மாடித் தோட்ட அலப்பறைகள்.. அவ்வப்போது மொக்கை வாங்கினாலும்.. மொட்டுக்கள் மலரும்போது.. ஆஹா!

Su.tha Arivalagan
Apr 01, 2026,02:52 PM IST

- எழுத்தாளர் சுசரிதா


சென்னை போன்ற பெரு நகரங்களின்  அடுக்குமாடி குடியிருப்புகள், புறா கூடு போன்ற சிறிய வீடுகளுக்கு மத்தியில் பல மாடித்தோட்டங்கள் முளைத்திருப்பதைக் காண முடிகிறது. அதன் பொருட்டு மாடித் தோட்டத்தில் வளர்ப்பதற்கு ஏற்ற செடி, கொடி, பழ வகைகள் என நர்சரிகள் களைகட்டுகின்றன. 


அரசும் ஊக்குவிக்க, செடி வளர்ப்பு பைகள், விதவிதமான ஸ்டாண்டுகள், உரங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் புதுப்புது யோசனைகளைப் பகிர்ந்துகொள்ள.. நல்ல விஷயம் தான்! 


நமக்கும் மாடியில் கொஞ்சம் இடம் இருக்க நாமும் களத்தில் குதித்தோம்.  ஆச்சரியமும் அதிசயமும் அவ்வப்போது அதிர்ச்சியும் கொடுக்கும், இது வேருலகம்! தனி உலகம்! என்பது புரிந்தது. இந்தப் பயணத்தில் நிறைய கற்றலும், சின்ன சின்ன மகிழ்ச்சிகளும், அட! என்னும் விசித்திரமான தருணங்களும், சவால்களும் நிறைந்திருக்கின்றன. அவ்வப்போது காமெடிகளும் அரங்கேறும்! 


செடிகளை வாங்கும் போதே ஒன்று இரண்டு பூக்களோடு அல்லது காய்களோடு வாங்குதல் நலம். ஸ்வீட் கடைக்காரரிடம் சாம்பிள் வாங்கி தின்று பார்த்துவிட்டு போனி செய்வதுபோல! 


நர்சரியில் சொல்லுவதை மட்டுமே நம்பி வாங்குதல் என்பது வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரியாத நிலைதான்! வெளியே வந்தால் தான் தெரியும்! 




நீங்கள் தேடித் தேடி வாங்கிய வெள்ளை நிற மந்தாரை பூ  சிவப்பு நிறத்தில் பூத்து  ஏமாற்றம் தரலாம்! 


ஆரஞ்சு செடி என்று ஆசையாய் வாங்கியது நாரத்தங்காய் காய்க்கலாம்! ஆஹா.. நான் சிறுவயதில் சாப்பிட்ட கொடுக்காப்புளி என்று நர்சரியில் கொடுத்த செடியை, போட்டோ பிடித்து தேடினால், இல்லை இல்லை, இது விளாம்பழம்! என்று google சொல்லலாம்.


கடும் வெயில் தாளாமல் இறந்து போன செடிகள், அதிக மழையினால் அழுகிப்போன  செடிகள், காரணமே புரியாமல் காய்ந்து போன செடிகள் என போனவை பட்டியல் நீண்டதாயிருக்கலாம். 


இத்தனை யசகு பிசகுக்குப்  பிறகும் நீங்கள் மீண்டும் செடிகளை வாங்கத்தான் செய்வீர்கள். ஒரு முறை ருசி கண்டுவிட்டால், இந்தச் செடி கிறுக்கு தலைக்கேறிவிடும்! உங்கள் வீட்டு விருந்தாளிகளுக்கு நீங்கள் பெருமையாய்ப் பறைசாற்றும் விடயங்களில் உங்கள் செடிகளும் இடம் பிடித்துவிடும்! 


