தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!

Meenakshi
Oct 21, 2025,05:24 PM IST

சென்னை: தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார்.


கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.




இந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.


மேலும், மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம் என்றார். மேலும் தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் முகாம்களை தயார் படுத்தவும், அந்த முகாம்களில் குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள்  உள்ளிட்ட அத்தியாவசிய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். அத்துடன் மக்கள் மழையால் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.


எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை:


இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள  ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வடக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதில், 8 மாவட்டங்களுக்கு இன்றும், 4 மாவட்டங்களுக்கு நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.


பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.