கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
- தெ.நாராயண லெட்சுமி, B.E
சுர்ருன்னு நாக்குல பட்டு ஜம்முன்னுக்கு தொண்டைக்குள்ள இறங்குற மாதிரி ஒரு டிஷ் சாப்பிடணும்னு ஆசையா இருக்கா.. அப்ப அதுக்கு இந்த இறால் தொக்குதான் சரிப்பட்டு வரும்.
சும்மா சுடச்சுட கல் தோசைய ஊத்தி, அதுக்கு மேல இந்த இறால் தொக்கை அள்ளி வச்சு சாப்பிட்டா.. அம்புட்டு ருசியா இருக்கும்! இதுக்கு தக்காளி அரைச்சு ஊத்துறதை விட, வெங்காயம் தக்காளி வதங்குற வாசம் தான் தனி அழகு.
என்னென்ன வேணும்?
இறால் – கால் கிலோ (நல்லா நரம்பு எடுத்து சுத்தம் செஞ்சது)
வெங்காயம் – 1 பெரிய வெங்காயம் (பொடிப் பொடியா நறுக்கிக்கோங்க)
தக்காளி – 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன் (உங்க காரத்துக்கு ஏத்த மாதிரி)
தனியா தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தேங்காய் விழுது – 3 ஸ்பூன் (நல்லா நைசா அரைச்சது)
தாளிக்க: நல்லெண்ணெய், கருவேப்பிலை, மல்லித்தழை.
உப்பு – தேவையான அளவு.
முதல்ல ஊறப் போடுங்க.. முதல்ல இறாலை ஒரு பாத்திரத்துல போட்டு அதுல கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு, அரை ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நல்லா பிரட்டி ஒரு ஓரமா வச்சிருங்க. ஒரு பத்து நிமிஷம் அப்படியே ஊறட்டும்.
அடுத்து தாளிங்க.. அடுப்புல சட்டியை வச்சு ரெண்டு குழி கரண்டி நல்லெண்ணெய் ஊத்துங்க. எண்ணெய் காஞ்சதும் கருவேப்பிலை போட்டு, நறுக்கி வச்சிருக்க வெங்காயத்தை அள்ளிப் போடுங்க. வெங்காயம் நல்லா வதங்கி கண்ணாடி மாதிரி வரணும்.
இஞ்சிப் பூண்டை வதக்குங்க.. வெங்காயம் வதங்குனதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்குங்க. அந்தப் பச்சை வாசனை போயி ஒரு நல்ல மணம் வரும்.
தக்காளி மசாலா சேருங்க.. இப்போ தக்காளியைச் சேர்த்து நல்லா மசிய வதக்கணும். தக்காளி வதங்குனதும் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாவைப் போட்டு சும்மா ஒரு கிளர் கிளறுங்க. மசாலா கருகிடாம இருக்க லேசா தண்ணி தெளிச்சுக்கோங்க.
இறாலை வேக விடுங்க.. இப்போ நாம மசாலா தடவி வச்சிருக்க இறாலை உள்ள போடுங்க. இறால் வேகறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது, ஒரு 4 நிமிஷம் வெந்தாலே போதும். ரொம்ப நேரம் விட்டீங்கன்னா ரப்பர் மாதிரி ஆயிடும்.
தேங்காய் பால்/விழுது சேருங்க.. கடைசியா அரைச்சு வச்சிருக்க தேங்காய் விழுதை ஊத்தி, அடுப்பை சிம்ல வச்சு ஒரு 5 நிமிஷம் மூடி வைங்க. குழம்பு நல்லா சுண்டி, எண்ணெய் பிரிஞ்சு வரும் பாருங்க.. ஆஹாஹாஹா.. வாசமே ஊரைக் கூட்டும்!
கடைசியா கை நிறைய மல்லித்தழையைத் தூவி இறக்கிடுங்க.
காதைக் கொடுங்க.. ஒரு குட்டி டிப்ஸ்.. தோசைக்குத் தொட்டுக்கறதுனால ரொம்ப தண்ணியா இல்லாம, தொக்கு பதத்துக்கு இருந்தா சூப்பரா இருக்கும். இதுக்கு ஒரு சின்ன வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் நறுக்கிப் போட்டு தயிர் பச்சடி செஞ்சு வச்சீங்கன்னா.. தட்டுல தோசை காலி ஆகுறதே தெரியாது!
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)