உத்தமனே ஶ்ரீராமா .. உனைக் கூவியழைத்தேனே!

Su.tha Arivalagan
Feb 02, 2026,09:52 AM IST

- கோ.அறிவுசெல்வி இராஜாராம்


உத்தமனே ஶ்ரீராமா 

உனைக் கூவியழைத்தேனே                        

சத்தமுன் காதில் விழவில்லையா கேசவனே                                                         

பித்தன் சிவன் போற்றிய நாமமுடையவனே                            

கத்தும் கடல் நடுவே கிடந்துறங்கும் நாராயணனே                    

எத்தனையோ ஜென்மங்களாய் செய்த பாவங்கள்                          

அத்தனையும் சேர்ந்தெனை வாட்டுதே                            

மொத்தமும் தொலையவே உனைத் துதித்தேன்                           

மெத்தனேனய்யா ஶ்ரீராமா உனக்கு




கண்ணனவன் வண்ணனவன்

சொந்தமவன் பந்தமவன்

எங்கு மவன் இங்குமவன்

ஏற்றமவன் ஊற்ற மவன்

போற்றியவன் தாள்களையே

பற்றுவோமே போற்றுவோமே!


குழந்தை ராமன் கழலடி பணிந்தேன்

நிழலவன் பதமென மனதினில் துதித்து           

மழலையின்பம் பெற்றோர்க்களுக் களித்த

குழலோனே பல்லாண்டு பல்லாண்டு


ஶ்ரீராம ஜெயமென்றார் 

சொல்லின் செல்வர்

ஆராவமுதன் அரக்கன் ராவணனை வென்றதை                  

ஓராயிரம் பெயர் கொண்ட கேசவன் நாமத்தில்

ஶ்ரீராம நாமமே சிறந்ததென மும்மைசால் உலகுக்குமே இராமனே!


தசாவதாரமதே

தசாவதாரமதே

தாரணி உய்ந்திட

தமர்கள் கொண்டாடிட

பாரதில் பக்தர்கள் பாகவதராகிட


மீனானானே மீட்டனன் வேதம்

தானேஆமைதான் தந்தான்அமுதம்

கேழலாய் பூமித்தாய் காத்தான்

அணைத்தே


அனல்விழி அரிநரன் அந்தியவதாரம்

அதிதியின் வாமனன் அடியளந்தவனே

அரசர்க்கெதிரியாய் பரசுராமனே


அரசன் இராமனாய் அரக்கரையழித்தான்

பலராமனுடனே பாலகிருஷ்ணனே பாரதகீதை நாயகனவனே

கலிதீர்த்திடவே கல்கியுமாவான்

களியூட்டிடுவான் கண்ணனவன்தான்...!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)