திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

Su.tha Arivalagan
Dec 31, 2025,01:15 PM IST

- "பக்தித் தென்றல்" பாவை.பு


திருவாதிரையில் ஒரு வாய் களி என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து உண்பது நமது பாக்கியம். 


சரி இந்த களி உண்ணும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.


திருவெண்காட்டிற்க்கு அருகில் உள்ள திருநாங்கூரில் பிறந்த சேந்தனார், சிவப்பக்தியில் சிறந்து விளங்கினார். இவர் மிகப்பெரிய செல்வந்தரான பட்டினத்தாரிடம் தலைமை கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து வந்தார்.


அப்போது பட்டினத்தாரின் விருப்படி தனது சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு தானம் செய்ய வேண்டி பட்டினத்தாரின் கருவூலத்தை திறந்து அனைவரும் விரும்பிய வண்ணம் பெற செய்தார். இச்செயலை கண்ட பட்டினத்தாரின் உறவினர்கள் சோழ மன்னனிடம் புகார் செய்தார்கள். விபரம் அறியாத மன்னன் சேந்தனாரை சிறையில் அடைத்தார். பிறகு பட்டினத்தடிகள் அரசனை அனுகி நடந்ததை விளக்கி சொல்ல, மன்னனும் விபரம் அறிந்து சேந்தனாரை விடுதலை செய்தார்.  


பிறகு பட்டினத்தாரின் ஆணைக்கிணங்க சேந்தனார் சிதம்பரம் வந்து தங்கினார். இங்கு இவர் விறகு வெட்டி அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார். இவர் மிகச்சிறந்த சிவபக்தர் என்பதால் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகு தான் சேந்தனார் உணவு உண்பார். 




ஒரு நாள் அதிகனமான மழை பெய்ததால் விறகு எல்லாம் நனைந்து விட, விறகு விற்க போக முடியவில்லை. இதனால் சமைக்க பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் தவித்து நின்றார், பிறகு சேந்தனார் வெறும் அரிசியை வறுத்து களி செய்து கொண்டு யாராவது சிவனடியார் வருவார்களா என்று காத்துக்கொண்டு இருந்தார். இந்த அடை மழையில் யார் வருவார்கள் என்றேண்ணி மனம் நொந்து நின்றார் சேந்தனார்.


இந்நிலையில் தான் பக்தியில் சிறந்த சேந்தனாரிடம், சிவபெருமான் திருவிளையாடல் புரிந்து அவரது பக்தியை உலகறிய காட்ட எண்ணினார். நடராஜ பெருமான் சிவனடியார் வேடம் பூண்டு சேந்தனாரின் வீட்டிற்கு சொல்கிறார்.      ஒரு சிவனடியாரை பார்த்து மனம் மகிந்த சேந்தனார் தான் செய்து வைத்த களியை சிவனடியாராக வந்த சிப்பெருமானுக்கு படைத்தார். 


சிவனடியார் களியை மிகவிருப்பமுடன் சாப்பிட்டதோடு, மிச்சமிருந்த கனியையும் தனது அடுத்த வேலைக்கு வாங்கி சென்றார். அன்று இரவே சிதம்பரத்தில் உள்ள அரசனின் கனவில் தோன்றிய எம்பிரான், தான் சேந்தனாரின் வீட்டிற்கு களி சாப்பிட சென்றிருந்ததாக அறிவித்தார். அன்று, வழக்கம் போல தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் சன்னதியை திறந்த போது, பெருமானை சுற்றிலும் களி சிதறி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், அரசனிடம் இதைப்பற்றி உடனே அறிவித்தார்கள். அரசனும் தனக்கு வந்த கனவை நினைத்துப் பார்த்தார். 


