பேசும் தெய்வம்

Oct 05, 2026,12:54 PM IST

- வே.ஜெயந்தி நாகராஜன்

 

அஞ்சலியும் தம்பி அகிலனும் தினக்கூலியில் தினந்தோறும் இரண்டு கிளாஸ்கோ ரொட்டிப் பொட்டலத்தைக் கையில் பிடித்து வரும் பெற்றோருடன் கிராமத்தில் வாழும் சிறிய குடும்பத்தினர். மண் சுமந்த கூலியில் உறவுகளைப் பேணிடும் இனிய அம்மா,  கள்ளங்கபடமற்ற அன்பான அப்பா. 


நாட்கள் நகர பிள்ளைகளும் வளர பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து பயம் அறியா அப்பா. மண்ணெண்ணெய் விளக்கில்  கற்றிடும் பாடம் ஊரடங்கும் வரை. பின் வீட்டின்முன் உயர்ந்த மின்கம்ப விளக்கில் தூங்கும் அப்பாவின் துணையோடு தனக்குத் தெரிந்த பாணியில் பாடம் படித்திடுவாள் அஞ்சலி. தன்னோடு பயிலும் சக தோழமைகளின் புத்தகமானதால் அவர்கள் கேட்கும் பொழுது கொடுக்க வேண்டுமே என்பதால் தேர்வு நாள் மட்டுமே கிடைக்கும் நோட்ஸ் அது.


அஞ்சலியும் சக தோழிகள் நால்வரும்  ஆக பத்தாம் வகுப்பு தேர்வில் உள்ளூரில் குடியிருக்கும் வி பி சிங் என குழந்தைகளால் பெயர் சூட்டப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் துணையோடு எழுதி முடித்தனர். தேர்வின்முடிவும்  வந்தது. அஞ்சலியும் அண்ணன் ரமேஷ்  மட்டுமே  தேர்ச்சி. ஊர் களை கட்டியது. உலக சாதனையென ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் வி பி சிங்கின் பாராட்டோடு .




பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து ஆசிரியர் பயிற்சியில் தன் பிள்ளையும் ஆசிரியராக வேண்டும் என்பது அப்பாவின் அக்கறை மற்றும் அம்மாவின் ஆசை. ஆகவே அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பயில்வதற்கு பணம் கட்ட வேண்டும். பணத்திற்கு உதவியது அஞ்சலியின் பாட்டி. பாட்டியின் பணத்தைக் கொண்டு பள்ளியின் தாளாளரைச் சந்திக்க அப்பா அஞ்சலியை அழைத்துச் சென்றது தான் அவளின் முதல் அனுபவம். அப்பாவோடு சென்று அஞ்சலியை பார்த்த தாளாளர் குறைந்த தொகையில் படிக்கும் அனுமதி வழங்கியது தான் அவள் வாழ்நாளில் பெற்ற பெரிய உதவி.


இரண்டு ஆண்டுகளில் பயிற்சியை முடித்து, தேர்வினை எழுதிவிட்டு, முடிவினை எதிர்பார்த்துக் கொண்டு, தனக்குக் கிடைத்த கூலி வேலையோடும் சகத் தோழமைகளோடு அரட்டை அடித்துக் கொண்டும் ஊருக்கு அருகில் உள்ள சிறிய ஓடையில் மரங்களும் மணலும் நிறைந்த பசுமைப் சூழலில் இனம் புரியாது சந்தோஷத்தில் தினமும் ஆடு மேய்த்துக் கொண்டும் சக தோழமைகளோடு  திரைப்பட கதைகளைத் தத்ருபமாக பேசியும் மகிழ்ந்த காலங்கள் மட்டற்ற மகிழ்ச்சியை அஞ்சலிக்குத் தந்தது .


தேர்ச்சி முடிவில் ஆங்கிலப் பாடத்தில் அஞ்சலி தோல்வியைத் தழுவியதால் செய்வதறியாது  தன் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து சகத் தோழமைகளோடு மில் தினக்கூலிக்கு புறப்பட்டாள் அஞ்சலி. பேருந்து ஏறுமுன் அப்பாவின் கண்டிப்பைக் கூறித் தடுத்த பெரியம்மாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வீட்டிலேயே முடங்கினாள் .

தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் எண்ணம் அவள் மனதில் தோன்றவில்லை. அங்கன்வாடி பள்ளி தேவ கிருபை டீச்சர் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்க அஞ்சலியைத் தூண்டினார். விண்ணப்பித்த சில தினங்களில் படித்த பள்ளியில் இருந்து செய்தியை சுமந்து வந்தது 25 பைசா அஞ்சலட்டை. 


