தேசிய கீதம் பாடப்படவில்லை.. சட்டசபையிலிருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்கப்படாததால் சட்டசபையிலிருந்து வெளியேறினா் ஆளுநர் ஆர். என். ரவி.
சட்டசபைக் கூட்டத் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாதது, ஆளுநர் உரையில் இடம் பெற்ற சில பகுதிகள் ஆகியவை காரணமாக, கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையைப் படிக்காமல் வெளியேறியிருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டும் அதேபோல நடந்துள்ளது.
முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. கூட்டத் தொடரை தொடங்கி வைப்பதற்காக சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆர். என். ரவி. சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வைத்தார். இதைத் தொடர்நது அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை வாசித்தார். பின்னர் ஆளுநரின் உரை படிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். அது குரல் ஆதரவு மூலம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் தொடரும் ஆளுநர் உரை விவகாரம் இந்த வருடமும் நீடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.