- புரட்சிப் பாவை தே.ஜெனிட்டா ரீனா
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் அழகான, மிகப்பெரிய கிராமம் அனுமந்தராயன் கோட்டை. இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு கிழக்கில் குடகனாறும், மேற்கில் புனித லொயோலா மேல்நிலைப் பள்ளியும், வடக்கில் தாமரைக்குளமும், தெற்கில் மேலப்பட்டி சுனைக்குளமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
சமய நல்லிணக்கம்
இங்குப் புனித லொயோலா இஞ்ஞாசியார் பேராலயம் உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். ஆலயத்திற்கு எதிரே உள்ள தெருவின் இறுதியில் காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு இந்துக்களும் வசிக்கிறார்கள். எவ்விதச் சண்டை சச்சரவும் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் நடத்தும் திருவிழாக்களில் இந்துப் பெரியதனக்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும், இந்துக்கள் நடத்தும் திருவிழாக்களில் கிறிஸ்தவ ஊர்ப் பெரியவர்களுக்கு முன்னுரிமை தருவதும் எங்கள் ஊரின் தனிச்சிறப்பு.
கல்விப் பணி

எங்கள் ஊரில் பெண் குழந்தைகளுக்கு சிறு மலர் தொடக்கப்பள்ளி அமலவை அருட்சகோதரிகளாலும், ஆண் குழந்தைகளுக்கு திரு இருதய ஆண்டவர் தொடக்கப்பள்ளி பங்குத்தந்தையர்களாலும் நடத்தப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை புனித லொயோலா மேல்நிலைப் பள்ளி இருபாலர் பள்ளியாகச் செயல்படுகிறது.
இதில் எங்கள் ஊர் தவிர, அருகில் உள்ள 10 முதல் 15 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் வந்து படிக்கிறார்கள். நானும் இங்குதான் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்தேன்.
திருவிழா கொண்டாட்டம்
புனித இஞ்ஞாசியார் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 30, 31 தேதிகளில் கோலாகலமாக நடைபெறும். இதில் எங்கள் பங்கைச் சார்ந்த அனைத்து ஊர் மக்களும், உறவினர்களும் கலந்து கொள்வார்கள். பக்கத்து ஊர் மக்கள், "எங்கள் ஊர் திருவிழாவிற்குச் செலவு செய்கிறோமோ இல்லையோ, உங்கள் ஊர் திருவிழாவை நாங்கள் முன்னின்று கொண்டாடுவோம்" என்று சொல்லுமளவிற்கு இது புகழ்பெற்றது.
மக்கள் அனைவரும் அந்த ஆண்டில் தங்களுக்குக் கிடைத்த நன்மைகளுக்கு நன்றியாக, பங்குத்தந்தையோடு இணைந்து விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
விவசாயமும் வாழ்வாதாரமும்
எங்கள் ஊரின் பெரிய குளமான தாமரைக்குளத்தின் முன்புறம் வெள்ளரிக்காய்க் கொடிகளை நட்டு வளர்ப்பார்கள். அங்குச் சென்று பிஞ்சும் காயுமாக வெள்ளரிக்காய்களைப் பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கும்.
எங்கள் ஊரில் பூக்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. அதிகாலையிலேயே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பூப்பறிக்கச் செல்வார்கள். இது குழந்தைகளுக்கு ஒரு சிறுசேமிப்புத் திட்டமாகவே அமைகிறது. ஒரு படி பூவிற்கு அப்போதைய காலத்திற்கேற்ப ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் எனத் தொடங்கி, இன்று ஐந்து முதல் பத்து ரூபாய் வரை கிடைக்கிறது.
மல்லிகை, முல்லைப் பூக்களைப் பறித்துச் சேமிக்கும் பணத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றுக் கொள்வார்கள். பள்ளி முடிந்து வந்ததும் கனகாம்பரப் பூக்களைக் காம்பிலிருந்து பிரிக்கும் வேலைக்குச் செல்வார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மாணவர்கள் தங்களுக்குத் தேவையானப் பொருட்களைத் தாங்களே வாங்கிக் கொள்கிறார்கள்.
இயற்கை வளமும் வசதிகளும்
எங்கள் ஊருக்கு அருகிலேயே புதுக்குளம், மாட்டுக்காரன் குளம், மேலப்பட்டி சுனை போன்ற நீர்நிலைகள் உள்ளன. மழைக்காலங்களில் குடகனாற்றுப் பாலம் ஒரு சுற்றுலாத் தலம் போலவே காட்சியளிக்கும். பல ஊர்களில் இருந்து மக்கள் இங்கு வந்து நீராடி மகிழ்வார்கள்.
ஊரில் எலிசா மருத்துவமனையும், அரசு ஆரம்பச் சுகாதார நிலையமும் உள்ளன. அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு 'குட்டி நகரமாக' அனுமந்தராயன் கோட்டை விளங்குகிறது. கொடைக்கானலுக்குச் செல்லும் பேருந்துகள் எங்கள் ஊர் வழியாகச் செல்வது ஒரு கூடுதல் சிறப்பு.
பொழுதுபோக்கும் திறன்களும்
சிறுவயதில் ஆலய வளாகத்தில் வாடகை சைக்கிள் எடுத்து நண்பர்களிடம் ஓட்டக் கற்றுக்கொண்டது, மழைக் காலங்களில் ஆற்றில் நீச்சல் பழகியது என ஊரின் நினைவுகள் பசுமையானவை.
பெரும்பாலோனோர் தோட்டம் வைத்திருப்பதால் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், நிலக்கடலை, திராட்சை போன்றவை இங்கேயே விளைகின்றன. வியாழக்கிழமை தோறும் நடைபெறும் காய்கறிச் சந்தை ஊர் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
இறைப்பணி
ஆன்மிகத்திலும் எங்கள் ஊர் சிறந்து விளங்குகிறது. எங்கள் ஊரிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பங்குத்தந்தையர்களும், 10-க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளும் இறைப்பணிக்குச் சென்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)
மகாவீரர்.. அன்பின் வழியை காட்டினார்.. உயிர் அனைத்தும் ஒன்று என்றார்!
மொத்த குடும்பமும் விஜய்க்கு கடனாளிகளா?.. புஸ்ஸி ஆனந்த் பெயரும் இருக்கு.. இதைக் கவனிச்சீங்களா?
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை: செல்வப்பெருந்தகை
ஏன் இப்படி?
ADR Report: புதுச்சேரியில் 23% வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்... 41% பேர் கோடீஸ்வரர்கள்!
Case against Vijay: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்?.. தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி
Gold Rate: தொடர் உயர்வில் இருந்த தங்கம் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!
CM MK Stalin campaign: திருவாரூரில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
TVK Campaign: முதலில் நாளிலேயே 3 இடங்களில் பிரச்சாரம் ரத்து... என்ன செய்ய போகிறார் விஜய்?
{{comments.comment}}