Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?

Su.tha Arivalagan
Sep 13, 2025,05:14 PM IST

திருச்சி : விஜய் தனது முதல் அரசியல் பிரச்சார பயணத்தை இன்று திருச்சி மரக்கடை மார்க்கெட் பகுதியில் இருந்து துவக்கி உள்ளார். சுற்றுப் பயணத்தின் முதல் நாளிலேயே திருச்சியை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் கதிகலங்க வைத்துள்ளார். 


முதல் கூட்டத்தில் விஜய் பேசியது பலருக்கும் சரியாக கேட்கவில்லை. காரணம், மைக் பெரும் கோளாறு செய்து விட்டது. மைக் கோளாறால் சரியாக கேட்காததால் அவர் என்ன பேசினார்? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 


திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை மார்க்கெட் பகுதிக்கு சாதாரணமாக அரை மணி நேரத்திற்குள் வந்து விட முடியும். ஆனால் இன்று கூடிய கட்டுக்கடங்காத தொண்டர்கள், ரசிகர்கள் கூட்டம் காரணமாக மரக்கடை பகுதியை விஜய் அடைவதற்கு கிட்டதட்ட 5 மணி நேரம் ஆகி விட்டது. கிட்டத்தட்ட 7 மணி நேரமாக விஜய்யின் பேச்சை கேட்பதற்காக தொண்டர்கள் கடும் கூட்ட நெரிசல், வெயிலில் காத்திருந்தனர். 




கட்சி துவங்கிய பிறகு, இதுவரை 2 அரசியல் மாநாடு, ஒரு புத்தக வெளியீட்டு என மொத்தமாக மூன்று மேடைகளில் மட்டுமே விஜய் அரசியல் பேசி உள்ளார். இதுவரை பேசிய பேச்சுக்களில் இருந்து, விஜய்யின் இன்றைய பிரச்சார பேச்சு சற்று வித்தியாசமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். 


முழு நேர அரசியல் தலைவராக மாறிய பிறகு, முதல் முறையாக விஜய், மக்களின் பிரச்சனைகள் பற்றிய வாதங்களை முன் வைத்துள்ளார். விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாட்டில் திமுக, பாஜக அரசுகளை பொதுவாக மட்டுமே தாக்கி பேசினார். ஆனால் இன்று பிரச்சாரத்தில் பேசிய விஜய், திமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். அதோடு, இவர்களுக்கா உங்களின் ஓட்டு என மக்களிடமும் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் விஜய் பட்டியலிட்டு விட்டு சென்றிருந்தாலோ, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் செய்வோம் என இவர் ஒரு பட்டியல் வாசித்து, வாக்குறுதிகளை அள்ளி வீசி இருந்தாலும் அது வழக்கமான அரசியல்வாதிகளின் பேச்சாக நினைத்து கடந்து போய் விட முடியும்.


ஆனால் பெரும்பாலான சாமானிய மக்களின் மனதில் உள்ள கேள்வியை கேட்டதுடன், அரசு நல திட்டங்களை செய்து விட்டு, அதை ஓசி என கொச்சைப்படுத்துவதா என விஜய் கேட்ட கேள்வி தான், நம்முடைய மனதின் குரலாக நமக்காக பேசுகிறாரே என்ற கண்ணோட்டத்தில் மக்களை பார்க்க வைத்துள்ளது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கியதை கொச்சைப்படுத்தும் விதமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உள்ளிட்ட பலரே ஓசி என சொல்லி தரக்குறைவாக பேசியதாக பல இடங்களில் புகார்கள் எழுந்தது. இதை விஜய் இன்று சுட்டிக்காட்டி பேசினார். 


திருச்சி கிட்னி முறைகேடு விவகாரம், நீட் தேர்வு, மகளிருக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு என விஜய் பட்டியலிட்டு கூறியதும், மைக் வேலை செய்யவில்லை என்றாலும் போலீசார் அனுமதித்த 30 நிமிடத்திற்குள் தான் பேச வேண்டியதை நறுக்கு தெறித்தது போல் பேசி விட்டு சென்று விட்டார் விஜய். அரசியல் விமர்சனங்களை ஓரமாக வைத்து விட்டு, மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்த முதல் பிரச்சார பயணத்திலேயே பேச துவங்கி உள்ளதால், இனி விஜய் செல்லும் அடுத்தடுத்த மாவட்டங்களிலும் இது போன்ற அந்தந்த பகுதி பிரச்சனைகளை கையில் எடுத்து விஜய் பேசுவார் என்றாறே எதிர்பார்க்கப்படுகிறது.