பூவாகி காயாகி கனிந்த மரங்கள் இருக்க, பல வருடமாய் பூவாமல் காய்க்காமல் கிடக்கும் மரங்களும் உங்கள் தோட்டத்திலிருக்கும். உங்கள் பொறுமையின் எல்லையை சோதிக்கும் அவற்றை, பிடுங்கிப் போடவும் மனம் இல்லாது, சரி.. இருக்கட்டும்! என்று போட்டு வைத்தது, திடீரென ஒரு நாள் சிறிய மொட்டு வைத்தால் அதைக் கண்ட மாத்திரத்தில் குபீரென மனதிற்குள் பொங்கி வரும் ஆனந்தத்தை அனுபவித்ததுண்டா?


அப்படித்தான் மூன்று வருடங்களாக இலைகளாக மட்டுமே இருந்த எங்கள் கிரீன் ஆப்பிள் செடி மொட்டு வைத்ததும் நமக்கு தலைகால் புரியவில்லை. கிரீன் ஆப்பிள் மொட்டு  வைத்து விட்டது! என ஒளியும் ஒலியுமாய் whatsapp ஸ்டேட்டஸில் போட்டு தமுக்கு  அடித்தாயிற்று.


நம்மூர் வெயிலுக்கு ஆப்பிள் செடி எல்லாம் வளருமா? எதற்கு இந்த வீண் வேலை? எனக் கேட்பவர்களுக்கு, 'வளரும்' என்பது தான் பதில். HRMN99, அன்னா ஆப்பிள் போன்ற ரகங்களை வெயிலுக்கு ஏற்றவையாக உற்பத்தி செய்து வைத்திருக்கிறார்கள். 


தினமும் காலை எழுந்து கண்விழித்ததும் ஓடி சென்று கிரீன் ஆப்பிள் மொட்டுக்களைப் பார்ப்பதே வேலையாய் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல மொட்டுக்கள் நீல நிறத்தில் வித்தியாசமாய் காட்சி அளிக்க, கொஞ்சம் சந்தேகம் துளிர்விட துவங்கியது. 


வியப்பும் ஆச்சரியமும் மேலோங்க google அண்ணாச்சியை கேட்டதில் இது காயாம்பூ! என்று ஒரே போடாக போட்டு விட்டார்! அதிர்ச்சி! பெரிய ஏமாற்றம்! செம மொக்கை வாங்கிக் கொண்டதில் மூடவுட் ஆகிப் போனது.


செடி வாங்கிய நர்சரியைத் தொடர்பு கொண்டு கேட்டதில் அப்படி ஒரு பூ அவர்கள் அறிந்திருக்கவேயில்லை! 


என்ன செய்வது? மனதை தேற்றிக்கொண்டு, சரி.. ஆனதாகிவிட்டது,  குவியல் குவியலாக பூக்கள் இத்தனை அழகாக இருக்கிறதே, அது என்ன காயம்பூ? என்று தேட துவங்கியதில், google கொட்டிய தகவல்களுடன், நாஞ்சில்நாடன் அவர்கள்  எழுதிய காயாம் பூ கட்டுரையும் கண்ணில் பட்டது. காயாம்பூ பற்றிய தகவல்களை அவர் பகிர்ந்து இருக்கிறார். 




காய்க்காத மரத்தின் பூ என்பதால் காயாம் பூ என பெயர் வந்திருக்கலாம். காயாம் பூ மேனியனே ! என்று நாலாயிரத் திவ்யப் பிரபந்த பாடல்கள் திருமாலை வர்ணிக்கின்றன. காயாம் பூ வண்ணனே நில்லும்! என்ற ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் கீர்த்தனையும் பாடி இருக்கிறார்.


சங்க இலக்கிய பாடல்களிலும் காயாம்பூ குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவர்ந்து இழுக்கும் வர்ணத்தில், மயில் கூட்டம் போல, வருடத்தில் ஓரிரு முறை மட்டுமே பூக்கும் இந்தப் பூக்களை, அங்கே இருக்கிறதாம் இங்கே இருக்கிறதாம் என்று சிலர் தேடுவதும் புரிந்தது.


மற்றொரு சந்தர்ப்பத்தில் கிரீன் ஆப்பிள் செடி வாங்கி வைக்கலாம். இப்போது கண் முன்னே கொத்துக் கொத்தாய் பூத்துக் கிடக்கும் காயாம் பூக்களை பார்க்க கண் கோடி வேண்டுமே!