Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

Su.tha Arivalagan
Jun 05, 2026,12:20 PM IST

சென்னை : அரசியல் இயக்கம் காணப் போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அவரது அரசியல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


அண்ணாமலை, பாஜக.,வில் இருந்து விலகுவதற்காக கடிதம் அளித்ததும், அந்த கடிதத்தை பாஜக கட்சி தலைமை ஏற்றுக் கொண்டதாகவும் அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நிபின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  அண்ணாமலை, பாஜக.,வில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்க போவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வந்தது தான். இப்போது அண்ணாமலை தனிக்கட்சி துவங்க போவதாக உறுதியாகி உள்ளது. இதனால் தனிக்கட்சி துவங்க போகும் அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்.. அவரை யாரை எதிர்த்து அரசியல் செய்வார் என்பது தான் தமிழக அரசியல் வட்டாரத்தில் இருக்கும் ஒரே கேள்வி.


தமிழக அரசியலை பொறுத்த வரை ஆதரவு அரசியல் என்பது எடுபடாது. எதிர்ப்பு அரசியல் செய்து வெற்றி பெற்றவர்கள் தான் அதிகம். திமுக.,வை எதிர்த்து எம்ஜிஆர்., தனிக்கட்சி துவங்கி, அரசியல் செய்து, வெற்றி பெற்றார். கலைஞர் கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்து தான் ஜெயலலிதாவும் வெற்றி பெற்றார். திமுக.,விற்கு எதிராக அதிமுக.,வும், அதிமுக.,விற்கு எதிராக திமுக.,வும் அரசியல் செய்து, தங்களை பலமான கட்சிகளாக வளர்த்துக் கொண்டுள்ளன.


அதே போல் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி துவக்கிய விஜய்யும், ஆளும் கட்சியாக இருந்த திமுக.,வை எதிர்ப்பது தான் தனது கொள்கை என கூறி அரசியல் செய்ததால், கட்சி துவங்கிய இரண்டு ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டு, முதல் தேர்தலிலேயே பிரம்மாண்ட வெற்றியை பெற்று, ஆட்சியையும் பிடித்துள்ளார்.




ஆனால் அண்ணாமலை, பாஜக.,வின் முகமாக மட்டுமே பார்க்கப்பட்டவர். அவர் அதிரடி போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், பாஜக.,வில் இணைந்த பிறகு முழுக்க முழுக்க பாஜக.,வின் கொள்கைகளில் ஊறியே இருந்தார். அதற்கு பலனாக தான் கட்சியில் இணைந்த மிக குறுகிய காலத்திலேயே மாநில தலைவர் பொறுப்பை பெற்றார். தேசிய அளவிலும் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவராக வலம் வர துவங்கினார். தமிழகத்தின் மாநில தலைவராக அண்ணாமலை இருந்த போது, தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர் தான் என சொல்லி, "Annamalai for CM" என்ற முழக்கங்கள் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய துவங்கினர். 


கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு அதிகம் இருந்த சமயத்தில் தான் அண்ணாமலை, கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவர் பாஜக.,வில் இருந்து விலகுவார் என பேச்சுக்கள் அடிபட்டது. அப்போது விலகி, தனிக்கட்சி துவங்கி இருந்தால், இன்று மக்கள் பல காலமாக பார்த்து அழுத்துப் போன திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தின் மிகப் பெரிய சக்தியாக அண்ணாமலை உருவெடுத்திருக்கலாம். ஆனால் அண்ணாமலை தனிக்கட்சி துவங்கும் முடிவை தாமதப்படுத்தியதால், அதற்குள் விஜய் வந்து, அந்த இடத்தை பிடித்து விட்டார். இளைஞர்கள் ஓட்டு, பெண்கள் ஓட்டு, திராவிட கட்சிகளுக்கு எதிரானவர்களின் ஓட்டு என 35 சதவீதம் ஓட்டுக்களை விஜய் தன்வசப்படுத்தி விட்டார். தன்னுடைய எதிர்ப்பு திமுக.,விற்கு எதிரானது மட்டும் தான் என தேர்தலுக்கு முன்பு மட்டுமின்றி, தேர்தலுக்கு பிறகும் அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.


இப்போது புதுக்கட்சி துவங்க போகும் அண்ணாமலையின் அரசியல் திமுக, அதிமுக, பாஜக இவர்களில் யாருக்கு எதிரானது? அல்லது விஜய்யின் தவெக.,விற்கு எதிரானதா? தவெக.,விற்கு எதிரானது என்றால் திமுக, அதிமுக, பாஜக.,வை அவர் எதிர்க்க மாட்டாரா? என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை இவர்கள் அனைவரையும் எதிர்த்து, தான் மட்டுமே தூய  அரசியலை வழங்க முடியும் என அண்ணாமலை கூறினால், பாஜக.,விற்கு எதிராக குறிப்பாக பிரதமர் மோடி மட்டும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக அண்ணாமலை பேசுவாரா? 


ஒருவேளை திமுக.,விற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டால் ஏற்கனவே விஜய் அதை செய்து, மக்களிடம் பெயர் வாங்கி விட்டதால் அண்ணாமலையின் அரசியல் எடுபடாமல் போகும். ஒருவேளை அதிமுக.,வை எதிர்த்து அரசியல் என்றால், 5 ஆண்டுகளாக ஆட்சியிலேயே இல்லாமல் தற்போதைய தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட கட்சியை எதிர்த்து செய்யும் அரசியல் எப்படி மக்களிடம் எடுபடும்?


மொத்தத்தில் அண்ணாமலை அரசியல் எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.