தாயின் மணிக்கொடி பாரீர்!

Su.tha Arivalagan
Jan 26, 2026,12:52 PM IST

- ஆ.வ. உமாதேவி


பாடலை இயற்றியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆவார். இது அவரது மிகவும் பிரபலமான தேசபக்தி பாடல்களில் ஒன்றாகும். இதில் தமிழ்நாட்டின் கொடியை போற்றும் வரிகள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல் நமது இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் நாடாளுமன்றத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.


இப்பாடல் சுதந்திர இந்தியாவுக்கான கனவை, ஒளியுடன் கூடிய கொடியை கண்டு, வணங்கி, போற்றி, அதற்காக போராட மக்களை அழைக்கும் ஒரு உற்சாக அழைப்பாக அமைந்த பாடல் ஆகும். சுதந்திரம் அடைந்தே தீருவோம் என்ற உறுதியையும் பலம் கொண்ட நாட்டினரையும் ஒன்றிணைக்கும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது


இந்திய தாயின் கொடி  "மணி" என்னும் ஒளியை பொருந்திய கொடி என்று பாரதி கூறுகிறார். அந்தத் தாயின் மணிக்கொடியை தாழ்ந்து, பணிந்து, வணங்கி, போற்றி, புகழ்ந்து பாட வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். உயரமான கம்பத்தின் உச்சியில் "வந்தே மாதரம்" என்று அழகாக எழுதி சிகப்பு நிறத்தில் ஒளி வீசி பறக்கும் கொடியை காணுங்கள் (பாரதி காலத்து கனவு கொடி) என பாரதி கூறுகிறார்.


இப்பாடலில் இந்திய தாயின் கொடியின் பெருமையையும் அதற்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்து, போராட தயாராக இருக்கும் வீரர்களையும் போற்றும் வீரம் செறிந்த தேச பக்தி பாடல் ஆகும். 


தாயின் மணிக்கொடி பாரீர்! அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! 




எனத் தொடங்கும் இப்பாடல் தமிழகத்தில் சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாக்களில் கொடி ஏற்றியவுடன் பாடப்படும் பாடல் ஆகும். இப்பாடலை பாடும்போது நமக்குள் ஒரு பெருமிதமும் கர்வமும் ஏற்படும். இது நம் நாடு நமது கொடி என்ற பெருமிதம் நமக்குள் ஏற்படுகிறது. 


பாரதியின் பாடலை பார் முழுவதும் படித்தோர் எல்லாம் பண்பாய் பாடி இனிதே கொண்டாடுவோம் இக்குடியரசு திருநாளை. 


(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)