Chettinadu Recipes: செட்டிநாட்டு அடுப்படி.. அமிர்தமான ஸ்வீட்.. நாவில் ஊறும் பால் பணியாரம்!

Jul 22, 2026,01:40 PM IST

- மணிமா


செட்டிநாட்டின் அத்தனை ரெசிபிகளுக்கும் மகத்தான வரவேற்பு தந்து மகிழ்விக்கும் நல் உள்ளங்களுக்கு மணிமா......வின் நல் வணக்கங்கள்


பால் பணியாரம்  ருசிக்க ருசிக்க ரசித்து ரசித்து. செய்வோமா வாருங்கள் ...வாருங்கள். வீட்டில் உள்ள எளிதான பொருட்களை வைத்துக்கொண்டு அன்பையும் சேர்த்து சமைப்போம். சுவையான செட்டிநாட்டு பால் பணியாரம் தயார் ஆகிவிடும்.


தேவையான பொருட்கள்




பச்சரிசி - ஒரு கப்

வெள்ளை முழு உளுந்து - ஒரு கப்

அஸ்கா சீனி - ஒன்றரை கப்

முழு தேங்காய் - ஒன்று

உப்பு - ஒரு பின்ச் அளவு

ஏலக்காய் - ஐந்து

பொறிப்பதற்கு தேவையான எண்ணெய்


பச்சரிசி உளுந்து இரண்டும் சரிக்கு சரி ஒரே அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு நான் வெந்தயம் ஒரு பத்து எடுத்துள்ளேன். நிறத்திற்காக இது தேவையா என்றால் தேவையில்லை. இதை சேர்ப்பதற்காக தனியாக ருசி எதுவும் தருமா என்றால் தராது கூட சேர்த்து விட்டால் கசக்கும். வெந்தயம் இல்லாமலே செய்யலாம்.


அடுத்து அஸ்கா சீனிக்கு பதிலாக நாட்டு சர்க்கரையோ வெல்லமோ சேர்க்கலாமா என்றால் தாராளமாக சேர்க்கலாம். ஆனால் அது செட்டிநாட்டு பால் பணியாரம் ஆகாது. இந்த முறையில் செய்தால் மட்டுமே பால் பணியாரம் அருமையாக இருக்கும்


இப்பொழுது செய்முறை


அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து நான்கு முறை நன்கு கழுவி விட்டு 3 மணி நேரம் நன்கு ஊற விடவும்.

பின்பு ஊறியதை தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் சேர்க்கவும். ஒரு பின்ச் உப்பு உள்ளே சேர்த்து தண்ணீர் ஒரு கை அளவு தெளித்து நன்கு வெண்ணெய் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீரை அதிகம் சேர்த்து விட்டு விடாதீர்கள். நாம் உளுந்து வடைக்கு வழக்கம் போல் அரைப்பது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த மாவை புளிக்க வைக்க எல்லாம் வேண்டாம். உடனே பணியாரம் செய்யலாம்.


ஒரு முழு தேங்காயையும் உடைத்து துருவிக் கொண்டு மிக்ஸியில் இட்டு இரண்டு முறையாக கெட்டி பால் எடுத்துக் கொள்ளவும். அஸ்கா சீனியை மிக்ஸியில் இட்டு மாவாக்கிக் கொள்ளவும். இதனை தேங்காய் பாலுக்குள் சேர்க்கவும். ஏலக்காயை நன்கு தூள் செய்து விட்டு அந்த தூளையும் அதனுடன் சேர்க்கவும்.


ஒரு அடி கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு காய்ந்தவுடன் மிதமான தீயில் கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு ஒரு கை அளவு மாவு எடுத்து சிறு சிறு உருண்டைகளாக விரல்களால் கிள்ளி போடவும்.


கரண்டியால் இரண்டு முறை பிரட்டி விட்டு லேசாக சிவந்தவுடன் எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். அனைத்தையும் சுட்டு முடித்த பின் தேங்காய் பாலுக்குள் விடவும். அப்படியே அழகாக மிதக்கும் பாலை இழுத்துக் கொள்ளும் ஐந்தே நிமிடத்தில் அது ஊறிய பின் சாப்பிடுவதற்கு ரெடி.




நம் வீட்டிற்கு விருந்தினர் 10 பேர் வந்திருக்கிறார்கள் என்றால் பத்து கப்புகளில் பத்து பத்தாக பணியாரங்களை விட்டு தேங்காய் பாலை அதற்குள் ஊற்றி ஸ்பூன் போட்டும் பரிமாறலாம். ருசியான சுவையான பால் பணியாரம் தயார்


பார்க்க கண்ணை இழுக்கும்

சுவைக்க அகம் நினைக்கும்

ருசிக்க நா இனிக்கும்


மொத்தத்தில் மனம் லயிக்கும்.


மீண்டும் அடுத்த செட்டிநாட்டின் அருமையான ரெசிபியுடன் உங்களை எல்லாம் சந்திக்கும் வரை என்றென்றும் அன்புடன் உங்கள்.. மணிமா.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்