புல்லும் காளானும்!
Mar 28, 2026,04:57 PM IST
- ஷீலா ராஜன்
வெண்மையான காளான்
மழை வந்த தருணத்தில் பிறக்கும்,
மண்ணின் மேல் மென்மையாக விரியும்;
ஒரு சின்ன நேரத்தின் சிரிப்பு,
சூடான நினைவாய் மறையும்…
புல்லின் வேர்
மண்ணுக்குள் அமைதியாகப் பிறக்கும்,
ஆழத்தில் நிழலாய் பிடியும்;
காலம் கடந்து நிற்கும் உறுதி,
காற்றிலும் குலையாத நம்பிக்கை…
காளான் அன்பு –
கண் முன்னே தோன்றும்,
ஆனால் சீக்கிரம் மாறும்;
ஒரு கணத்தின் இனிமை,
ஒரு நினைவின் மாயை…*
புல்லின் வேர் அன்பு –
கண் பார்க்காத இடத்தில் வளர்ந்து,
உள்ளத்தை முழுதாக பிடிக்கும்;
ஒரு வாழ்நாளின் துணை,
ஒரு உறவின் நிலைமை…
ஆனால் —
மனிதர் இடத்தில்
காளான் அன்பு வரக்கூடாது;
மழை போல் வந்து போகும் நேசம்
மனதை காயப்படுத்தும்…
புல்லின் வேர்போன்ற அன்பே வேண்டும்;
ஆழமாகப் பதிந்து,
எப்போதும் தாங்கி நிற்கும்
நிலையான பாசம் வேண்டும்!