ஐயா அப்பத்தாவே ஆணிவேர் !

Su.tha Arivalagan
Oct 11, 2025,05:01 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


ஐயாவினால் வந்ததெங்கள் விலாசம் 

அப்பத்தாவினால் வளர்ந்ததெங்கள் பந்தபாசம் 

வந்ததும் வளர்ந்ததும் எங்கள் குலத்தை முன்னிறுத்த   

அவர் பெயரிட்ட பேத்தி  நான் இங்கு உறைக்க 


அப்பத்தா பொறுப்பேற்று  வீட்டைப் பராமரிக்க 

ஐயா நாட்டிற்கும் நல்வீட்டிற்கும் பெருமை சேர்த்தார் 

எதனையும் கலந்து பேசியே முடிவெடுப்பர்

இருவரும் தம் துணைவர் பேச்சையே முன்மொழிவர்


சிக்கனத்தையே கடை பிடிப்பார்  

அப்பத்தா சிந்தித்து தான் பேசுவார்  

புத்தியுடனே செயல் ஆற்றுவார்  

ஐயா இந்த புவனத்தையே ஈட்டுவார்   


வேட்டியும் வேர்வை பூத்த சட்டையும்

விளக்கியது ஐயாவின் உழைப்பை 

சுங்குடிச்சேலையும் சிவப்பு ரவிக்கையும் 

உணர்த்தியது அப்பத்தாவின் பொறுமையை 




வாழ்வின் நெளிவு சுளிவுகளை, அப்பத்தா

விடியற்காலையிலிடும் கோலம் முதல் கையாள்வார் 

கடமைகளை நன்கு ஆற்றியபின், ஐயா

அந்திப்பொழுதில் சற்று கவி பாடுவார் 


கண்ணாடியின்றி படித்த அப்பத்தாவின் கூர்மையென்ன !

மருந்தின்றி வாழ்ந்த ஐயாவின் மகத்துவமென்ன !

வேறு உதாரணமும் வேண்டுமோ !  வேர்களாய் இவர்களிருக்கையில் ;

எனக்கு நீங்களே இலக்கணம், உங்கள் வழி நடத்தலல்லாது மிளிருமோர் க்ஷணம் ?



(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)