சத்தம் வந்த திசை நோக்கிச் சென்ற போது பக்கத்து தோட்டத்தின் முள்வேலியில் கம்பிக்கிடையில் மாட்டிக் கொண்டு, வெள்ளை என்பது கொஞ்சம் கூட இல்லாத அழகான கருப்பு ஆட்டுக்குட்டி மே...மே... என்றவாறு கீரிய காயத்தோடு கத்திக் கொண்டிருந்தது.


அருகில் சென்றவள் பரிவோடு அதைக் கையில் எடுத்து பின் மெதுவாக வருடிக் கொடுத்தாள். நன்றி நிறைந்த கண்களில் நீர் செருகியவாறு என்னைப் பார்த்து மீண்டும் சத்தமிட்டது மே...மே... 

     

உரியவரிடம் சேர்க்க விசாரித்ததில், அது மாமா வீட்டு ஆட்டுக்குட்டி என்ற விவரம் தெரிய வந்தது.அவள் ஒப்படைத்த அடுத்த ஒருசில வினாடிகளில் அது வெட்டும் பலகைக்கு சென்று விட்டது. அறுக்க வெட்டும்போது முட்டிக்கிட்டு ஓடிருச்சுமா கண்ணு என்றார் மாமா.




இப்போது ஆட்டுக்குட்டியின் முகத்தில் அதே நீர் செறிந்த கண்களில் பதில் மட்டும் வேறொன்றை உணர்த்தியது. இதற்காகவா என்னை காப்பாற்றினாய் மே...மே... 


விறுவிறுவென்று வீட்டை நோக்கி சென்று விட்டாள்.மூன்று மணி நேரம் கழித்து மாமாவின் அன்புப் பரிசாய் தூக்குச் சட்டையில்,கொதிக்க கொதிக்க குழம்பு வந்தது.மூடியை நீக்கிய போது அதில் மிதந்த எண்ணெய் படலத்தில் ஆட்டுக்குட்டியின் முகம் தெரிந்தது.விடுக்கென்று மூடிவிட்டாள் மூடியை.அந்த நாளை சைவ நாளாய் மாற்றியது இந்த மே... மே.. சத்தம்.


(கரூர் மாவட்டம், வெள்ளையம்பட்டி கா.காயத்ரி தேவி (காயுகேசவ்), இடைநிலை ஆசிரியர். ஊ.ஒ.தொ.பள்ளி சோழதாசன்பட்டி, அரவக்குறிச்சி ஒன்றியம், கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். 14 வருடம்  ஆசிரியர் பணி அனுபவம். கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வலர். தமிழ்த்தடாகம் இலக்கியக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட கவிதை தொகுப்புப் புத்தகங்களில் கவிதைகளை எழுதியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் வானொலிப் புரவலராகவும், கவிதைகளைத் தொடர்ந்து எழுதியும் வருகிறார். தனது பள்ளி பணி அனுபவத்தில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளார்)