வெந்தயக் களி
- பா. சுமதி மோகன்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் பாரம்பரியமுள்ள உணவு முறைகள் மறக்கப்பட்டு வருகிறது.
காலை உணவாக இட்லி, தோசை மட்டுமே சாப்பிட்டுப் பழக்கமானவர்களும் உண்டு. உண்மையில் இட்லி, தோசையும் அதிகம் கார்போஹைட்ரேட் உணவு தான். உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதவை. தவிர நார்ச்சத்துள்ள உணவு எடுத்துக் கொள்ளும் போது கேன்சர் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அந்த வகையில் இப்போது வெந்தயக்களி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
4 : 1 இது தான் அளவு. அதாவது ஒரு டம்ளர் புழுங்கல் அரிசிக்கு கால் டம்ளர் வெந்தயம் என்ற அளவில் அரிசியை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து ஊறவிடவேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழித்து அரிசி, வெந்தயத்தை நன்றாக அரைத்து தேவையான உப்பும், தண்ணீரும் சேர்த்து தோசை மாவை விடவும் தண்ணியாகக் கலக்கிக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் இந்தக் கலவையை ஊற்றி அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கிளறாது விட்டால் மாவு பாத்திரத்தின் அடியில் பிடித்துக்கொள்ளும். அதனால் கவனமாக கிளறிவிடவும்.
ஒரு சில நிமிடங்களில் மாவில் சேர்த்த தண்ணீர் எல்லாம் வற்றிப்போய் மாவு இறுகிப்போய் விட்டு இருக்கும். கையில் தண்ணீரை நனைத்து மாவில் தொட்டால் மாவு கையில் ஒட்டாது இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம். அதாவது அரிசி, வெந்தயக் கலவை வெந்து களி தயாராகி விட்டதென்று அர்த்தம். பிறகு ஒரு பிளேட்டை எடுத்து அதில் களியை வைத்து தண்ணீர் தொட்டு களியின் நடுவில் சிறு பள்ளம் போல் செய்து அதில் நல்லெண்ணெய் சிறிது விடவேண்டும்.
ஒரு ஓரத்தில் நாட்டுச்சக்கரை தேவையான அளவு வைத்துக்கொள்ள வேண்டும். களியை சிறிது எடுத்து அதை நல்லெண்ணெயில் விட்டு எடுத்து நாட்டுச்சக்கரை தொட்டு சாப்பிட்டால் அடடா சொர்க்கம் நம் கையில் தெரியும். உடலுக்கு மிகவும் வலுவானது இந்த வெந்தயக்களி. இதில் சேர்க்கப்படும் வெந்தயம் நார்ச்சத்து நிறைந்தது. உடல் சூட்டைக் குறைக்கவல்லது. சர்க்கரை நோய் வராது தடுக்கலாம். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணுக்கு சர்வரோக நிவாரணி இந்தக் களி.
நாட்டு சர்க்கரையும் உடலுக்கு நலம் தருபவை தான். நல்லெண்ணெய் உடலைக் குளிர்ச்சியாக்கும். வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற காலை உணவு இது. வாரம் ஒரு முறை இந்தக் களியை சிறியோர் முதல் பெரியோர் வரை உண்டு மகிழலாம். பிறகென்ன உடலுக்கு நன்மை தரும் வெந்தயக் களி செய்து அசத்துங்க!!!
படம் உதவி: Erode Ammachi Samayal/Youtube Channel
(பா.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)