25 சீட் கொடுக்க முன்வந்தது திமுக.. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.. கிரிஷ் சோடங்கர்

Su.tha Arivalagan
Mar 01, 2026,03:22 PM IST
சென்னை: திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது எங்களுக்கு 25 தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வந்தது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களது கோரிக்கையைத் தெரிவித்துள்ளோம். அதை திமுக ஏற்கும் என்று நம்புகிறோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவும், திமுக குழுவும் நேற்று பேச்சு நடத்தியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பும் மனம் விட்டுப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து இன்று டெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளரிடம் சோடங்கர் கூறுகையில், எங்களது குழுவும், திமுகவின் குழுவும் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினோம். நாங்கள் சமர்ப்பித்துள்ள விருப்பப் பட்டியலை திமுக ஏற்கும் என்று நம்புகிறோம். 

தற்போது எங்களது முக்கிய முன்னுரிமை சட்டமன்றத் தேர்தல் தான். சட்டமன்றத்தில் எங்களுக்குப் போதிய உறுப்பினர்கள் இருந்தால்தான், எங்களது சொந்தக் கட்சி உறுப்பினரை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். திமுக தரப்பில் எங்களுக்கு 25 இடங்கள் ஒதுக்க முன்வந்தனர், ஆனால் அது எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாக அவர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றார் அவர்.



தமிழக வெற்றிக் கழகம் குறித்து சோடங்கர் கூறுகையில், தவெக ஒரு புதிய கட்சி. அவர்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்களிடையே அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே சமயம், அவர்களும் தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தையும், எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் செல்வாக்கையும் அங்கீகரிக்கிறார்கள்.

தற்போதைய நிலையில், திமுகவுடன் தான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் எங்களுக்கு என்ன தேவை என்பதை ஏற்கனவே அவர்களிடம் சமர்ப்பித்துவிட்டோம் என்றார் அவர்.

காங்கிரஸ் கட்சி 2021-இல் போட்டியிட்ட 25 இடங்களை விட இந்த முறை கூடுதல் இடங்களை எதிர்பார்க்கிறது. அதாவது 35 இடங்களுக்குக் குறையாமல் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைக் காரணம் காட்டி சீட்களைக் குறைத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸின், ஆட்சியில் பங்கு கோரிக்கையையும் திமுக தலைமை நிராகரித்து விட்டது.

சோடங்கரின் இன்றைய பேச்சைப் பார்க்கும்போது திமுகவின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை என்பதை உணர்த்துகிறது. இழுபறி நீடிப்பதையும் அது உணர்த்தியுள்ளது. மறுபக்கம், சகோதரர் என்று சொல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருப்பதும் கூட பல்வேறு யூகங்களைக் கிளப்புவதாக உள்ளன.