23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகியுள்ள 2வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும். இது 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.