அட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு அஞ்சலியும் அப்பாவும் பள்ளிக்கு விரைந்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்  தோல்வி அடைந்த மதிப்பெண் சான்றிதழைத் தர வேண்டும் எனவும் அதை தேர்வு இயக்கத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும்  கூறினார்.  சான்றிதழைத்  தேர்வு எழுதும்விண்ணப்பத்துடன் அனுப்பிவிட்டேன் என அஞ்சலி கூறியதும், அதற்கு அவர் அச்செய்தியைத் தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறினார். 


தளர்ந்த மனதோடு தரையில் நடந்த போது, பள்ளியின் எழுத்தாளர் பிச்சை அவர்கள் அஞ்சலியை அழைத்து  மதிப்பெண் சான்றிதழ் நகல் வைத்துள்ளாயா என வினவினார், வைத்துள்ளேன் என்று கூறினாள். அந்த நகலை வைத்து ஒரு தபால் எழுதித் தலைமையாசிரியரிடம் கொடுத்து விட்டுச் செல்லக் கூறினார்.  எழுத்தாளர் கூறியது போலவே அவர் சொல்லச் சொல்ல ஒரு தபால் எழுதி, நகலினை அதோடு இணைத்துத் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தாள் அஞ்சலி.


சில தினங்களில் சக தோழமைகளுக்குத் தேர்வு எழுதும் நுழைவுச்சீட்டு வந்தது. அஞ்சலிக்கு நுழைவு சீட்டு வரவில்லை.அப்பாடி ஆங்கிலத் தேர்வினை இப்போது எழுதத் தேவை இல்லை என  எண்ணிய அஞ்சலி மகிழ்ந்தாள். ஆனால் வெளிக்காட்டி கொள்ளவில்லை.  மகிழ்ச்சியின் காரணம் அது ஆங்கிலத் தேர்வு அல்லவா...?


அப்பாவால் தன் மகளுக்கு நுழைவுச்சீட்டு வரவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேர்வுக்கு முதல் நாளும் தேர்வு நாள் என்றும் அஞ்சலியை அழைத்துக் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நகரத்திற்குச் சென்றார். நகரத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தன் மகளின் மாதிரி மதிப்பெண் சான்றிதழைக் காட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த படிவத்தின் நகலையும் காட்டி எப்படியாவது தேர்வு எழுத வைத்து விட வேண்டும் என்பது அவரது எண்ணம். 


ஒவ்வொரு பள்ளியிலும் விடுபட்டுள்ளதா என்பதைக் கேட்டது என்றுமே அஞ்சலியால் மறக்க முடியாது. அப்பாவின் ஆசை நிறைவேறவில்லை என்பது அஞ்சலியின் அமைதியான மனதுக்கு வலித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் இருந்தாள். ஒரு வழியாகத் தேர்வு தொடங்கியதால் இனி எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்த பின் அப்பா, அஞ்சலியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டில் மீண்டும் 25 பைசா அஞ்சலட்டையில் காத்திருந்த செய்தி... தாங்கள் பள்ளிக்கு வாருங்கள் என்பது மட்டுமே. காரணம் என்ன செய்தியாக இருக்கும் என்பதை அறிய முடியவில்லை.


ஒரே பதற்றமாக இருந்தது. உடனே அஞ்சல் அட்டையைப் பெற்றுக்கொண்டு, அஞ்சலியையும் அழைத்துக் கொண்டு படித்த பள்ளிக்குச் சென்றார் அப்பா . காத்திருந்தது இனிய செய்தி. அஞ்சலியின் வாழ்க்கைக்கு உதவும் செய்தி. அஞ்சலி தோல்வி அடைந்த பாடத்தில் மீண்டும் தேர்ச்சி என புதிய மதிப்பெண் பட்டியல் எடுத்து அஞ்சலிடம் கொடுத்தார் தலைமை ஆசிரியர். அதைப் பெற்றுக் கொண்ட அஞ்சலிக்கு எப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்பது தெரியவில்லை; கையொப்பமிட்டு விட்டு மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தவள், நேராகச் சென்று எழுத்தாளரின் அறைக்குச் சென்று  இருகரம் கூப்பி கண்ணீர் மல்க...பேசும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தினாள்.


(கரூர் மாவட்டம், வெள்ளையம்பட்டி திருமதி வே.ஜெயந்திநாகராஜன் தலைமை  ஆசிரியர். ஊ.ஒ.தொ.பள்ளி  ஆண்டிபட்டி, அரவக்குறிச்சி ஒன்றியம், கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். 29 வருடம்  ஆசிரியர் பணி அனுபவம், கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வலர். தமிழ்த்தடாகம் இலக்கியக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட கவிதை தொகுப்புப் புத்தகங்களில் கவிதைகளை எழுதியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் வானொலிப் புரவலராகவும், கவிதைகளைத் தொடர்ந்து எழுதியும் வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்