கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!
- ச.சித்ராதேவி
நம் கண்களில் ஏற்படும் கோளாறு உயர் ரத்த அழுத்தம், காதில் வரும் பிரச்சினை, மன அழுத்தம், வெயிலில் அலைதல் போன்றவற்றால் தலைவலி ஏற்படும். ஒவ்வாமை இருந்தாலும் சிலருக்கு தலைவலி ஏற்படும். தலையில் நீர் கோர்த்தாலும் தலைவலி ஏற்படும்.
இந்த தலைவலி குறைய ஒரு சூப்பரான பாட்டி வைத்தியம் இருக்கு. சிறு துண்டு வெள்ளரிக்காயில் 10 சிறகுகளை வைத்து சில நிமிடங்கள் நெருப்பில் சுட்டு எடுத்து பின்னர் அரைத்து நெற்றியில் பற்று போடலாம். சிறிது கற்பூரவல்லி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் விட்டு லேசாக சூடு செய்து பற்றும் போட்டு வர தலைவலி குறையும்.
இதுதவிர இன்னொரு வைத்தியமும் இருக்கு.. அதையும் பார்ப்போம்.
மகிழம் பூ, சுக்கு, சீரகம், ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை எல்லா பொருட்களையும் சேர்த்து பொடித்து கொள்ளவும். பின்னர் காலை மாலை அரை தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர வலி குறையும்.
உடம்பு சூட்டினால் ஏற்படும் வலியைப் போக்க செண்பக இலை, மேல் ஓமத்தை பொடி செய்து இலையின் மேல் தூவி அதை ஒரு துணியில் வைத்து தலையில் கட்டி வந்தால் வலி குறைந்து உடம்பு குளிர்ச்சி ஆகும்.
இதேபோல் வெற்றிலை சாறு எடுத்து அதனுடன் கிராம்பு அரைத்தும் பற்று போடலாம்.எல்லாப் பொருட்களும் நமக்கு எளிதாக கிடைக்க கூடிய வை தான். சுக்கு பற்றும் போடலாம்.
(இதுபோன்ற வைத்திய முறைகளைப் பின்பற்றும்போது உங்களுக்கு அலர்ஜி இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளவும். உரிய மருத்துவ ஆலோசனையின்படியே இதை மேற்கொள்ள வேண்டும்)
(ச.சித்ராதேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)