அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!

Su.tha Arivalagan
Sep 22, 2025,06:20 PM IST

சென்னை : தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. வழக்கமாக தேர்தலுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பிரச்சாரம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அரசியல் கட்சிகள் செய்வது வழக்கம். ஆனால் 2026 தேர்தல் மிக மிக முக்கியமானதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே இது வாழ்வா? சாவா? என நிர்ணயிக்க போகும் தேர்தலாக கருதப்படுவதால் இந்த முறை 6 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க துவங்கி உள்ளது.


ஏற்கனவே ஜூன் மாதமே தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை முதல் ஆளாக துவக்கி, ஏறக்குறைய 153 தொகுதிகளை கவர் செய்து, பிரச்சாரம் முடித்து விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அவரை தொடர்ந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வருவாய் மாவட்டங்களுக்கு மட்டும் சென்று பிரச்சாரம் செய்யும் பயணத்தை செப்டம்பர் 13ம் தேதி முதல் துவக்கி உள்ளார் தவெக தலைவர் விஜய். மற்றொரு புறம் ஆளுங்கட்சியான திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். விரைவில் தானும் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் தெரிவித்துள்ளார்.




திமுக கூட்டணியில் அதிகமான கட்சிகள் இருக்கிறார்கள். கூட்டணிகளின் தயவு இல்லாமல் தனிப் பெருமான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 120 முதல் 125 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு. இதில் 119 இடங்களிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும். பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களை விட கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஒரு சீட் குறைந்தாலும் திமுக.,வின் வெற்றி வீணாகி விடும். திமுக.,விற்கு மட்டுமல்ல அதிமுக.,விற்கும் இதே நெருக்கடியான நிலை தான். 


மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 125 தொகுதிகளில் திமுக, அதிமுக போட்டியிட்டால் மீதமுள்ள 109 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஏற்கனவே 112 இடங்களில் போட்டியிட உள்ளதாக கூறி வருகிறது. குறைந்தபட்சம் 50 தொகுதிகளையாவது திமுக தலைமையிடம் கேட்டு பெற வேண்டும் என்ற முடிவில் உள்ளது. மற்ற கட்சிகளும் கூடுதல் சீட்களை கேட்க வாய்ப்புள்ளது. இதனால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஏற்கனவே குழப்பம் ஏற்பட துவங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தேமுதிக, திமுக.,விடம் 15 சீட்கள் கேட்டுள்ளதாகவும், அதற்கு திமுக தலைமை மறுத்து விட்டதாகவும், 5 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்றும் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.




எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக மட்டுமே உள்ளது. பாஜக.,விற்கு கடந்த முறை 20 சீட்களை ஒதுக்கிய அதிமுக தலைமை, இந்த முறை 25 சீட்கள் தர ஒப்புக் கொண்டுள்ளதாம். அதுவும் பாஜக உறுதியாக வெற்றி பெற வாய்ப்புள்ள 10 சீட்களுடன் சேர்த்து 25 சீட்களை தருவதாக சொல்லி உள்ளதாம். இதற்கு பாஜக தலைமையும் ஒப்புக் கொண்டுள்ளதாம். இந்த தொகுதி பங்கீடு டீலிங் தற்போது போட்டப்பட்டது கிடையாதாம். அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கும் போதே டீலிங் பேசி முடிக்கப்பட்டு விட்டதாம். அதனால் இந்த முறை கொங்கு மண்டலத்தில் வானதி சீனிவாசனுக்கு சீட் கன்ஃபார்ம் என கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. தற்போது 25 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேட ஆரம்பித்து விட்டது பாஜக என்று சொல்கிறார்கள்.


மறுபக்கம், திமுக.,விடம் கேட்ட அதே 15 சீட்களை அதிமுக.,விடமும் தேமுதிக கேட்டுள்ளதாம். ஆனால் 15 தர முடியாது, வேண்டுமானால் 10 சீட் தருகிறோம். மகனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி தருகிறோம் என அதிமுக தலைமை கூறி உள்ளதாம். திமுக தரும் 5 சீட்களை ஏற்பதை விட, அதிமுக தரும் 10 சீட்டுக்கு ஒப்புக் கொண்டு, அவர்களின் கூட்டணியில் தொடரும் முடிவுக்கு ஏறக்குறைய தேமுதிக வந்து விட்டதாம். காரணம்  ராஜ்யசபா சீட் தருவதாக இந்த முறை உத்தரவாதமாக அதிமுக கூறி வருவதால்.




அதே போல், கட்சி விவகாரம் தொடர்பாக பாஜக தலைமையிடம் முறையிடுவதற்காக விரைவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டில்லி செல்ல உள்ளாராம். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இரண்டு தரப்பையும் அழைத்து பேசி, ஒன்று சேர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். சமரசத்திற்கு அன்புமணி ஒப்புக் கொள்ள மறுக்கும் பட்சத்தில் கடுமையான நெருக்கடிகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக.,விற்கு 20 சீட்களை வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளை மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கவும், அதிகமான இடங்களில் அதிமுக.,வே போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


இதில் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், பாரி வேந்தர் போன்றோர் பாஜக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


அதிமுக கூட்டணிக்கு தவெக வரும் பட்சத்தில் விஜய்யின் செல்வாக்கு, கள நிலவரம் ஆகியவற்றை ஆராய்ந்து தவெக.,விற்கு 30 முதல் 50 சீட்டுகளை தர அதிமுக முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படியும் விஜய் அதிமுக பக்கம் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தான் அதிமுக இடங்களை இதுவரை யாருக்கு என முடிவு செய்யாமல் அதிமுக நிறுத்தி வைத்துள்ளதாம்.