புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலின் தல வரலாறு
-ந. லட்சுமி
பிரெஞ்சுக்காரர்களின் காலத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே இங்குள்ள விநாயகர் "மணல் குளம்" அருகே கரையில் அமைந்து அருள் பாலித்து வந்தமையால், இங்குள்ள விநாயகர் கோவிலுக்கு இத்தகையப் பெயர் வந்தது. மேலும், பிரெஞ்சுக்காரர்கள் இங்குள்ள விநாயகர் சிலையை கடலில் பல முறை தூக்கி வீசியபோதும், அவர் மீண்டும், மீண்டும் கரைக்குத் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
பிரெஞ்சுக்காரர்களே விநாயகரின் மகிமை உணர்ந்து, விநாயகரை வழிபட்டனர் என்று கூறப்படுகிறது. பிரெஞ்சுக்காரர்கள் வழிபட்டதனால் விநாயகரை
"வெள்ளைய் பிள்ளை" என அழைத்தாக கூறுகின்றார்கள். சிலர், மணல் குளத்தில் இருந்து விநாயகர் சுயம்புவாக எழுந்தருளியதாக் கூறுகின்றார்கள். மணல் குளம் அருகில் கோவில் அமைந்ததாலும், மணலில் இருந்து சுயம்புவாக விநாயகர் எழுந்தருளியதாலும், இக்கோயிலுக்கு "மணக்குள விநாயகர்" என்ற பெயர் அமைந்தது என்று மக்கள் கூறுகின்றனர்.
இத்தலச் சிறப்பு என்று பார்த்தால், விநாயகர் சுயம்பு மூர்த்தியாகத் திகழ்கிறார். விநாயகருக்கு தங்கக் கோபுரம், திருக்கல்யாணம் நிகழ்வு போன்றவை இங்கு நடைபெறும் சிறப்பு விழாக்கள் ஆகும். மேலும், தொல்லைக் காது சித்தரின் சமாதி இங்குள்ளது. இங்கு பல சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறனர்.
இருப்பினும் மணக்குள விநாயகரின் அருளாலும் ஆற்றலாலும் கவரப்பட்ட தொல்லைக் காது சித்தர் விநாயகரை மனமுருக வழிபட்டு அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறுகின்றார்கள். கோவில் அருகிலேயே தொல்லைக் காது சித்தர் சமாதியானதாக சொல்கின்றார்கள். ஆதலால் கோவில் சுற்றுப்புறத்திலேயே அவர் சமாதி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகே இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கின்றது என்று கூறப்படுகிறது.
மணக்குள விநாயகர் ஆலயத்தின் மிகவும் சிறப்பாக கூறப்படுவது, விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம், இந்தியாவில் இந்தத் தலத்தில் மட்டுமே உள்ளதாக கூறுகின்றார்கள். மேலும் தங்கத்தேர் மற்றும் வெள்ளி தேர் இவற்றில் சுவாமி திருக்கோயிலை வலம் வருவார் என்று கூறப்படுகிறது. தங்கத் தேரும் வெள்ளி தேரும் வைத்திருக்கும் கண்ணாடி அறைக்கு வெள்ளியில் கதவு அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பாக காட்சி தருகிறது.
மேலும், இக் கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிலும் பல்வேறு விநாயகர் சுதைச் சிற்பங்களும், விநாயகர் மந்திரங்களும் இடம்பெற்று இருக்கின்றன. கோவிலின் சுற்றுச் சுவர்களில் பல்வேறு வண்ண ஓவியங்கள் இடம்பெற்று இருக்கின்றன. கோவிலின் மேற்கூரையில், பல்வேறு வண்ணங்களில் கண் கவரும் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன. முருகன் ஓவியம், திருக்கல்யாண ஓவியம் என பல்வேறு ஓவியங்கள் இடம் பெற்று இருக்கின்றன. 27 நட்சத்திரங்களின் ஓவியமும் அமைந்துள்ளன.
பிரம்மச்சாரியாகக் கருதப்படும் விநாயகருக்கு, இங்கு சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது என்றுக் கூறுகிறார்கள் .இத்தலம் புதுச்சேரியின் வரலாற்றுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்றும், மிகவும் அற்புதச் சக்தி பொருந்திய விநாயகர் என்றும் கூறுகின்றார்கள். வைணவம், சைவத்தவர் என இருதரப்பினருமே சிறப்பாக வழிபடும் ஆலயம் ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் ஆகும்.
முந்தைய காலத்தில் கோவிலுக்கு இடம் போதவில்லை என்று விநாயகர் பாண்டிச்சேரி அன்னையின் கனவில் தோன்றி, தன் கோவிலுக்கு இடம் வேண்டுமென்று கேட்டதாக ஓர் வரலாறு கூறப்படுகிறது. மகாகவி பாரதியார்,புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்தார் என்று வரலாற்று பதிவுகளில் காணப்படுகின்றன “முண்டாசுக்கவிஞன்’ பாரதி, இந்த விநாயகரை போற்றி, “நான்மணிமாலை” என்ற பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்திகள் ஆகும்.
(ந. லட்சுமி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)