நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள வா வாத்தியார் திரைப்படம். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷல்பா, மஞ்சுநாத், கருணாகரன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரீலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் கடந்த 2014ம் ஆண்டு திவாலானவர் என அறிவித்தது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் இடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் அவர் தயாரித்த வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவும் உத்தரவிடக் கோரி சொத்தாட்சியர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.