கனவில் வந்து இறைவன் சொன்னது உண்மை  என்று உணர்ந்த அவர், உடனடியாக சேந்தனாரை கண்டுபிடிக்க அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். அன்று சிதம்பரம் தேர் திருவிழா என்பதால் சேந்தனாரோ அங்கு வந்திருந்தார்.      எம்பிரான் நடராஜரை தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட பலரும் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். ஆனால் மழை காரணமாக சேற்றில் தேர் அழுந்தி சிறிதும் அசையாமல் நின்றது. இதனால் மன்னரும் மக்களும் மனம் வருந்தி னார்கள். அப்போது அசரீரியாக சேந்தா நீ பல்லாண்டு பாடு என்ற குரல் கேட்டது. 


சேந்தனாரோ ஒன்றுமே அறியாத நான் எப்படி பல்லாண்டு பாடுவேன் என்று எம்பிரானை வணங்கி தொழுது நின்றார். எம்பிரானோ யாம் உனக்கு அருள் புரிவோம் என்று கூறினார். அதன்படி சேந்தனாரும் இறைவன் அருளால் மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து, பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்தி பாடினார். உடனே தேர் நகர்ந்தது. இதனை கண்ட அரசனும் சிவனடியார்களும் சேந்தனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். 


அரசர் தாம் கண்ட கனவையும் எம்பிரான் நடராஜர் சன்னதியில் நடந்தவற்றையும் தெரிவித்தார். எளியவரான சேந்தனார் வீட்டிற்கு களியுண்ண நடராஜர் பெருமானே சென்றார் என்றதை அறிந்து மனமுருகினார். 

அன்றைய தினம் மார்கழி திருவாதிரை நாள் என்பதால், அதனை நினைவூட்டும் வகையிலேயே இன்றைக்கும் மார்கழி திருவாதிரை நாளில் தில்லை நடராஜர் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. 


இதற்கு பிறகு சேந்தனார் திருக்கடையூர்க்கு அருகில் உள்ள திருவிடைக்கழி எனும் ஊரில் உள்ள முருகன் கோவிலில் வாழ்ந்து வந்தார். அந்த தலத்திலேயே மடத்தை அமைத்தார். இவரின் பெருமைகளை அறிந்த மன்னர் அவருக்கு நிலம் அளித்து அனேக உதவிகளை செய்தார். அந்தப்பகுதி தற்போது சேந்தமங்கலம் என்றழைக்கப்படுகிறது.


வேதம் வளர்க்க அந்தணர்களுக்கு மன்னர்கள் நிலம் வழங்கினார்கள். அதற்கு சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. சேந்தனாருக்கு கொடுத்ததால் அது சேந்தமங்கலம் ஆனது. 


இவரது திருப்பல்லாண்டு பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாவது திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. திருப்பல்லாண்டு என்பது இறைவனையே வாழ்த்தும் ஒரு பிரபந்தம் வகையை சார்ந்தது. சேந்தனார் எழுதிய திருப்பல்லாண்டு மொத்தமும் 13 பாடல்கள் மட்டுமே. சிதம்பரம் தலத்தை புகழ்ந்து பாடுவதாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளில் இடம் பெற்ற மிகக் குறைந்த பாடல்களை கொண்ட தொகுப்பு இது மட்டுமே.


எண்ணிக்கை மட்டும் தான் குறைவே தவிர எண்ணற்ற அர்த்தங்களை கொண்டு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சிவ தலங்களில் கால பூஜை இடையில் தீபாராதனைக்கு முன்பாக தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறைகளை தொகுத்து பஞ்சபுராணம் என்னும் 5 பாசுரங்களை ஓதுவார்கள். 


அவை 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருவிசைபா  4. திருப்பல்லாண்டு 5. பெரியபுராணம். இவற்றில் தலா 1 பாசுரம் வீதம் 5 பாசுரங்கள் ஆகும்.  தில்லைக்கூத்தனை உள்ளம் உருகி சிவனடியார்களின் நலனுக்காக இறைவனுக்கே திருபல்லாண்டு கூறி பதிகம் பாடப்பட்டுள்ளது.


(பாவை.பு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)