சென்னை: தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு விலகி விட்டார். அவரது விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் கூட்டணி வியூகங்கள் மற்றும் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
கட்சித் தலைமை அவரை சமாதானப்படுத்த முயன்ற போதிலும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அண்ணாமலை விரைவில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, பின்னர் அதனைத் தமிழகத்தில் ஒரு புதிய மாநிலக் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது இலக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கும். அதேசமயம், முக்கிய இலக்கு அடுத்த சட்டசபைத் தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜகவின் முகமாக அறியப்பட்ட கே. அண்ணாமலையின் பின்னணி மற்றும் அவரது அரசியல் பயணம் மிகவும் சுவாரசியமானது. கோயம்புத்தூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த அண்ணாமலை, பின்னர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற ஐஐஎம் (IIM) லக்னோவில் எம்பிஏ (MBA) பட்டம் பெற்றார்.
2011-ஆம் ஆண்டு கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானார். உடுப்பி, சிக்மகளூர் மற்றும் பெங்களூரு தெற்கு பகுதிகளில் எஸ்பி மற்றும் துணை கமிஷனராகப் பணியாற்றினார். அங்கு குற்றவாளிகளுக்கு எதிராக எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் சிங்கம் அண்ணாமலை என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளியில் இருந்து சீரமைக்கவும், மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்யவும் மே 2019-இல் தனது ஐபிஎஸ் பதவியைத் துறந்தார். ஆகஸ்ட் 2020-இல் முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் நோக்கில், ஜூலை 2021-இல் மிக இளம் வயதிலேயே (37 வயது) தமிழக பாஜக தலைவராகக் கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் அவர் நடத்திய என் மண் என் மக்கள் என்ற பிரம்மாண்ட நடைபயணம், அதுவரை தமிழகத்தில் பெரிய அளவில் காலூன்றாத பாஜகவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. திராவிட அரசியலுக்கு எதிராக அவர் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இவரது தீவிர பிரச்சாரத்தால், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் 11%-க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. (ஆனாலும் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்).
அண்ணாமலை தலைவராக இருந்த காலகட்டத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட கட்சியை பலப்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது. அதற்கு முன்பு இருந்ததை விட அண்ணாமலை காலத்தில் பாஜக மேலும் வலுவுடன் திகழ்ந்தது. ஒரு வேளை அண்ணாமலை தலைமையில் சட்டசபைத் தேர்தலை பாஜக சந்தித்திருந்தால் கூடுதலாக சில இடங்களில் பாஜக வென்றிருக்கவும் கூடும் என்பது அவரது ஆதரவாளர்களின் ஆதங்கமாகம்.
2026 சட்டமன்றத் தேர்தலின் போது, அண்ணாமலையின் எதிர்ப்பையும் மீறி டெல்லி தலைமை அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க முடிவு செய்தது. இதனால் அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு, அண்ணாமலை சாதாரண தொண்டனாகத் தொடர்ந்தார். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகத் தமிழகப் பெற்றோர்களின் குரலாக அவர் அண்மையில் வெளிப்படையாகப் பேசிய போதே, அவர் பாஜகவிலிருந்து விலகப் போகிறார் என்ற விவாதங்கள் எழுந்தன.
ஐபிஎஸ் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வந்த அண்ணாமலை, தற்போது தேசியக் கட்சியின் கட்டுப்பாடுகளையும் கடந்து, தனது தனித்துவமான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தயாராகிவிட்டார் என்பதை இந்த ராஜினாமா காட்டுகிறது.
அண்ணாமலையின் பயணம் எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மெய்மையையே திருமேனி வழிபடா நிற்கா.. சண்டிகேஸ்வர நாயனார்!
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
சின்னஞ் சிறிய சிட்டுக்குருவியே!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
Chettinadu Recipes: செட்டிநாட்டு அடுப்படி.. அமிர்தமான ஸ்வீட்.. நாவில் ஊறும் பால் பணியாரம்!
Be ready to live like an amphibian... தவளை மாதிரி வாழக் கத்துக்கோங்க!
If you are brave enough to say goodbye .. யோசிக்கவே யோசிக்காதீங்க!
If you Say goodbye bravely .. தயங்காமல் சொல்லிடுங்க!
உழைப்பின்றி உயர்வில்லை!
{{comments.comment}}