சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

Su.tha Arivalagan
Jul 24, 2026,10:23 AM IST

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி 26 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசுடன் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனது போராட்டத்தை முறைப்படி நிறைவு செய்தார்.


குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோவும் உடனிருந்தார்.


நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்திய அரசு அளித்த முக்கிய வாக்குறுதிகளைத் தொடர்ந்தே சோனம் வாங்சுக் போராட்டத்தைக் கைவிட்டார்:


டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அமைப்பினர் மீது எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.


வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வித்துறையின் குறைபாடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.




வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க டெல்லியில் தனி அதிவிரைவு நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. போராட்டங்களின் எதிரொலியாக கல்வித்துறைச் செயலாளர் வினீத் ஜோஷி மாற்றப்பட்டு புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தனது போராட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்து சோனம் வாங்சுக் கூறுகையில், மத்திய அமைச்சர்கள் மற்றும் லடாக் தலைவர்கள் முன்னிலையில் 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்துள்ளேன். நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், அரசு அளித்த உறுதிமொழிகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். அதேசமயம் தனது தரப்பில் மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து தனியாக வீடியோ பதிவு போடுவதாக கூறியுள்ளார் வாங்சுக்.


கடந்த ஜூன் 28 அன்று நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கல்வி அமைப்பில் முறையான விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.


உடல்நிலை நலிவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அமைதி வழியில் சுமுக தீர்வு காணும் நோக்கில் மத்திய அரசு அமைச்சர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவைக் கொண்டுவந்தது. அமைச்சர்கள் நட்டா, ஜிதேதந்திர சிங் ஆகியோருடன் பல மணி நேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். அந்தப் பேச்சுக்குப் பிறகுதான் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் சந்தித்து அரசின் முடிவுகளைத் தெரிவித்தனர். அதன் பிறகே வாங்சுக் தனது போராட்டத்தை நிறைவு செய்துள்ளார்.