ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

Su.tha Arivalagan
Sep 22, 2026,04:53 PM IST

சென்னை : ஜெம் கிரானைட் நிறுவனத்தின் நிறுவனரான வீரமணி மீதான சிறார் பாலியல் வன்கொடுமை (போக்ஸோ) வழக்கு, மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணையை காவல்துறை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 


முன்னாள் ஊழியர் கணேசன் கைது:


இவ்வழக்கின் தொடர்ச்சியாக, ஜெம் கிரானைட் நிறுவனத்தில் முன்பு பணியாற்றி வந்த கணேசன் என்பவரைப் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தொழிலதிபர் வீரமணி தொடர்பிலான முக்கிய வீடியோ ஆதாரங்கள் கணேசனிடம் இருந்தும், அதை உடனடியாகக் காவல்துறையிடம் தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அந்த வீடியோவை அவருக்கு அனுப்பியது யார், இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் செயல்பட்டுள்ளனர் என்பது குறித்துக் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   


பிரகாஷுக்கு விபச்சார தடுப்பு பிரிவு சம்மன் :




மற்றொரு திருப்பமாக, SRMU தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அரசியல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ரூ.70 கோடி வரை செட்டில்மென்ட் செய்ய உதவி புரிந்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   


வழக்கின் பின்னணி :


சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வீரமணி (85), ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வீடியோ ஆதாரம் அடங்கிய பென் டிரைவ் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஏழை எளிய பின்னணி கொண்ட சிறுமிகளை குறிவைத்துச் சுரண்டப்பட்டதால், இவ்வழக்கில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் (SC/ST Act) சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதும், கண்ணையாவின் மகனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும் இவ்வழக்கின் வளையம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஜெம் வீரமணி விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரையும் விடக் கூடாது என முதல்வர் விஜய் நேற்று உத்தரவிட்டதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை மேலும் வேகமெடுத்துள்ளது. இந்த வழக்கில் வீரமணியை காப்பாற்றுவதற்காக அதிகாரிகள் பலருக்கும் ரூ.50 கோடி அளவிற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே போல் முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் இதில் தொடர்பு உள்ளதாக சொல்லப்படுவதால் இந்த விசாரணையின் முடிவில் பலரும் சிக்குவதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.